பாடல் #1317: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)
தோற்போர்வை நீகத் துதித்தடைவிற் பூசித்துப்
பாற்போ னகமந் திரத்தாற் பயின்றேத்தி
நாற்பாய னாரதா யாசுவா காவென்றுச்
சீற்பாகச் சேடத்தை மாற்றிப் பின்சீவியே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தொறபொரவை நீகத துதிததடைவிற பூசிததுப
பாறபொ னகமந திரததாற பயினறெததி
நாறபாய னொதா யாசுவா காவெனறுச
சீறபாகச செடததை மாறறிப பினசீவியெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தோல் போர்வை நீகத் துதித்து அடைவு இல் பூசித்துப்
பால் போன அக மந்திரத்தால் பயின்று ஏத்தி
நாற்பு ஆயன் ஆரதாயா சுவாகா என்றுச்
சீற்பு ஆகச் சேடத்தை மாற்றிப் பின் சீவியே.
பதப்பொருள்:
தோல் (தோலால்) போர்வை (போர்வை போல் முடியிருக்கும் உடம்பின் உணர்ச்சி) நீகத் (இல்லாமல்) துதித்து (போற்றி வணங்கி) அடைவு (தமது உள்ளத்திற்குள் இறைவியின் உருவத்தைப் பதிய வைத்து) இல் (உள்ளே வீற்றிருக்கும் இறைவிக்கு) பூசித்துப் (பூஜைகள் செய்து)
பால் (நான் எனும் பாலுணர்வு) போன (போன பின்பு) அக (உள்ளுக்குள் இருந்து எழுந்து வரும்) மந்திரத்தால் (மந்திரத்தை) பயின்று (செபித்து) ஏத்தி (போற்றி வணங்கி)
நாற்பு (நான்கு திசைகளையும்) ஆயன் (காத்தருள்பவளே) ஆரதாயா (அனைத்து உயிர்களாலும் ஆராதிக்கப் படுபவளே) சுவாகா (உனக்கு இந்த மந்திரத்தை அர்ப்பணிக்கின்றேன்) என்றுச் (என்று நினைத்து)
சீற்பு (சிறப்பு) ஆகச் (ஆகும் படி) சேடத்தை (உருவமாக இருக்கின்றவளை) மாற்றிப் (மாற்றி அருவமாக) பின் (இறைவியை பாவித்த பிறகு) சீவியே (அவளையே போற்றி வணங்குங்கள்).
விளக்கம்:
பாடல் #1316 இல் உள்ளபடி இறைவனோடு சேர்ந்து இருக்கும் இறைவியானவள் சாதகரின் முன்பு தோன்றிய பின் போர்வை தோலால் ஆகிய போர்வை போல் முடியிருக்கும் உடம்பின் உணர்ச்சி (உடல் உணர்ச்சி அற்ற நிலை) போகும் வரை போற்றி வணங்க வேண்டும். அதன் பிறகு தமது உள்ளத்திற்குள் இறைவியின் உருவத்தைப் பதிய வைத்து உள்ளே வீற்றிருக்கும் இறைவிக்கு மானசீகமாக பூஜைகள் செய்ய வேண்டும். பூஜையின் பலனாக நான் எனும் பாலுணர்வு போன பின்பு உள்ளுக்குள் இருந்து எழுந்து வரும் மந்திரத்தை செபித்து போற்றி வணங்க வேண்டும். பின்பு மனதிற்குள் நான்கு திசைகளையும் காத்தருள்பவளே அனைத்து உயிர்களாலும் ஆராதிக்கப் படுபவளே உனக்கு இந்த மந்திரத்தை அர்ப்பணிக்கின்றேன் என்று நினைத்து உருவமாக இருக்கின்றவளை மாற்றி சிறப்பான அருவமாக இறைவியை பாவித்துக் கொண்டு அவளையே போற்றி வணங்குங்கள்.