பாடல் #1808: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
அருட்கண்ணில் லாதார்க் கரும்பொருள் தோன்றா
வருட்கண்ணுள் ளோர்க்கெதிர் தோன்று மரனே
யிருட்கண்ணி னோர்க்கிங் கிரவியுந் தோன்றாத்
தெருட்கண்ணி னோர்க்கெங்குஞ் சீரொளி யாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அருடகணணில லாதாரக கருமபொருள தொனறா
வருடகணணுள ளொரககெதிர தொனறு மரனெ
யிருடகணணி னொரககிங கிரவியுந தொனறாத
தெருடகணணி னொரககெஙகுஞ சீரொளி யாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அருள் கண் இல்லாதார்க்கு அரும் பொருள் தோன்றா
அருள் கண் உள்ளோர்க்கு எதிர் தோன்றும் அரனே
இருள் கண்ணினோர்க்கு இங்கு இரவியும் தோன்றா
தெருள் கண்ணினோர்க்கு எங்கும் சீர் ஒளி ஆமே.
பதப்பொருள்:
அருள் (இறைவனின் அருள் பெற்ற) கண் (ஞானக் கண்) இல்லாதார்க்கு (இல்லாதவர்களுக்கு) அரும் (எளிதில் பார்க்க இயலாதபடி அனைத்திலும் மறைந்து நிற்கின்ற) பொருள் (பரம்பொருள்) தோன்றா (தோன்றுவது இல்லை)
அருள் (இறைவனின் அருள் பெற்ற) கண் (ஞானக் கண்) உள்ளோர்க்கு (உள்ளவர்களின்) எதிர் (கண்ணுக்கு எதிரில்) தோன்றும் (தோன்றுகின்றான்) அரனே (இறைவன்)
இருள் (மாயையினால் இருண்ட) கண்ணினோர்க்கு (கண்களை உடையவர்களுக்கு) இங்கு (இந்த உலகத்தில் எங்கும்) இரவியும் (இயற்கையில் சூரியனின் வெளிச்சம் தெரிந்தாலும் அந்த வெளிச்சம் காட்டுகின்ற பொருள்களுக்குள் மறைந்து இருக்கின்ற இறைவனின் பேரருள்) தோன்றா (தோன்றுவதில்லை)
தெருள் (மாயை நீங்கி உண்மை அறிவில் தெளிவு பெற்ற) கண்ணினோர்க்கு (கண்களை உடையவர்களுக்கு) எங்கும் (எங்கும்) சீர் (செம்மையாகத் தெரிகின்ற) ஒளி (பேரொளியாக) ஆமே (இறைவன் இருக்கின்றான்).
விளக்கம்:
இறைவனின் அருள் பெற்ற ஞானக் கண் இல்லாதவர்களுக்கு எளிதில் பார்க்க இயலாதபடி அனைத்திலும் மறைந்து நிற்கின்ற பரம்பொருள் தோன்றுவது இல்லை. இறைவனின் அருள் பெற்ற ஞானக் கண் உள்ளவர்களின் கண்ணுக்கு எதிரில் தோன்றுகின்றான் இறைவன். மாயையினால் இருண்ட கண்களை உடையவர்களுக்கு இந்த உலகத்தில் எங்கும் இயற்கையில் சூரியனின் வெளிச்சம் தெரிந்தாலும் அந்த வெளிச்சம் காட்டுகின்ற பொருள்களுக்குள் மறைந்து இருக்கின்ற இறைவனின் பேரருள் தோன்றுவதில்லை. மாயை நீங்கி உண்மை அறிவில் தெளிவு பெற்ற கண்களை உடையவர்களுக்கு எங்கும் செம்மையாகத் தெரிகின்ற பேரொளியாக இறைவன் இருக்கின்றான்.