பாடல் #911: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)
மேனி யிரண்டும் விலங்காமன் மேற்கொள்ள
மேனி யிரண்டு மிகாரவி காரியா
மேனி யிரண்டுமூ வாயியே யோவென்று
மேனி யிரண்டுமீ யோவூவா வேகூத்தே.
ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி இரண்டும் மிகார விகாரியா
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்று
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்தே.
விளக்கம்:
இறைவனது சொரூபமும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றை விட்டு ஒன்று விலகிவிடாமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபிக்கும் போது இறைவனது சொரூபமும் சாதகருடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றுக்கு ஒன்று அளவில் மாறுபடாமலும் ஒன்றோடு ஒன்று வேறுபடாமலும் இருக்கும். இறைவனது சொரூபமானது ஊ ஆ ஈ ஏ ஓ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமானது ஈ ஓ ஊ ஆ ஏ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் இருக்கின்றது. சாதகர்கள் இந்த மந்திரங்களை உச்சரிக்காமல் ஜெபிக்கும் போது இரண்டு சொரூபமும் ஒன்றாக கலப்பதே திருக்கூத்து ஆகும்.
குறிப்பு: இறைவனது சொரூபம் அனைத்திலும் கலந்திருக்கும் பேரொளியாகும். ஆன்ம சொரூபம் என்பது ஒவ்வொரு உயிர்களுடைய சிறிய ஒளி உருவமாகும். இறைவனது பேரொளியும் ஆன்மாவின் சிறிய ஒளியும் ஒன்றாக பாவித்து சாதகம் செய்யும் போது இறையருளால் ஆன்ம ஒளியானது பேரொளியால் காந்தம் போல் கவர்ந்திழுக்கப்பட்டு ஒன்றாக கலப்பதே திருக்கூத்தாகும்.
சிவாயநம:
ஊ ஆ ஈ ஏ ஓ என்ற எழுத்துக்கள் எவ்வாறு ஆதார மந்திரங்கள் ஆகின்றன???
மேல் இருக்கும் எழுத்துக்கள் எவ்வாறு மந்திரம் ஆகின்றது என்பதே கேள்வி
தங்களின் கேள்விக்கான பதில் இந்த பாடலின் அடுத்த பாடலான 912 இல் விளக்கமாக உள்ளது. மேலும் தங்களுக்கு விளக்கம் தேவையெனில் அளிக்கின்றோம்.
சரி ஐயா, அப்பாடலைப் படித்துவிட்டு சந்தேகம் இருந்தால் கேட்கிறோம். நன்றி
சிவாயநம:
பாடலை படித்தோம். ஆனாலும் எவ்வாறு ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்ற எழுத்துக்கள் சி, வ, ய, ந, ம ஆகின்றது என்பது விளங்கவில்லை!
பெரிய பதிலாக இருப்பதினால் விரைவில் புரியும் படி எழுதி பதிவேற்றுகின்றோம். நன்றி