பாடல் #1811: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
ஒன்றது வாலே யுலப்பிலி தானாகி
நின்றது தாம்போ லுயிர்க்குயி ராய்நிலை
துன்றி யவையல்ல வாகுந் துணையென
நின்றது தான்விளை யாட்டென்னு நேயமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஒனறது வாலெ யுலபபிலி தானாகி
நினறது தாமபொ லுயிரககுயி ராயநிலை
துனறி யவையலல வாகுந துணையென
நினறது தானவிளை யாடடெனனு நெயமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஒன்று அதுவாலே உலப்பு இலி தான் ஆகி
நின்று அது தாம் போல் உயிர்க்கு உயிராய் நிலை
துன்றி அவை அல்ல ஆகும் துணை என
நின்று அது தான் விளையாட்டு என்னும் நேயமே.
பதப்பொருள்:
ஒன்று (ஒன்றாக இருக்கின்ற) அதுவாலே (இறைசக்தியாலே) உலப்பு (அழிவு) இலி (இல்லாத) தான் (தாமே) ஆகி (அனைத்தும் ஆகி)
நின்று (நின்று) அது (அந்த இறை சக்தியே) தாம் (தன்னைப்) போல் (போலவே படைக்கின்ற) உயிர்க்கு (அனைத்து உயிர்களுக்கும்) உயிராய் (உள் இருக்கின்ற உயிராய்) நிலை (நிலை பெற்று)
துன்றி (அந்த உயிர்களுக்கு உள்ளேயே பொருந்தி இருந்தாலும்) அவை (அந்த உயிர்கள்) அல்ல (இல்லாத உடல்கள்) ஆகும் (அனைத்துமாகவும் இருக்கின்றது) துணை (உடலோடு சேர்ந்து இருக்கின்ற வரை உயிருக்கும், உயிர் நீங்கி அழியும் வரை உடலுக்கும் தாமே துணை) என (எனவும்)
நின்று (நின்று) அது (இதுவே) தான் (தமது) விளையாட்டு (மாபெரும் விளையாட்டு) என்னும் (என்று அழைக்கப்படும்) நேயமே (பேரன்பாகவும் இருக்கின்றது).
விளக்கம்:
பாடல் #1810 இல் உள்ளபடி அனைத்தும் ஒன்றாக இருக்கின்ற அழிவில்லாத பரம்பொருள் தாமே அனைத்தும் ஆகி நிற்கின்றது. அந்த இறை சக்தியே தன்னைப் போலவே படைக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் உள்ளிருக்கின்ற உயிர் சக்தியாய் நிலை பெற்று பொருந்தி நிற்கின்றது. அந்த உயிர்கள் இல்லாத உடல்கள் அனைத்துமாகவும் தாமே இருக்கின்றது. பிறவி எடுத்ததில் இருந்து உடலை விட்டு விட்டு இன்னொரு உடலை எடுக்கும் வரை உயிருக்கும், உயிர் நீங்கிய பின்பு மண்ணோடு மண்ணாகும் வரை உடலுக்கும் எப்போதும் விலகாத துணையாகவும் தாமே இருக்கின்றது. இதுவே பேரன்பு என்று அழைக்கப்படும் இறைவனின் மாபெரும் திரு விளையாட்டு ஆகும்.
அருமை அருமை