பாடல் #512: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)
அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவா னுறைபதஞ் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனற் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.
விளக்கம்:
உயிர்கள் அனைத்துக்குள்ளும் வீற்றிருக்கும் ஆதிமூல நாயகனாகிய இறைவனை தேவர்கள் தங்களுக்குள் இருக்கும் தீர்த்தத்தைத் தேடி அடைந்து அதன் மூலம் தங்களைப் பக்குவப் படுத்திக்கொண்டே அடைந்திருக்கிறார்கள். அது போலவே உயிர்கள் தங்களிடம் இருக்கும் 5 வித தீய குணங்களை நீக்கித் தங்களைப் பக்குவப் படுத்திக்கொண்டு தங்களுக்குள் மூலப்பொறியாக இருக்கும் குண்டலினி சக்தியை மேலெழுப்பிச் சென்று தங்களின் தலைக்குள் இருக்கும் கங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து விட்டால் புண்ணியர்களாக ஆகலாம்.
5 வித தீய குணங்கள்
- காமம் – மோகம்
- குரோதம் – கோபம்
- லோபம் – சுயநலம்
- மதம் – கர்வம், ஆணவம்
- மாச்சரியம் – பொறாமை