பாடல் # 806 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.
விளக்கம்:
குருநாதர் காட்டிய வழியில் நாக்கின் நுனியை அண்ணாக்கில் ஏறும்படிச் செய்து அங்கே நடுநாடியின் உச்சியில் கூடி இருக்க வேண்டும். அதனைச் செய்கின்ற யோகி உலகத்தார் யாவரையும் ஆட்கொள்கின்ற திருவருட் செல்வம் உடையவன் ஆவான். அந்த யோகத்தை மேற்கொள்ளாது உலகியலில் அறிவை நினைத்துக்கொண்டிருப்போர் பிறப்பு இறப்புத் துன்புக்கு ஆட்படும் தீவினையராவர் ஆவார்.