பாடல் #436: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)
அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.
விளக்கம்:
இன்ப துன்பத்திற்கு ஓர் காரணமாய் இருக்கும் உடல் உறுப்புகள் கேட்கின்ற ஓசை பேசுகின்ற உரை இவற்றிலெல்லாம் உணருகின்ற ஆசை ஒன்றுக்கு ஒன்று பொருந்தாமல் வித்தியாசமாய் பலவித உருவங்களில் எங்கும் பரவி இருக்கும் உயிர்கள் பரந்து விரிந்த உலகம் ஆகிய இவை அனைத்தும் இறைவனாகவே இருக்கின்ற பெரிய உண்மையை மறைத்து உயிர்களுக்குள் உணர்ந்து காணக்கூடியவனாக இருக்கின்றான் இறைவன்.
உட்கருத்து: உயிர்கள் தமது ஐந்து புலன்களால் பார்த்து கேட்டு பேசி சுவைத்து உணர்ந்து ஆசையைத் தீர்த்துக் கொண்டு வினைகளைப் புரிந்து கொண்டு இருக்கின்றன. இந்த ஐம்புலன்களால் இறைவனை அறிய முடியாது. உள்ளத்துக்குள்ளே உணர்ந்தால் மட்டுமே காணக்கூடியவனாக இருக்கின்றான் இறைவன்.