பாடல் #562: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)
பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.
விளக்கம்:
பாத நுனிகள் தரையில் அழுந்தும்படி வைத்து முழந்தாளிட்டு காலின் மேல் அமர்ந்து கைகளை பின்புறமாக பாதங்களில் படும்படி நீட்டி வைத்து ஆதரவாக இருக்க வாயை ஆவெனப் பிளந்து கொண்டு அழகாக கண்களை வேறெங்கும் சுழற்றாமல் மூக்கின் நுனியை நோக்கி பார்த்துக் கொண்டு இருப்பது புகழ் பெற்ற சிங்காசனம் என்று கூறப்படும்.
சிங்காசனம் ஆசனத்தின் பயன்கள்:
நன்கு பசியெடுக்கும். முகதாடை நாக்கு தொண்டையை ஒட்டிய நாக்கின் தொடக்கப்பகுதி ஆகியவற்றிற்கு நன்கு பயிற்சி கிடைக்கிறது. கண்களுக்கு நல்ல கூர்மையான நோக்கும் சக்தி கிடைக்கிறது. காது, மூக்கு தொண்டைக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. வயிற்றில் ஜீரண சுரப்பிகள் வேலை செய்யும். நாக்கை வெளியில் இழுப்பதால் தொண்டை மூக்கில் சுத்த ரத்தம் பாயும். உணவு நன்கு ஜீரணமாகும். நாக்கை வெளியில் நீட்டுவதால் நரம்புகள் இழுக்கப்பட்டு தாடைகள் இறுக்கம் குறைந்து பலப்படுகின்றன. விக்கல் வியாதி தடுக்கப்படுகிறது. சிங்காசனத்தை தொடர்ந்து செய்து பழகிய பின் முழங்கால் தொடை சதைபிடிப்பு நீங்கி பலமுள்ளதாக ஆகின்றன. தன்னுள் சிங்கத்தின் பலம் வருவது போல பாவனை செய்தால் எல்லா அங்கங்களும் வலிமை பெற்றுவிடும். இவ்வாறு தியானம் செய்தால் மன உறுதி கிடைக்கும். சக்தி பெருகும்.