பாடல் #1809: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
தானே படைத்திடுந் தானே யளித்திடுந்
தானே துடைத்திடுந் தானே மறைத்திடுந்
தானே யிவைசெய்து தான்முத்தி தந்திடுந்
தானே வியாபித்த தலைவனு மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தானெ படைததிடுந தானெ யளிததிடுந
தானெ துடைததிடுந தானெ மறைததிடுந
தானெ யிவைசெயது தானமுததி தநதிடுந
தானெ வியாபிதத தலைவனு மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைத்திடும்
தானே இவை செய்து தான் முத்தி தந்திடும்
தானே வியாபித்த தலைவனும் ஆமே.
பதப்பொருள்:
தானே (ஆதியிலிருந்து தானாகவே இருக்கின்ற பரம்பொருளான இறை சக்தியின் அருளே) படைத்திடும் (அண்ட சராசரங்களில் உள்ள அனைத்தையும் உருவாக்குகின்றது) தானே (அதுவே) அளித்திடும் (ஆசைகளை அனுபவித்து முடிக்கும் வரை உயிர்களை காத்து அதனதன் ஆசைகளுக்கு ஏற்ப அனுபவிக்கும் படி அளிக்கின்றது)
தானே (அதுவே) துடைத்திடும் (வினை முடிந்த உயிர்களை அழித்து உலகத்தில் இருந்து நீக்குகின்றது) தானே (அதுவே) மறைத்திடும் (தாம் அனைத்துக்கும் உள்ளே இருப்பதை மறக்கருணையினால் மறைக்கின்றது)
தானே (இறையருளாகிய ஒன்றே) இவை (இவை அனைத்தையும்) செய்து (செய்து) தான் (அதை முழுவதும் அனுபவித்து முடித்த உயிர்களுக்கு அதுவே) முத்தி (முக்தி நிலையையும்) தந்திடும் (தந்து அருளுகின்றது)
தானே (இவ்வாறு தாமாகவே) வியாபித்த (அனைத்திலும் கலந்து பரவியிருக்கின்ற இறையருளே) தலைவனும் (அனைத்திற்கும் தலைவனாகவும்) ஆமே (இருக்கின்றது).
விளக்கம்:
ஆதியிலிருந்து தானாகவே இருக்கின்ற பரம்பொருளான இறை சக்தியின் அருளே அண்ட சராசரங்களில் உள்ள அனைத்தையும் உருவாக்குகின்றது, அதுவே ஆசைகளை அனுபவித்து முடிக்கும் வரை உயிர்களை காத்து அதனதன் ஆசைகளுக்கு ஏற்ப அனுபவிக்கும் படி அளிக்கின்றது, அதுவே வினை முடிந்த உயிர்களை அழித்து உலகத்தில் இருந்து நீக்குகின்றது, அதுவே தாம் அனைத்துக்கும் உள்ளே இருப்பதை மறக்கருணையினால் மறைக்கின்றது. இறையருளாகிய ஒன்றே இவை அனைத்தையும் செய்து அதை முழுவதும் அனுபவித்து முடித்த உயிர்களுக்கு அதுவே முக்தி நிலையையும் தந்து அருளுகின்றது. இவ்வாறு தாமாகவே அனைத்திலும் கலந்து பரவியிருக்கின்ற இறையருளே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றது.