பாடல் #273

பாடல் #273: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்றன்னை
ஈரம் உடையவர் காண்பர் இணையடி
பாரம் உடையவர் காண்பர் பவந்தன்னைக்
கோர நெருக்குகொடு கொங்குபுக் காரே.

விளக்கம்:

இறைவனைக் காண வேண்டும் என்கின்ற அன்பால் தீராத ஆசையைக் கொண்டவர்கள் அனைத்தையும் காத்து நிற்கும் இறைவனது திருவுருவத்தைக் கண்டு பயன்பெறுவார்கள். பிற உயிர்களிடத்தில் இறைவனை கண்டு தூய்மையான அன்புடன் உள்ளம் கசிந்து இருப்பவர்கள். இறைவனின் ஈடுஇணையில்லாத திருவடிகளைக் கண்டு பயன்பெறுவார்கள். அப்படியில்லாமல் பிறவியின் காரணமான கர்மவினைகளை அதிகமாக வைத்திருப்பவர்கள் இறைவனைக் காணாது உலக பற்றுக்களிலேயே இருப்பார்கள். வினையின் பயனாய் எத்தனை பிறவி எடுத்தாலும் அன்பில்லாத உள்ளத்தைக் கொண்டு இருப்பவர்கள் கொடுமையான துன்பத்தைக் கொடுக்கும் இடத்திலேயே மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்.

பாடல் #274

பாடல் #274: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்னன் புஎனக்கே தலைநின்ற வாறே.

விளக்கம்:

ஏதேனும் ஒரு வகையில் அன்பை உள்ளம் உருக இறைவனைப் போற்றி வழிபடுங்கள். உடலைவிட்டு உயிர் பிரியும் முன்பே உருக்கமான அன்பினை அனைத்து உயிர்களிடமும் காட்டுவதன் மூலம் இறைவனைத் தேடுங்கள். அப்படி செய்து வந்தால் அடியேன் மீது கொண்ட அளவில்லாத பெருங்கருணையினால் குருவாக இருந்து தனது அன்பை எனக்கென்று கொடுத்து என்னோடு எப்போதும் கலந்து நின்றது போலவே உங்களது உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் உங்களுக்கும் தனது அளவில்லாத பெருங்கருணையைக் கொடுத்து உங்களோடும் எப்போதும் இறைவன் கலந்து நிற்பான்.

பாடல் #275

பாடல் #275: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணமாயென் அன்பில்நின் றானே.

விளக்கம்:

காலங்கள் தோன்றுவதற்கு முன்பே சுயமாகத் தோன்றியவனும் தம்மை அன்போடு போற்றி வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும் காலம் அவர்களோடு வழித்துணையாய் வருபவனும் தேன் அதிகமாக ஊறியிருக்கும் கொன்றை மலர்களைத் தனது இடது பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவனுமாகிய சிவபெருமானின் மேல் யான் வைத்திருக்கும் பேரன்பின் உருவமாகவே என்னுடன் கலந்து நிற்கின்றான்.

Image result for lingam

பாடல் #276

பாடல் #276: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்றனர் அகலிடந் தானே.

விளக்கம்:

உயிர்களை உலகத்தில் படைக்கும் முன்பே அன்பையும் அதன் மூலம் பெறும் இன்பத்தையும் படைத்த முதல்வனாகிய இறைவனை தூய்மையான அன்பினால் கண்டு உணர முடியாதவர்கள் கேடு நிறைந்த இந்த பெரிய உலகத்தில் உலகப் பற்றுக்களின் மேலேயே அன்பு ஆசை வைத்து இந்த அகன்ற உலகத்திலேயே கிடந்து துன்பப்படுகின்றனர்.

பாடல் #277

பாடல் #277: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவென் றேத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

விளக்கம்:

உண்மையான அன்புகொண்டு இருப்பவர்களின் எண்ணத்தில் இறைவன் தூய்மையான தங்கம் போன்ற பிரகாசத்துடன் பேரொளி வீசும் சூரியனின் ஜோதியாக வீற்றிருப்பான். ஜோதி உருவத்தில் இருக்கும் இறைவனை எம்பெருமானே இறைவா என்று உருகி யாரொருவர் வேண்டினாலும் விண்ணுலகத்திலிருக்கும் தேவர்களுக்கெல்லாம் அரசனாக இருக்கும் இறைவன் அவர்கள் வேண்டியதை உடனே வழங்கிவிடுவான்.

பாடல் #278

பாடல் #278: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசறிந் தேயு மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகின்றி லாரே.

விளக்கம்:

தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்ற பிறப்பைக் கொடுத்த இறைவனே உயிர்களிடம் உள்ள பெருங் கருணையினால் அவர்கள் அந்த பிறப்பிலிருந்து வெளிவரும் அன்பையும் கொடுத்திருக்கின்றான். இதைத் தெரிந்து கொண்டாலும் மனிதர்கள் தங்களின் அன்பை உலகப் பற்றுகளின் ஆசையின் மேல்தான் வைக்கின்றார்களே தவிர எம்மைப் படைத்த தந்தையே எம்பெருமானே என்று இறைவனின் மேல் அன்பை வைத்து அவனை அடையும் வழியைத் தேடாமல் இருக்கின்றனர்.

பாடல் #279

பாடல் #279: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளாருக்கே அணைதுணை யாமே.

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்தில் தூய்மையான அன்பாக இருக்கும் இறைவனே வெளியே உடலாகவும் இருக்கின்றான். அவன் உலகத்தோற்றத்திற்கு முன்பே இருப்பவன். உலக அழிவிற்கு பின்னும் அழியாமல் இருப்பவன். இறைவனை அடைய அனைத்துவித பற்றுக்களையும் விட்ட முனிவர்களுக்கு தலைவன் அவன். தூய்மையான அன்பினுள் வந்து அமரும் அரிய பொருளான இறைவன் அன்பினை உள்ளத்தில் வைத்திருக்கும் உயிர்களுக்கு காக்கும் துணையாக எப்போதும் இருப்பான்.

பாடல் #260

பாடல் #260: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயனுமறி யாரே.

விளக்கம்:

எட்டிக்காயின் கனி பழுத்து பெரிதாகி தானாக நிலத்தில் விழுந்தாலும் அது விஷத்தன்மை கொண்டு இருப்பதால் யாருக்கும் உணவாக உதவாது. அதுபோலவே நல்ல தருமத்தோடு இணைந்த புண்ணிய செயல்களைச் செய்யாதவர்களின் செல்வமும் யாருக்கும் உதவாது. உலகத்திலுள்ள உயிர்களிடம் வட்டி மேல் வட்டி போட்டு அவர்களை ஏமாற்றிப் பெரும் செல்வம் சம்பாதிக்கும் நீதிநெறி இல்லாத பாதகர்களுக்கு அவர்கள் சம்பாதித்த செல்வமும் நிலைக்காமல் அதன் உண்மையான பயனை அறியமாட்டார்கள்.

பாடல் #261

பாடல் #261: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயிக்
கழிந்தன கற்பனை நாளும் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.

விளக்கம்:

காலங்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. ஓடிய காலங்கள் பல யுகங்களாக மாறி ஊழிக்காலத்தில் அழிந்தும் போகின்றது. உயிர்கள் தம் கற்பனையில் கட்டிய மனக்கோட்டைகளும் அவை வாழும் நாட்களும் குறைந்துகொண்டே சென்று கடைசியில் பெரிய துயரத்தையே தரும் உடலானது சக்கையாகப் பிழிந்து எடுக்கப்பட்டது போல வயதாகிச் சுருங்கிப் போய் ஒரு நாள் முழுவதுமாக அழிந்தும் போகின்றது. இதையெல்லாம் கண்கூடாக தினமும் பார்தாலும் தங்கள் வாழ்க்கையும் அழிந்து போய்விடும் என்பதை அறியாமல் வாழும் நாட்களில் செய்ய வேண்டிய தான தருமங்களை அறியாமலேயே பல உயிர்கள் வீணாக வாழ்ந்து அழிந்து போகின்றன.

பாடல் #262

பாடல் #262: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையும்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

விளக்கம்:

தருமங்கள் என்னவென்பதை அறியாத உயிர்களுக்கு இறைவனின் திருவடிகளை நினைத்து வணங்கும் முறையும் தெரியாது. ஆதலால் அவர்களுக்கு சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்திற்குச் செல்லும் வழியும் தெரியாது. பலர் தம்மிடம் பொய்யாக கூறிய விஷயங்களை உண்மை என்று நம்பிக்கொண்டு பாவத்தை மட்டுமே அறிந்தவர்களாகவும் அறமில்லாத வீரத்தில் மற்றவர்களிடம் பகையை வளர்த்துக் கொண்டவர்களாகவும் மட்டுமே வாழ்ந்து துயரப்படுகின்றனர்.