பாடல் #1530

பாடல் #1530: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

ஆயத்துள் நின்ற அறுசமை யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்துட் பட்டுப் பதைக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயததுள நினற அறுசமை யஙகளுங
காயததுள நினற கடவுளைக காணகிலா
மாயக குழியில விழுவர மனைமககள
பாசததுட படடுப பதைககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆயத்து உள் நின்ற அறு சமையங்களும்
காயத்து உள் நின்ற கடவுளை காண்கிலா
மாய குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்து உள் பட்டு பதைக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

ஆயத்து (மக்கள் கூட்டத்திற்கு) உள் (உள்ளே) நின்ற (வழிகாட்டிகளாக நிற்கின்ற) அறு (ஆறு விதமான) சமையங்களும் (சமயங்களும்)
காயத்து (உடலுக்கு) உள் (உள்ளே) நின்ற (நிற்கின்ற) கடவுளை (இறைவனை) காண்கிலா (காண்பது இல்லை)
மாய (அதனால் இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக வெளிப்புறமாக இந்த ஆறு விதமான சமயங்களைப் பின் பற்றி அவற்றின் வழியே நடக்கின்றவர்கள் உண்மையை அறியாத மாய) குழியில் (குழியிலேயே) விழுவர் (விழுந்து கிடப்பார்கள்) மனை (அவர்களுடைய மனைவியின் மீதும்) மக்கள் (பிள்ளைகளின் மீதும்)
பாசத்து (இருக்கின்ற பாசத்தினால்) உள் (ஆட் கொள்ளப்) பட்டு (பட்டு) பதைக்கின்ற (எப்போதும் பரிதவிப்பில்) ஆறே (இருக்கின்ற வழியிலேயே வாழ்கின்றார்கள்).

விளக்கம்:

மக்கள் கூட்டத்திற்கு உள்ளே வழிகாட்டிகளாக நிற்கின்ற ஆறு விதமான சமயங்களும் உடலுக்கு உள்ளே நிற்கின்ற இறைவனை காண்பது இல்லை. அதனால் இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக வெளிப்புறமாக இந்த ஆறு விதமான சமயங்களைப் பின் பற்றி அவற்றின் வழியே நடக்கின்றவர்கள் உண்மையை அறியாத மாய குழியிலேயே விழுந்து கிடப்பார்கள். அவர்களுடைய மனைவியின் மீதும் பிள்ளைகளின் மீதும் இருக்கின்ற பாசத்தினால் ஆட் கொள்ளப் பட்டு எப்போதும் பரிதவிப்பில் இருக்கின்ற வழியிலேயே வாழ்கின்றார்கள்.

கருத்து:

சமையங்கள் என்பதன் பொருள் இறைவனை அடைவதற்கு முறைப்படி கடைபிடித்து செல்லும் வழிகளாகும். இவற்றை தமக்கு உள்ளே இருக்கின்ற இறைவனை உணர்ந்து அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்போடும் பக்தியோடும் செய்யாமல் வெளிப்புறமாக உலக ஆசைகளுக்காக செய்வதால் இறைவனை அடைய முடியாது. ஆகையால் புறத்தில் செய்கின்ற ஆறு வழிகளும் நிந்தனை செய்யப் படுகின்றது.

இறைவனை அடையும் முறையான ஆறு வித வழிகள்:

  1. தியானம் – மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்
  2. செபம் – அக வழிபாடு மூலம் செபித்தல்
  3. பூஜை – புற வழிபாடு மூலம் செபித்தல்
  4. சக்கரம் – சக்கரங்கள் அமைத்து செபித்தல்
  5. ஞானம் – மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்
  6. புத்தி – மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.