பாடல் #361: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)
தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே.
விளக்கம்:
இறையருள் இல்லாத தக்கன் செய்த வேள்வியில் கலந்து கொண்டு பின்பு இறைவனின் கோபத்திற்குள்ளாகி இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு அனைத்தும் இறைவனே என்று புரிந்துகொண்ட தேவர்கள் இப்படி ஒரு பிழை செய்துவிட்டோமே என்று கலங்கி இருக்கும் போது தேவர்களே நீங்கள் கலங்க வேண்டாம். இறைவன் மேல் உண்மையான அன்பு வைத்தவர்கள் அனைவருமே சென்று சேருமிடம் அவரது திருவடிகளே. தக்கனது வேள்வியை அழித்தது அவனது அறியாமையை நீக்கி அவனை ஆட்கொள்ள வேண்டும் என்ற கருணையினால்தான். தூய்மையான வாக்கை உடைய இறைவன் எது செய்தாலும் அது உயிர்களின் நன்மைக்கே ஆகும்.
உட்கருத்து: உயிர்கள் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றையும் ஒன்றாக வைத்து இறைவனை வேண்டி இறையருளோடு பல செயல்களைச் செய்தாலும் சில சமயங்களில் அவை தோல்வியடைவதைக் கண்டு மனம் கலங்க வேண்டாம். அவை தோல்வியடைவதும் உயிர்கள் மீது இருக்கும் இறைவனது மாபெரும் கருணையினால்தான். அதற்கும் பின்னால் இறைவன் அடியவருக்கு வழங்கும் அருள் இருக்கும்.