பாடல் #438: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
நன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்துஇருந் தானே.
விளக்கம்:
ஒவ்வொரு உயிரின் உள்ளத்துக்குள்ளும் தாமாகவே நிறைந்து நின்று மாயையால் மறைக்கும் மகேசுவரன். அழிக்கவும் காக்கவும் சென்று உலகங்களிலெல்லாம் இயங்கிக் கொண்டிருக்கும் உருத்திரன் திருமால். நன்மைக்காக படைப்புகளைச் செய்து கொண்டு தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் பிரம்மன் ஆகிய இவர்கள் அனைவரும் தாமாகவே இருந்தும் அவர்கள் புரியும் தொழில்களில் ஒன்றாகவே இணைந்து இருக்கின்றான் இறைவன்.
குறிப்பு: இந்தப் பாடலும் #403 ஆவது பாடலும் ஒன்று போல இருந்தாலும் இப்பாடலில் சிறிது வார்த்தைகளை மாற்றி இறைவனது மாயா காரியங்களைச் சொல்லி அருளுகின்றார் திருமூலர். பாடல் #403 இல் அனைத்தையும் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் மூவர்களாக இருக்கும் இறைவனே இந்தப் பாடலில் எங்கும் நிறைந்து மறைக்கவும் அனைத்து உயிர்களுக்கும் அருளவும் செய்து ஐவராக இருக்கின்றான் என்பதையும் ஐவராக இருந்து அவன் புரியும் இந்தத் தொழில்களை உயிர்களின் மேல் கொண்ட கருணையினால் மறைத்து வைத்திருக்கின்றான் என்பதையும் திருமூலர் சொல்லியிருக்கின்றார்.