பாடல் #254

பாடல் #254: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து
இழிக்கஅன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே.

விளக்கம்:

மும்மலங்களாகிய அழுக்குகளை ஓட்டிவிடும் உண்மை ஞானத்தை அறிந்து அந்த அறிவால் உள்ளத்தில் இறைவனை நிரப்பமாட்டீர்கள். கல்வியும் செல்வமும் நிறைந்து இருந்த நாட்களிலேயே தருமங்கள் செய்யாமல் விட்டுவிட்டீர்கள். தினமும் எழுந்து கண் விழித்திருப்பதனால் என்ன பயன்? ஒரு நாள் கண் மூடிய பிறகு சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தீ வைத்து உடல் முழுவதும் தீயின் வெப்பம் பரந்து சுட்டெரிக்கும் நேரத்தில் என்ன செய்யப் போகின்றீர்கள்? வாழ்க்கை முழுவதும் தருமம் செய்யும் பரந்த மனது இல்லாமல் ஏழை மனதாகவே வாழ்ந்துவிட்டீர்கள்.

பாடல் #255

பாடல் #255: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

தன்னை அறியாது தான்நல்லன் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மையுடன் நல்ல தவஞ்செய்யும் நீரே.

விளக்கம்:

சர்வ வல்லமையுடன் உயிரை உயிரிலிருந்து பிரிக்கும் எமன் வரும் பொழுது தன்னை யாரும் அறியாமல் எடுக்க வந்த உயிர் நன்மை செய்ததா தீமை செய்ததா என்று எண்ணாமல் அந்த உயிர் உலகில் இல்லாவிட்டால் உயிரைச் சார்ந்தவர்கள் என்ன கதியாவார்கள் என்று பார்க்காமல் அது இளையவரா முதியவரா என்று ஆராயாமல் உயிரை எடுத்துச் சென்று விடுவார். சர்வ வல்லமையான எமன் வருவதற்கு முன்பு உயிரை உடலில் நிலைபெறச் செய்து இறைவனை அடையும் நல்ல தருமங்கள் நிறைந்த தவங்களை நீங்கள் செய்துவிடுங்கள்.

பாடல் #256

பாடல் #256: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி யாரே.

விளக்கம்:

உலகப் பற்றுக்களை விட்ட ஞானியர்கள் செல்லும் வழியில் அவர்களின் சுற்றத்தார் உறவினர் என்று யாரும் இருப்பதில்லை. அறம் அறிந்த ஞானிகளுக்கு அறத்தின் அளவுகள் தெரியாது. அறம் செய்யாமல் வாழ்ந்தவன் இறந்து செல்லும் வழியில் எந்தவொரு இன்பமும் அவனுக்கு கிடைப்பதில்லை. அறத்தை மறந்து வாழ்ந்தவன் இறந்து செல்லும் வழியில் துணையாக சிவபெருமான் வரமாட்டான்.

குறிப்பு: உலகப் பற்றுக்களை விட்டு அறத்தை அறிந்த ஞானியர்களுக்கே அறத்தின் அளவுகள் தெரியாது என்றால் அறம் என்பது எவ்வளவு பெரியது? அந்த அறத்தை அறிந்து வாழ்நாள் முழுவதும் செய்தால் இறைவனே துணையாக வருவான் என்றால் அறம் எந்த அளவு உயர்ந்தது என்பதை எண்ணி அறத்தின் வழியே வழியே நடந்து செல்லுங்கள்.

பாடல் #257

பாடல் #257: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

தான்தவம் செய்வதாம் செய்தவத் தவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்காள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வ மென்று நமனும்வரு வானே.

விளக்கம்:

முன்பிறவியில் செய்த அறத்தினாலும் தவத்தினாலும் தான் இப்பிறவியிலும் மனிதப் பிறவி கிடைத்திருக்கின்றது. இந்த உண்மையை தன் அறிவின் மூலம் அறிந்து அறிவையே தெய்வமாக எண்ணி அந்த அறிவின் சொல்படி இப்பிறவியிலும் அற வழிகளிலும் தவ வழிகளிலும் நடப்பவர்கள்தான் மனிதர்கள். உடலே தெய்வம் என்று எண்ணி ஆசைகளுக்கு அடிமையாகி தருமத்தின் வழியில் செல்லாமல் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும் நானே தெய்வம் என்று எமதருமன் உயிரை எடுக்க வந்து நிற்பானே தவிர இறைவன் வர மாட்டான்.

பாடல் #258

பாடல் #258: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே.

விளக்கம்:

வினையின் பயனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவியானது ஒரு பெரும் கடல் போன்றது. இந்த வினை அவ்வளவு சீக்கிரத்தில் தீர்ந்துவிடுவதில்லை. இந்த வினையாகிய பிறவிக்கடலை நீந்திச் சென்று இறைவனை அடையும் வரை சோர்வு வராமல் இருக்க இரண்டு வழிகள் உண்டு. அற வழிகளும் தவ வழிகளும்தான் அந்த இரண்டு வழிகள். அறத்தை கடைபிடிப்பவர்களுக்கும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் பிறவியில்லாத மேன்மையான முக்திக்கு வழிகாட்டி துணையாக இருப்பான் தூய்மையான புகழுடைய இறைவன்.

பாடல் #259

பாடல் #259: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங் களால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றுஅண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

விளக்கம்:

இறைவனின் திருவடிகளையே பற்றிக்கொண்டு உலகத்திதை உண்மையை பேசி குற்றம் குறை கூறாமல் அறநெறிகளின் வழியே நடப்பது மட்டுமின்றி நம்மால் இயன்றதை வேண்டும் என்று கேட்பவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதும் ஆகிய இவையே முக்தி அடைந்து இறைவனை அடைவதற்க்கான வழிகள் என்று இறைவன் வகுத்தவை என்பதைத் தெரிந்துகொண்டு அந்த வழிமுறைகளை கடைபிடித்து வாழுங்கள்.

பாடல் #250

பாடல் #250: முதல் தந்திரம் – 15. தானச் சிறப்பு (தருமம் செய்வதன் பெருமை)

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

விளக்கம்:

அவர்கள், இவர்கள், பிடித்தவர், பிடிக்காதவர், உறவினர், வேற்றார் என்று எந்தவித பாகுபாடும் எண்ணாமல் உணவை அனைவருக்கும் கொடுத்து உதவுங்கள். சாப்பிடுவதற்கு முன்பு பசியோடு யாராவது வருகின்றார்களா என்று பார்த்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள். சாப்பிடாமல் வைத்த பழைய உணவை சேமிப்பாக கருதி எடுத்து வைக்காமல் அதை உடனே பசியோடு இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். உணவின் மேல் அதிக ஆசை வைக்காமலும் பசியோடு இருக்கும்போது அவசர அவசரமாக வேகமாக சாப்பிடாமல் இருங்கள். காக்கை பசியோடு இருக்கும்போதும் கரைந்து கூப்பிட்டு மற்ற காகங்கள் வந்தபின் ஒன்றாகக் கூடி உண்பதைக் கண்டு அடுத்தவருக்கும் உணவை கொடுத்து சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பாடல் #248

பாடல் #248: முதல் தந்திரம் – 14. வானச் சிறப்பு (வானத்திலிருந்து பெய்யும் மழையின் சிறப்பு)

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே.

விளக்கம்:

அமிர்தம் போன்றது மழை நீர். அதன் மூலம்தான் பாக்கு மரம், தென்னை மரம், கரும்பு, வாழை மரம் போன்ற பழங்களைக் கொடுக்கும் அமிர்த சுவையை உடைய பலவித மரங்கள் உலகத்தில் தோன்றுகின்றன. ஆனாலும் அமிர்தத்தைத் தரும் இதே மழைதான் நஞ்சைத் தரும் எட்டிக்காய் போன்ற மரங்களையும் உலகத்தில் தோற்றுவிக்கின்றது.

குறிப்பு : மழை நீர் தன்னை சுவையான பழங்களை கொடுக்கும் மரத்திற்கும் விஷத்தை கொடுக்கும் செடிக்கும் பாகுபாடு இல்லாமல் கொடுக்கின்றதோ அதே போல் உயிர்கள் தனக்குள் இருக்கம் அன்பை பாகுபாடு பார்க்காமல் அனைத்து உயிர்கள் மீதும் கொடுக்கவேண்டும்.

பாடல் #249

பாடல் #249: முதல் தந்திரம் – 14. வானச் சிறப்பு (வானத்திலிருந்து பெய்யும் மழையின் சிறப்பு)

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.

விளக்கம்:

வானத்திலிருந்து பெய்து மலைமுகடுகள் வழியாக அருவியாக கொட்டும் மழை நீரில் நுரை இருக்காது அழுக்கு இருக்காது. துல்லியமான தெளிந்த நீராக மட்டுமே இருக்கும் அந்த நீரை இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் இறைவன் சிறப்பாக ஏற்றுக்கொள்வான். அது போலவே சொல்லில் இல்லாமல் உயிர்களின் உள்ளத்திலிருந்து ஊறும் எல்லையில்லாத தூய்மையான அன்பினால் உள்ளத்தில் இருக்கும் இறைவனுக்கு செய்யும் அபிஷேகத்தை இறைவன் சிறப்பாக ஏற்றுக்கொள்வான்.

பாடல் #238

பாடல் #238: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனின் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான்
நல்லாரைக் காலன் நணுகவும்நில் லானே.

விளக்கம்:

கல்வி அறிவு இல்லாத அரசனும் உயிர் எடுப்பதில் எமதர்மனுக்குச் சமமானவன். ஆனாலும் கல்வி அறிவு இல்லாத அரசனைவிட எமதர்மன் மிகவும் நல்லவன். ஏனென்றால் கல்வி அறிவு இல்லாத அரசன் அறம் எது, நீதி எது என்று ஆராயாமல் குற்றம் சாற்றப்பட்டவரை உடனே கொன்றுவிடு என்று கட்டளையிட்டு விடுவான். ஆனால் எமதர்மனோ நல்லவர்களின் பக்கத்தில் நிற்கவும் தயங்கி அவர்களின் காலம் முடியும் வரை காத்திருப்பான்.