பாடல் #290

பாடல் #290: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

குறிப்பறிந் தேன்உட லோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.

விளக்கம்:

உயிர்கள் உலகத்தில் வினைப்பயனால் பிறவி எடுக்கும் காரணத்தைத் தெரிந்து கொண்டேன். உயிர்களின் மேல் கொண்ட பெருங்கருணையால் அவர்கள் எடுக்கும் உடலோடு உயிராக இறைவனும் கலந்திருப்பதை தெரிந்து கொண்டேன். தேவர்களுக்கெல்லாம் மிகப் பெரிய மகாதேவனான இறைவன் தன்மீது தூய்மையான அன்பு கொண்ட உயிர்களுக்கு தடையேதும் செய்யாமல் உடனே அவர்களின் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதையும் தெரிந்து கொண்டேன். இவையெல்லாம் படிப்பதின் மூலமாகவோ அல்லது கேட்பதின் மூலமோ கற்றுக்கொள்ள முடியாத பேரறிவு ஞானத்தை இறைவனது அருளால் கற்றுக்கொண்டேன்.

பாடல் #291

பாடல் #291: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யும்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.

விளக்கம்:

கல்வி அறிவை குருவின் மூலம் கற்று அறிந்த உயிர்கள் தாம் கற்றுக்கொண்ட அறிவை ஆராய்ந்து பார்த்தால் தாம் கற்று அறிந்த கல்வியினால் கிடைத்த அறிவுக்குள் ஒரு பேரறிவு ஞானம் இருப்பதைத் தெரிந்து கொள்வார்கள். உயிர்கள் தாம் கற்றுக் கொண்ட உலக கல்விக்குள் உண்மையான அறிவைக் கொடுக்கும் ஞானக் கண்ணை எண்ணித் தியானித்து பேரறிவு ஞானத்தை பெறவேண்டும். அப்படிப் பெற்ற பேரறிவு ஞானத்தை குருவாக இருந்து தன்னை நாடி வருபவர்ளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப நயன தீட்சை மூலம் காண்பிக்கமுடியும்.

உள்விளக்கம்: நயன தீட்சை என்பது முட்டை போடும் மீன் வகைகள் முட்டை போட்டதும் தன் முட்டையை பார்த்துக்கொண்டே இருக்கும் சிறிது நேரத்தில் அனைத்து முட்டைகளும் குஞ்சு பொறித்துவிடும் இதுபோல குருவானவர் சீடனை பார்த்ததும் பேரறிவு ஞானமடைய வைக்கலாம்.

பாடல் #292

பாடல் #292: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக் காமே.

விளக்கம்:

நமது உடலில் உயிர் இருக்கும் காலத்திலேயே என்றும் நிலைத்திருக்கும் இறைவனின் பாதங்களை தம் உள்ளத்திற்குள் காணுகின்ற பேரறிவு ஞானத்தை கற்றுக்கொள்ளும் வழிகளைத் தேடி கற்றுக் கொண்டால் நாம் எப்பிறவியிலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மைவிட்டு விலகி அழிந்து போகும். அத்தகைய பேரறிவு ஞானத்தைக் கற்றுக்கொள்ள சத்தியம் வாக்கு தவறாமல் இறைவனை மட்டுமே எண்ணிப் போற்றித் தொழுது வாருங்கள். அப்படித் தொழுது வந்தால் இறைவன் மணிவிளக்காக நமது உள்ளத்துக்குள் எழுந்தருளி பேரறிவை தந்தருளுவான்.

பாடல் #293

பாடல் #293: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மையான அறிவைக் கற்றுக்கொள்ளும் முறை)

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்தது காயமு மாமே.

விளக்கம்:

உலக ஞானத்தை மட்டும் அறிந்து கொள்ளும் கல்வியை கற்றுக்கொண்ட பலகோடி உயிர்கள் எப்போதும் பிறந்து இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். எண்ணம் சிதறாத மனமுடையவர்கள் உண்மையான ஞானத்தை சிறிது சிறிதாக பெற்று தினமும் காலையும் மாலையும் இறைவனை போற்றி வழிபட்டால் சித்தக் குளிகையால் செம்பு பொன்னாவது போல இறைவனது அருளால் அழிகின்ற உடல் என்றும் அழியாத காயகல்ப உடலாக மாறிவிடும்.

கருத்து: உண்மையான பேரறிவு ஞானத்தைப் பெறுவதற்கு எதிலும் சிதறாத வலிமையான மனதோடு இறை வழிபாடு தேவை.

பாடல் #294

பாடல் #294: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.

விளக்கம்:

பாடல் #293 இல் கூறியுள்ளபடி என்றும் அழியாத உடலைப் பெற்ற உயிர்களுக்கு துணையாக கூடவே வருபவை தூய்மையான பேரொளி ஜோதியாகிய இறைவனும் அந்த உயிர்கள் வேறு உயிர்களுக்கு சொன்னது அப்படியே உடனே நடக்கும் சத்தியவாக்கும். அவர்கள் செய்த நல்ல கர்மங்களின் நல்ல ஜென்மாந்திர வாசனையும் உண்மையான ஞானமாகிய கல்வியும் அந்த உயிர்களுடன் எப்போதும் துணையாக வருபவை ஆகும்.

பாடல் #295

பாடல் #295: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.

விளக்கம்:

அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்து இறைவனை அடைய முடியாத உயிர்கள் உலக ஆசைகளின்படி வழி நடந்து நல்ல பண்புகளால் கிடைக்கும் பயன்களை கெடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். குச்சி ஒன்றை எடுத்து காண்பித்தால் உணவை உண்ண வரும் பறவைகள் விலகி ஓடிவிடுவதுபோல அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்தால் உலக ஆசைகளைக் கொடுக்கும் ஐம்புலன்களும் நம்மை விட்டு ஓடிவிடும். இது தெரியாமல் உலக ஆசைகளில் மயங்கிக் கிடந்து வாழ்வை இழக்கின்றனர் உயிர்கள்.

பாடல் #296

பாடல் #296: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்தது மனமல்கு நூலேணி யாமே.

விளக்கம்:

உண்மை கல்வியான ஞானத்தை ஆராய்ந்து உணர்ந்து கொள்பவர்களின் உள்ளத்துக்குள்ளேயே இறைவன் வெளிப்படுவான். மணிவிளக்கின் உள்ளிருந்து வெளிப்படும் நெருப்பு வெளிச்சத்தைப் போல தாம் உணர்ந்த கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை ஜோதியாக தமக்குள் தரிசிக்க பெற்றவர்களுக்கு இறைவனை அடைய மனம் தகுதிபெற்று அந்த மனமே அவர்களை முக்திக்கு ஏற்றிவிடும் ஏணியாகவும் இருக்கும்.

பாடல் #297

பாடல் #297: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாங்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாமும்ப ராமுல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

விளக்கம்:

உண்மை ஞானமாகிய கல்வி கற்றவர்களின் சிந்தனை உயிர்களுக்கெல்லாம் வழித்துணையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கும். உண்மை ஞானமாகிய கல்வி இல்லாதவர்களின் சிந்தனை இறைவனைப் பற்றிய எண்ணங்களை இல்லாமல் அறியாமையை கொடுக்கும். உண்மை ஞானமாகிய கல்வி கற்றவர்களுக்கு, தேவலோகம் முதலிய ஏழு உலகங்களுக்கும் வழித்துணையாய் இருக்கும் இறைவனே பெருங்கருணையுடன் அருள் புரிவான்.

பாடல் #298

பாடல் #298: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

பற்றது பற்றின் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகின் கிளரொளி வானவர்
கற்றுஅவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

விளக்கம்:

எதையாவது வேண்டும் என்று எண்ணி அதனை அடைய ஆசைப்பட்டால் இறைவன் வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனை அடையுங்கள். அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனை அடைந்து அவன் அருளைப் பெற்றுவிட்டால் எல்லா ஆசைகளுக்கும் மேலானதை அடைந்திருப்பதை உணரலாம். தவ ஒளியுடன் இருக்கும் தேவர்களை விட உண்மைக்கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்தவர்கள் மிகுந்த பேரின்பம் பெறுகிறார்கள்.

பாடல் #299

பாடல் #299: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை ஏறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் திலிருந் தானே.

விளக்கம்:

கடலாக இருப்பவனும் மலையாக இருப்பவனும் ஐந்து பூதங்களையே தனக்கு உடலாக வைத்திருப்பவனும் உலகம் தோன்றி அழியும் பலகோடி ஊழிக்காலங்களிலும் மாறாமல் நின்று வலிமையான காளையின் மேல் ஏறிவரும் அமரர்களுக்கெல்லாம் தலைவனுமான இறைவனை உண்மை கல்வி ஞானத்தைப் பெற்று தம் மனதில் இடம்கொடுப்பவர் நெஞ்சத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கின்றான்.