பாடல் #1554

பாடல் #1554: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

அறிவுடன் கூடிய ழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டுங் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிவுடன கூடிய ழைதததொர தொணி
பறியுடன பாரம பழமபதி சிநதுங
குறியது கணடுங கொடுவினை யாளர
செறிய நினைககிலர செவடி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி
பறியுடன் பாரம் பழம் பதி சிந்தும்
குறி அது கண்டும் கொடு வினையாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

பதப்பொருள்:

அறிவுடன் (இறைவனிடமிருந்தே தாம் வந்திருக்கின்றோம் என்பதை அறிந்தவர்களின் அறிவோடு) கூடி (கூடி) அழைத்தது (அழைத்தது) ஓர் (ஒரு ஓடக்காரணும்) தோணி (படகுமாக வந்து)
பறியுடன் (உடலுடன் சேர்ந்து) பாரம் (பாரமாக இருக்கின்ற பற்றுக்களையும் கர்மங்களையும்) பழம் (பழமையான) பதி (தலைவனாகிய இறைவன்) சிந்தும் (அழித்து பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவுகின்றான்)
குறி (இந்த வழி முறை) அது (அதனை) கண்டும் (தெரிந்து கொண்டும்) கொடு (கொடுமையான) வினையாளர் (வினைகளைக் கொண்டு இருப்பதால் அதை உணராமல் இருப்பவர்கள்)
செறிய (பிறவியை கடப்பதற்காக) நினைக்கிலர் (நினைக்காமல் இருக்கின்றார்கள்) சேவடி (இறைவனின் செம்மையான திருவடிகளை) தானே (தாங்களே).

விளக்கம்:

இறைவனிடமிருந்தே தாம் வந்திருக்கின்றோம் என்பதை அறிந்தவர்களின் அறிவோடு கூடி அழைக்கின்ற பழமையான தலைவனாகிய இறைவன் ஒரு ஓடக்காரணும் படகுமாக வந்து உடலுடன் சேர்ந்து பாரமாக இருக்கின்ற பற்றுக்களையும் கர்மங்களையும் அழித்து பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவுகின்றான். இந்த வழி முறையை தெரிந்து கொண்டும் கொடுமையான வினைகளைக் கொண்டு இருப்பதால் அதை உணராமல் இருப்பவர்கள் பிறவியை கடப்பதற்காக இறைவனின் செம்மையான திருவடிகளை நினைக்காமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1555

பாடல் #1555: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

மன்னு மொருவன் மருவு மனோமய
னென்னில் மனித ரிகழ்வரி வேழைகள்
துன்னி மனமே தொழுமின் றுணையிலி
தன்னையு மங்கே தலைப்பட லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனனு மொருவன மருவு மனொமய
னெனனில மனித ரிகழவரி வெழைகள
துனனி மனமெ தொழுமின றுணையிலி
தனனையு மஙகெ தலைபபட லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மன்னும் ஒருவன் மருவும் மனோ மயன்
என்னில் மனிதர் இகழ்வர் இவ் ஏழைகள்
துன்னி மனமே தொழுமின் துணை இலி
தன்னையும் அங்கே தலை படல் ஆமே.

பதப்பொருள்:

மன்னும் (எப்போதும் நிலையாக இருக்கின்ற) ஒருவன் (ஒருவனாகிய இறைவன்) மருவும் (நினைக்கும் வடிவமாகவே கலந்து) மனோ (மனதின்) மயன் (தன்மைக்கு ஏற்றவாறு இருக்கின்றான்)
என்னில் (இதை எடுத்துக் கூறினால்) மனிதர் (அறியாமையில் இருக்கின்ற மனிதர்கள்) இகழ்வர் (இகழ்ந்து சிரிப்பார்கள்) இவ் (இந்த) ஏழைகள் (அறிவுக் குறைபாடுள்ள ஏழைகள்)
துன்னி (எண்ணத்திற்கு ஏற்றபடி பொருந்தி இறைவன் இருக்கின்ற) மனமே (தனது மனதினால்) தொழுமின் (தொழுது வந்தால்) துணை (தனக்கு சரிசமமாக எதுவும்) இலி (இல்லாதவனாகிய)
தன்னையும் (இறைவன்) அங்கே (மனதிற்குள்) தலை (வெளிப்பட்டு அவனை உணர்வதற்கான வழியில்) படல் (செல்ல) ஆமே (வைப்பான்).

விளக்கம்:

எப்போதும் நிலையாக இருக்கின்ற ஒருவனாகிய இறைவன் நினைக்கும் வடிவமாகவே கலந்து மனதின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்கின்றான். இப்படி இறைவன் இருப்பதை எடுத்துக் கூறினால் அறியாமையில் மூழ்கி அறிவுக் குறைபாடினால் ஏழைகளாக இருக்கின்ற மனிதர்கள் இகழ்ந்து சிரிப்பார்கள். இவ்வாறு எண்ணத்திற்கு ஏற்றபடி தம்மோடு பொருந்தி இருக்கின்ற இறைவனை தமது மனதினால் தொழுது வந்தால் தனக்கு சரிசமமாக எதுவும் இல்லாதவனாகிய இறைவன் தங்களின் மனதிற்குள் வெளிப்பட்டு அவனை உணர்வதற்கான வழியில் செல்ல வைப்பான்.

பாடல் #1556

பாடல் #1556: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே யுதையமுற்
றாங்கார மற்று மமைவது கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமையத்து நின்றொழிந் தார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஓஙகாரத துளளொளிக குளளெ யுதையமுற
றாஙகார மறறு மமைவது கைகூடார
சாஙகால முனனார பிறவாமை சாரவுறார
நீஙகாச சமையதது நினறொழிந தாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓங்காரத்து உள் ஒளிக்கு உள்ளே உதையம் உற்று
ஆங்காரம் அற்றும் அமைவது கை கூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வு உறார்
நீங்கா சமையத்து நின்று ஒழிந்தார்களே.

பதப்பொருள்:

ஓங்காரத்து (பிரணவ மந்திரமான ஓங்காரத்தின்) உள் (சத்தத்திற்கு உள்ளே இருக்கின்ற) ஒளிக்கு (ஒளி வடிவான இறைவனே) உள்ளே (சாதகருக்குள்ளும்) உதையம் (ஜோதியாக வெளிப்படுவதை) உற்று (மனதை ஒரு முகப்படுத்தி உணர்வதன் மூலம்)
ஆங்காரம் (அகங்காரத்தை) அற்றும் (அழித்து) அமைவது (இறைவனும் தானும் வேறு வேறு இல்லை எனும் நிலையை) கை (பெற்று அடைய) கூடார் (முடியாதவர்கள்)
சாங்காலம் (தாம் இறக்கும் காலம் ஒன்று வரும் என்பதை) உன்னார் (நினைக்காதவர்கள் ஆதலால்) பிறவாமை (இனி எப்போதும் பிறக்காமல் இருக்கின்ற பெரும் நிலையை) சார்வு (சார்ந்து இருக்கின்ற வழி முறைகளில்) உறார் (செல்லாமல்)
நீங்கா (எப்போதும் தாம் கடைபிடிக்கின்ற வழியே சிறந்தது ஓயாமல் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்ற) சமையத்து (சமயங்களின் கொள்கைகளின்) நின்று (வழியில் நின்று) ஒழிந்தார்களே (இறந்து அழிந்து போகின்றார்கள்).

விளக்கம்:

பிரணவ மந்திரமான ஓங்காரத்தின் சத்தத்திற்கு உள்ளே இருக்கின்ற ஒளி வடிவான இறைவனே சாதகருக்குள்ளும் ஜோதியாக வெளிப்படுவதை மனதை ஒரு முகப்படுத்தி உணர்வதன் மூலம் அகங்காரத்தை அழித்து இறைவனும் தானும் வேறு வேறு இல்லை எனும் நிலையை பெற்று அடைய முடியாதவர்கள் தாம் இறக்கும் காலம் ஒன்று வரும் என்பதை நினைக்காமல் இருக்கின்றார்கள். ஆதலால், இனி எப்போதும் பிறக்காமல் இருக்கின்ற பெரும் நிலையை சார்ந்து இருக்கின்ற வழி முறைகளில் செல்லாமல் எப்போதும் தாம் கடைபிடிக்கின்ற வழியே சிறந்தது என்று ஓயாமல் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்ற சமயங்களின் கொள்கைகளின் வழியில் நின்று இறந்து அழிந்து போகின்றார்கள்.

பாடல் #1530

பாடல் #1530: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

ஆயத்துள் நின்ற அறுசமை யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்துட் பட்டுப் பதைக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயததுள நினற அறுசமை யஙகளுங
காயததுள நினற கடவுளைக காணகிலா
மாயக குழியில விழுவர மனைமககள
பாசததுட படடுப பதைககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆயத்து உள் நின்ற அறு சமையங்களும்
காயத்து உள் நின்ற கடவுளை காண்கிலா
மாய குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்து உள் பட்டு பதைக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

ஆயத்து (மக்கள் கூட்டத்திற்கு) உள் (உள்ளே) நின்ற (வழிகாட்டிகளாக நிற்கின்ற) அறு (ஆறு விதமான) சமையங்களும் (சமயங்களும்)
காயத்து (உடலுக்கு) உள் (உள்ளே) நின்ற (நிற்கின்ற) கடவுளை (இறைவனை) காண்கிலா (காண்பது இல்லை)
மாய (அதனால் இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக வெளிப்புறமாக இந்த ஆறு விதமான சமயங்களைப் பின் பற்றி அவற்றின் வழியே நடக்கின்றவர்கள் உண்மையை அறியாத மாய) குழியில் (குழியிலேயே) விழுவர் (விழுந்து கிடப்பார்கள்) மனை (அவர்களுடைய மனைவியின் மீதும்) மக்கள் (பிள்ளைகளின் மீதும்)
பாசத்து (இருக்கின்ற பாசத்தினால்) உள் (ஆட் கொள்ளப்) பட்டு (பட்டு) பதைக்கின்ற (எப்போதும் பரிதவிப்பில்) ஆறே (இருக்கின்ற வழியிலேயே வாழ்கின்றார்கள்).

விளக்கம்:

மக்கள் கூட்டத்திற்கு உள்ளே வழிகாட்டிகளாக நிற்கின்ற ஆறு விதமான சமயங்களும் உடலுக்கு உள்ளே நிற்கின்ற இறைவனை காண்பது இல்லை. அதனால் இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக வெளிப்புறமாக இந்த ஆறு விதமான சமயங்களைப் பின் பற்றி அவற்றின் வழியே நடக்கின்றவர்கள் உண்மையை அறியாத மாய குழியிலேயே விழுந்து கிடப்பார்கள். அவர்களுடைய மனைவியின் மீதும் பிள்ளைகளின் மீதும் இருக்கின்ற பாசத்தினால் ஆட் கொள்ளப் பட்டு எப்போதும் பரிதவிப்பில் இருக்கின்ற வழியிலேயே வாழ்கின்றார்கள்.

கருத்து:

சமையங்கள் என்பதன் பொருள் இறைவனை அடைவதற்கு முறைப்படி கடைபிடித்து செல்லும் வழிகளாகும். இவற்றை தமக்கு உள்ளே இருக்கின்ற இறைவனை உணர்ந்து அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்போடும் பக்தியோடும் செய்யாமல் வெளிப்புறமாக உலக ஆசைகளுக்காக செய்வதால் இறைவனை அடைய முடியாது. ஆகையால் புறத்தில் செய்கின்ற ஆறு வழிகளும் நிந்தனை செய்யப் படுகின்றது.

இறைவனை அடையும் முறையான ஆறு வித வழிகள்:

  1. தியானம் – மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்
  2. செபம் – அக வழிபாடு மூலம் செபித்தல்
  3. பூஜை – புற வழிபாடு மூலம் செபித்தல்
  4. சக்கரம் – சக்கரங்கள் அமைத்து செபித்தல்
  5. ஞானம் – மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்
  6. புத்தி – மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்

பாடல் #1531

பாடல் #1531: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

உள்ளத்து ளேதானுகந் தெங்கு நின்றவன்
வள்ளற் றலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பை புகுந்து புறப்படுங்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உளளதது ளெதானுகந தெஙகு நினறவன
வளளற றலைவன மலருறை மாதவன
பொளளற குரமபை புகுநது புறபபடுங
களளத தலைவன கருததறி யாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உள்ளத்து உள்ளே தான் உகந்து எங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்
கள்ள தலைவன் கருத்து அறியார்களே.

பதப்பொருள்:

உள்ளத்து (உயிர்களின் உள்ளத்திற்கு) உள்ளே (உள்ளே) தான் (தானாகவே வீற்றிருந்து) உகந்து (விரும்பி இருக்கின்றவனும்) எங்கும் (அண்ட சராசரங்கள் எங்கும்) நின்றவன் (நிறைந்து நிற்கின்றவனும்)
வள்ளல் (உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அருளுகின்ற வள்ளலும்) தலைவன் (அனைத்திற்கும் தலைவனும்) மலர் (உயிர்களின் நெஞ்சத் தாமரை மலரின் மேல்) உறை (வீற்றிருக்கின்ற) மாதவன் (மாபெரும் தவத்தை உடையவனும்)
பொள்ளல் (துவாரங்களை கொண்ட) குரம்பை (உடலுக்குள்) புகுந்து (கருவிலேயே புகுந்து இருப்பவனும்) புறப்படும் (அந்த உடலின் ஆயுள் முடியும் போது வெளியேறி செல்பவனும்)
கள்ள (இவை அனைத்தையும் மறைந்து இருந்தே செய்கின்ற) தலைவன் (தலைவனும் ஆகிய இறைவனை) கருத்து (அறிந்து கொள்ளும் முறையை ஆசைகளுக்காக புற வழிபாடு செய்கின்றவர்கள்) அறியார்களே (அறியாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்திற்கு உள்ளே தானாகவே விரும்பி வீற்றிருக்கின்றவனும், அண்ட சராசரங்கள் எங்கும் நிறைந்து நிற்கின்றவனும், உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அருளுகின்ற வள்ளலும், அனைத்திற்கும் தலைவனும், உயிர்களின் நெஞ்சத் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்ற மாபெரும் தவத்தை உடையவனும், துவாரங்களை கொண்ட உடலுக்குள் கருவிலேயே புகுந்து இருப்பவனும், அந்த உடலின் ஆயுள் முடியும் போது வெளியேறி செல்பவனும், இவை அனைத்தையும் மறைந்து இருந்தே செய்கின்ற தலைவனும் ஆகிய இறைவனை அறிந்து கொள்ளும் முறையை ஆசைகளுக்காக புற வழிபாடு செய்கின்றவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1532

பாடல் #1532: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

உள்ளத்து முள்ளன் புறத்துள னென்பவர்க்
குள்ளத்து முள்ளன் புறத்துள னெம்மிறை
யுள்ளத்து மில்லைப் புறத்தில்லை யென்பவர்க்
குள்ளத்து மில்லைப் புறத்தில்லைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உளளதது முளளன புறததுள னெனபவரக
குளளதது முளளன புறததுள னெமமிறை
யுளளதது மிலலைப புறததிலலை யெனபவரக
குளளதது மிலலைப புறததிலலைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே.

பதப்பொருள்:

உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளேயும்) உள்ளன் (கலந்து இருக்கின்றான்) புறத்து (வெளியேயும்) உள்ளன் (அனைத்திலும் கலந்து இருக்கின்றான்) என்பவர்க்கு (என்று நம்புபவர்களுக்கு)
உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளேயும்) உள்ளன் (கலந்து இருக்கின்றான்) புறத்து (வெளியேயும்) உள்ளன் (அனைத்திலும் கலந்து இருக்கின்றான்) எம் (எமது உரிமையான) இறை (இறைவன்)
உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளேயும்) இல்லை (இல்லை) புறத்து (வெளியேயும் எங்கும்) இல்லை (இல்லை) என்பவர்க்கு (என்று நினைப்பவர்களுக்கு)
உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளே) இல்லை (உணரும் படியும் இல்லாமல்) புறத்து (வெளியேயும் எங்கும்) இல்லை (அறிந்து கொள்ளும் படியும் இல்லாமல்) தானே (இருக்கின்றான் இறைவன்).

விளக்கம்:

உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்து இருக்கின்றான் வெளியேயும் அனைத்திலும் கலந்து இருக்கின்றான் என்று நம்புபவர்களுக்கு உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்து இருக்கின்றான் வெளியேயும் அனைத்திலும் கலந்து இருக்கின்றான் எமது உரிமையான இறைவன். உள்ளத்திற்கு உள்ளேயும் இல்லை வெளியேயும் எங்கும் இல்லை என்று நினைப்பவர்களுக்கு உள்ளத்திற்கு உள்ளே உணரும் படியும் இல்லாமல் வெளியேயும் எங்கும் அறிந்து கொள்ளும் படியும் இல்லாமல் இருக்கின்றான் இறைவன்.

பாடல் #1533

பாடல் #1533: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

ஆறு சமையமுங் கண்டவர் கண்டில
ராறு சமையப் பொருளும் பயனில்லைத்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆறு சமையமுங கணடவர கணடில
ராறு சமையப பொருளும பயனிலலைத
தெறுமின தெறித தெளிமின தெளிநதபின
மாறுத லினறி மனைபுக லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆறு சமையமும் கண்டு அவர் கண்டு இலர்
ஆறு சமைய பொருளும் பயன் இல்லை
தேறுமின் தேறி தெளிமின் தெளிந்த பின்
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே.

பதப்பொருள்:

ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) சமையமும் (வழி முறைகளையும்) கண்டு (கண்டு) அவர் (அதன் பொருளை மேம்போக்காக அறிந்து கொண்டவர்கள்) கண்டு (அந்த வழிமுறைகளின் உட் பொருளாக இருக்கின்ற தத்துவங்களை அறிந்து) இலர் (கொள்ள வில்லை)
ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) சமைய (வழி முறைகளும்) பொருளும் (சொல்லுகின்ற உட் பொருளான தத்துவங்களை அறிந்து கொள்ளாத) பயன் (காரணத்தால் அவர்களுக்கு எந்தவிதமான பயனும்) இல்லை (இல்லை)
தேறுமின் (ஆகவே ஆறு விதமான வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்) தேறி (அறிந்த பிறகு) தெளிமின் (அதனை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்) தெளிந்த (அவ்வாறு தெளிவாக உணர்ந்த) பின் (பிறகு)
மாறுதல் (எந்த விதமான மாறுபாடும்) இன்றி (இல்லாமல் உறுதியாக) மனை (வீடு பேறு என்று அறியப்படுகின்ற முக்தியை) புகல் (அடைவது) ஆமே (கைகூடும்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் கண்டு அதன் பொருளை மேம்போக்காக அறிந்து கொண்டவர்கள் அந்த வழிமுறைகளின் உட் பொருளாக இருக்கின்ற தத்துவங்களை அறிந்து கொள்ள வில்லை. இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளும் சொல்லுகின்ற உட் பொருளான தத்துவங்களை அறிந்து கொள்ளாத காரணத்தால் அவர்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. ஆகவே ஆறு விதமான வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். அறிந்த பிறகு அதனை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு தெளிவாக உணர்ந்த பிறகு எந்த விதமான மாறுபாடும் இல்லாமல் உறுதியாக வீடு பேறு என்று அறியப்படுகின்ற முக்தியை அடைவது கைகூடும்.

குறிப்பு:

ஆறு சமயங்கள் என்பது இறைவனை அடைவதற்கான ஆறு வழி முறைகளாகும். இதனை பாடல் #1530 இல் பார்க்கவும்.

பாடல் #1534

பாடல் #1534: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

சிவமல்ல தில்லை யிறையோ சிவமாந்
தவமல்ல தில்லைத் தலைப்படு வோர்க்கிங்
கவமல்ல தில்லை யறுசமை யங்கள்
தவமல்ல நந்திதாள் சார்ந்துய் யீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவமலல திலலை யிறையொ சிவமாந
தவமலல திலலைத தலைபபடு வொரககிங
கவமலல திலலை யறுசமை யஙகள
தவமலல நநதிதாள சாரநதுய யீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவம் அல்லது இல்லை இறையோ சிவம் ஆம்
தவம் அல்லது இல்லை தலை படுவோர்க்கு இங்கு
அவம் அல்லது இல்லை அறு சமையங்கள்
தவ மல்ல நந்தி தாள் சார்ந்து உய்யீரே.

பதப்பொருள்:

சிவம் (சிவம் என்று அறியப்படுகின்ற பரம்பொருளைத்) அல்லது (தவிர) இல்லை (வேறு பரம்பொருள் எதுவும் இல்லை) இறையோ (இறை என்று அறியப்படுவது) சிவம் (சிவப் பரம்பொருளே) ஆம் (ஆகும்)
தவம் (தவம் என்கின்ற உயர்ந்த நிலையை) அல்லது (தவிர) இல்லை (வேறு உயர்ந்த நிலை எதுவும் இல்லை) தலை (இறைவனை அடைய வேண்டும் என்று உறுதியாக) படுவோர்க்கு (செயல் படுபவர்களுக்கு) இங்கு (இந்த உலகத்தில்)
அவம் (பயனில்லாததைத்) அல்லது (தவிர) இல்லை (வேறு எதுவும் இல்லை) அறு (ஆறு விதமான) சமையங்கள் (வழி முறைகளையும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு)
தவ (தவத்திற்கு) மல்ல (உறுதியாக நிற்கின்ற) நந்தி (குருநாதனாகிய இறைவனின்) தாள் (திருவடியை) சார்ந்து (சரணடைந்து) உய்யீரே (மேன்மை நிலையை அடையாமல் இருக்கின்றீர்களே).

விளக்கம்:

சிவம் என்று அறியப்படுகின்ற பரம்பொருளைத் தவிர வேறு பரம்பொருள் எதுவும் இல்லை. இறை என்று அறியப்படுவது சிவப் பரம்பொருளே ஆகும். இந்த உலகத்தில் இறைவனை அடைய வேண்டும் என்று உறுதியாக செயல் படுபவர்களுக்கு தவம் என்கின்ற உயர்ந்த நிலையை தவிர வேறு உயர்ந்த நிலை எதுவும் இல்லை. ஆனால் ஆறு விதமான வழி முறைகளையும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு இந்த உலகத்தில் பயனில்லாததைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதனால் தவத்திற்கு உறுதியாக நிற்கின்ற குருநாதனாகிய இறைவனின் திருவடியை சரணடைந்து மேன்மை நிலையை அடையாமல் இருக்கின்றீர்களே.

பாடல் #1535

பாடல் #1535: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

அண்ணலை நாடிய வாறு சமையமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முன்னின் றழியு முயன்றில ராதலால்
மண்ணின் றொழியும் வகையறி யார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அணணலை நாடிய வாறு சமையமும
விணணவ ராக மிகவும விருமபியெ
முனனின றழியு முயனறில ராதலால
மணணின றொழியும வகையறி யாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அண்ணலை நாடிய ஆறு சமையமும்
விண்ணவர் ஆக மிகவும் விரும்பியே
முன் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால்
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே.

பதப்பொருள்:

அண்ணலை (அண்ணலாகிய இறைவனை) நாடிய (தேடி அடைய உதவும்) ஆறு (ஆறு விதமான) சமையமும் (வழி முறைகளும்)
விண்ணவர் (முக்தி அடையவும் தேவர்களாக) ஆக (ஆக வேண்டும்) மிகவும் (என்று மிகவம்) விரும்பியே (விரும்புகின்ற உயிர்களுக்கு வழி காட்டவே உருவாக்கப் பட்டுள்ளன)
முன் (முன்னால் / ஆசைப் படுகின்ற) நின்று (இருக்கின்ற / பொருள்கள்) அழியும் (அனைத்தும் அழிந்து போவதை) முயன்று (அந்த ஆறு வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொண்டு உணர்ந்து தெளிவடைவதற்கான முயற்சியை) இலர் (இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்) ஆதலால் (ஆதலால் வெறும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு)
மண் (இந்த உலகத்தில் / மற்றவர்கள் ஆசைப் படுகின்ற) நின்று (உள்ள அனைத்தும் / பொருள்கள் அனைத்தும்) ஒழியும் (அழிந்து போவதையும் அறிந்து கொண்டு) வகை (அழியாமல் இருக்கின்ற முறையை) அறியார்களே (அறிந்து கொள்ளாமலேயே இவர்கள் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

அண்ணலாகிய இறைவனை தேடி அடைய உதவும் ஆறு விதமான வழி முறைகளும் முக்தி அடையவும் தேவர்களாக ஆக வேண்டும் என்று மிகவம் விரும்புகின்ற உயிர்களுக்கு வழி காட்டவே உருவாக்கப் பட்டுள்ளன. ஆனாலும் அந்த ஆறு வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொண்டு உணர்ந்து தெளிவடைவதற்கான முயற்சியை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் வெறும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தும் அழிந்து போவதையும் மற்றவர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தும் அழிந்து போவதையும் அறிந்து கொண்டு அழியாமல் இருக்கின்ற முறையை அறிந்து கொள்ளாமலேயே இவர்கள் இருக்கின்றார்கள்.

குறிப்பு:

ஆறு சமயங்கள் என்பது இறைவனை அடைவதற்கான ஆறு வழி முறைகளாகும். இதனை பாடல் #1530 இல் பார்க்கவும்.

பாடல் #1536

பாடல் #1536: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

சிவகதி யேகெதி மற்றுள்ள தெல்லாம்
பவகதிப் பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னோடு நேரொன்று தோன்றி
லவகதி மூவரு மவ்வகை யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவகதி யெகெதி மறறுளள தெலலாம
பவகதிப பாசப பிறவியொன றுணடு
தவகதி தனனொடு நெரொனறு தொனறி
லவகதி மூவரு மவவகை யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவ கதியே கெதி மற்று உள்ளது எல்லாம்
பவ கதி பாச பிறவி ஒன்று உண்டு
தவ கதி தன்னோடு நேர் ஒன்று தோன்றில்
அவ கதி மூவரும் அவ் வகை ஆமே.

பதப்பொருள்:

சிவ (சிவப் பரம்பொருளை) கதியே (சரணடைவதே) கெதி (முக்திக்கான வழியாகும்) மற்று (சரணாகதியைத் தவிர வேறு விதமாக) உள்ளது (இருக்கின்ற வழி முறைகள்) எல்லாம் (அனைத்தும்)
பவ (உலக வாழ்க்கைக்கான) கதி (வழியாக) பாச (பாசத் தளைகளுடன்) பிறவி (மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவே) ஒன்று (இருக்கின்ற) உண்டு (வழி முறைகளாகும்)
தவ (சரணாகதியாக தவம் செய்கின்ற) கதி (வழி முறையை) தன்னோடு (சாதகர்கள்) நேர் (முக்திக்கு நேரான) ஒன்று (ஒரே வழிமுறையாக எடுத்துக் கொண்டு) தோன்றில் (செய்யாமல் போனால்)
அவ (துன்பமான பிறவிகளுக்கே) கதி (வழியாக இருக்கின்ற) மூவரும் (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும்) அவ் (துன்பமான பிறவி எடுப்பதற்கான) வகை (வழி முறைகளாகவே) ஆமே (இருக்கும்).

விளக்கம்:

சிவப் பரம்பொருளை சரணடைவதே முக்திக்கான வழியாகும். சரணாகதியைத் தவிர வேறு விதமாக இருக்கின்ற வழி முறைகள் அனைத்தும் உலக வாழ்க்கைக்கான வழியாக பாசத் தளைகளுடன் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவே இருக்கின்ற வழி முறைகளாகும். சரணாகதியாக தவம் செய்கின்ற வழி முறையை சாதகர்கள் முக்திக்கு நேரான ஒரே வழிமுறையாக எடுத்துக் கொண்டு செய்யாமல் போனால் துன்பமான பிறவிகளுக்கே வழியாக இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும் துன்பமான பிறவி எடுப்பதற்கான வழி முறைகளாகவே இருக்கும்.