சரியை முன்னுரை:
இந்த உலகத்திலேயே இறைவனை பற்றி முழுவதுமாக ஆராய்ந்து அறிந்து கொண்டு அவனை அடைந்து சிவமாகவே ஆவதற்கு இறைவனால் அருளப்பட்ட வழிமுறையான சுத்த சைவத்தில் இருப்பது 1. சுத்த சைவம் 2. அசுத்த சைவம் 3.மார்க்க சைவம் 4.கடும் சுத்த சைவம் ஆகிய நான்கு வழி முறைகள் ஆகும். இந்த நான்கு வழிமுறைகளையும் கடைபிடிப்பதற்கு இருப்பது சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு சாதக முறைகள் ஆகும்.
பாடல் #1443: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)
நேர்ந்திடு மூலச் சரியை நெறியிதென்
றாய்ந்திடுங் காலங்கி கஞ்சன் மலையின்மா
னோர்ந்திடுங் கந்துருக் கேண்மின்கள் பூதலந்
தேர்ந்திடுஞ் சுத்த சைவத்துயி ராவதே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நெரநதிடு மூலச சரிதை நெறியிதென
றாயநதிடுங காலஙகி கஞசன மலையினமா
னொரநதிடுங கநதுருக கெணமினகள பூதலந
தெரநதிடுஞ சுதத சைவததுயி ராவதெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று
ஆய்ந்திடும் கால் அங்கி கஞ்சன் மலையின் மான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலம்
தேர்ந்திடும் சுத்த சைவத்து உயிர் ஆவதே.
பதப்பொருள்:
நேர்ந்திடும் (இறைவனை சென்று அடைவதற்கு) மூல (மூலமாக இருக்கின்ற) சரியை (சரியை எனும்) நெறி (வழிமுறை) இது (இதுவே) என்று (என்று)
ஆய்ந்திடும் (ஆராய்ந்து அறிந்து கொண்ட) கால் (காலத்தை வென்று) அங்கி (அதை அங்கியாக அணிந்து கொண்டு) கஞ்சன் (வெண்கலம் போன்ற உறுதியான) மலையின் (மலை எனும் பொருளில் பெயர் கொண்ட கஞ்ச மலைக்கு) மான் (பெருமை சேர்த்த காலாங்கி நாதரும்)
ஓர்ந்திடும் (இதையே ஆராய்ந்து தெளிவாக உணர்ந்து கொண்ட) கந்துரு (கந்துரு நாதரும்) கேண்மின்கள் (ஆராய்ந்து உணர்ந்து கொண்ட வழிமுறையை நீங்களும் கேளுங்கள்) பூதலம் (இந்த பூமியிலேயே)
தேர்ந்திடும் (இறைவனை அடைவதற்கான வழி என்று ஆராய்ந்து உணர்ந்து கொண்டு அதில் தேர்ச்சி பெறும்) சுத்த (சுத்த) சைவத்து (சைவம் எனும் வழிமுறைக்கு) உயிர் (உயிர் ஆதாரமாக) ஆவதே (இருப்பதே சரியை எனும் வழிமுறை ஆகும்).
விளக்கம்:
இறைவனை சென்று அடைவதற்கு மூலமாக இருக்கின்ற சரியை எனும் வழிமுறை இதுவே என்று ஆராய்ந்து அறிந்து கொண்ட காலத்தை வென்று அதை அங்கியாக அணிந்து கொண்டு வெண்கலம் போன்ற உறுதியான மலை எனும் பொருளில் பெயர் கொண்ட கஞ்ச மலைக்கு பெருமை சேர்த்த காலாங்கி நாதரும் இதையே ஆராய்ந்து தெளிவாக உணர்ந்து கொண்ட கந்துரு நாதரும் ஆராய்ந்து உணர்ந்து கொண்ட வழிமுறையை நீங்களும் கேளுங்கள். இந்த பூமியிலேயே இறைவனை அடைவதற்கான வழி என்று ஆராய்ந்து உணர்ந்து கொண்டு அதில் தேர்ச்சி பெறும் சுத்த சைவம் எனும் வழிமுறைக்கு உயிர் ஆதாரமாக இருப்பதே சரியை எனும் வழிமுறை ஆகும்.