பாடல் #1810: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
தலையான மேனான்குந் தான் குருவாகு
மலையா வருவுரு வாகுஞ் சதாசிவம்
நிலையான கீனான்கும் நீடுரு வாகுந்
துலையா விவைமுற்று மாயல்ல தொன்றே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தலையான மெனானகுந தான குருவாகு
மலையா வருவுரு வாகுஞ சதாசிவம
நிலையான கீனானகும நீடுரு வாகுந
துலையா விவைமுறறு மாயலல தொனறெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தலை ஆன மேல் நான்கும் தான் குரு ஆகும்
அலையாத அருவுரு ஆகும் சதா சிவம்
நிலையான கீழ் நான்கும் நீடு உரு ஆகும்
துலையாத இவை முற்றும் ஆய் அல்லது ஒன்றே.
பதப்பொருள்:
தலை (ஆதி முதல்வன்) ஆன (ஆக இருக்கின்ற) மேல் (அனைத்திற்கு மேலாகிய அசையா சக்தியாகிய பரம்பொருளே) நான்கும் (நான்கு உயர் தத்துவங்களாகிய சிவம், சக்தி, நாதம், விந்து) தான் (ஆக தாமே இருந்து) குரு (அனைத்திற்கும் குருநாதராக) ஆகும் (வழிகாட்டுகின்றது)
அலையா (அந்த அசையா சக்தியாகிய இறை அருளே) அருவுரு (உருவமில்லாத உருவம்) ஆகும் (ஆகிய) சதாசிவம் (சதாசிவமூர்த்தியாக நடுவில் நின்று)
நிலை (ஆதாரம்) ஆன (ஆகி) கீழ் (உயிர்களுக்காக உருவாகுகின்ற உலகமாகிய கீழ் தத்துவத்தில்) நான்கும் (பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நால்வரின் தொழில்களை செய்து) நீடு (அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்திலும் நீண்டு பரவி இருக்கின்ற) உரு (உயிர்களின் உருவங்கள்) ஆகும் (ஆக இருக்கின்றது)
துலையா (எப்போதும் அழியாத) இவை (இந்த இறை சக்திகள்) முற்றும் (உயிர்களின் வினை முற்றுப் பெற்று இறைவனை அடையும் வரை) ஆய் (உருவம் உள்ளதாகவும்) அல்லது (இல்லாததாகவும்) ஒன்றே (இருப்பது அசையா சக்தியாகிய பரம்பொருள் ஒன்றே ஆகும்).
விளக்கம்:
ஆதி முதல்வனாக இருக்கின்ற அனைத்திற்கு மேலாக இருக்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளே முதன்மையான உயர் தத்துவங்களாகிய சிவம், சக்தி, நாதம், விந்து ஆகிய நான்கிற்கும் குருநாதராக வழி காட்டுகின்றது. அந்த அசையா சக்தியாகிய பரம்பொருளே அருவுருவமாகவும் நடுவில் நிற்கின்றது. அந்த பரம்பொருளே ஆதாரமாக நின்று உயிர்களுக்காக உருவாகுகின்ற உலகமாகிய கீழ் தத்துவத்தில் பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நால்வரின் தொழில்களை செய்து அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உயிர்களின் உருவங்களாக நீண்டு பரவி இருக்கின்றது. அழியாத இந்த இறை சக்திகள் உயிர்களின் வினை முற்றுப் பெற்று இறைவனை அடையும் வரை உருவம் உள்ளதாகவும் உருவம் இல்லாததாகவும் இருப்பது அசையா சக்தியாகிய பரம்பொருள் ஒன்றே ஆகும்.