பாடல் #1804: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
அகம்புகுந் தானடி யேற்கரு ளாலே
யகம்புகுந் துந்தெரி யானரு ளில்லோர்க்
ககம்புகுந் தானந்த மாக்கிச் சிவமா
யகம்புகுந் தானந்தி யானந்தி யாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அகமபுகுந தானடி யெறகரு ளாலெ
யகமபுகுந துநதெரி யானரு ளிலலொரக
ககமபுகுந தானநத மாககிச சிவமா
யகமபுகுந தானநதி யானநதி யாமே.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே
அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு
அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவம் ஆய்
அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி ஆமே.
பதப்பொருள்:
அகம் (எமக்குள்) புகுந்தான் (புகுந்தான் இறைவன்) அடியேற்கு (அடியேனின் மேல் வைத்த) அருளாலே (அருளாலே)
அகம் (எமக்குள்) புகுந்தும் (புகுந்து இருந்தாலும்) தெரியான் (அவன் தெரிவது இல்லை) அருள் (அவனது அருள்) இல்லோர்க்கு (இல்லாதவர்களுக்கு)
அகம் (எமக்குள்) புகுந்து (புகுந்து) ஆனந்தம் (எம்மை பேரின்பமாக) ஆக்கி (மாற்றி) சிவம் (சிவமாகவே) ஆய் (ஆக்கி விட்டான்)
அகம் (எமக்குள்) புகுந்தான் (புகுந்தவன்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) ஆனந்தி (அவனே பேரின்பத்தின் வடிவம்) ஆமே (ஆகும்).
விளக்கம்:
பாடல் #1803 இல் உள்ளபடி எமக்குள் புகுந்த இறைவனின் திருவருளை யாம் அவனருளால் காப்பாற்றி அவன் எமக்குள் புகுந்து கொண்டதை கண்டுகொண்டோம். அவ்வாறு இறைவன் தமக்குள் புகுந்து கொண்ட திருவருளை காப்பாற்றிக் கொள்ளும் அருள் இல்லாதவர்களுக்கு அவன் தெரிவதில்லை. எமக்குள் புகுந்த அந்த இறைவன் எம்மை பேரின்பமாக மாற்றி சிவமாகவே ஆக்கி விட்டு எமக்குள் குருநாதனாக வீற்றிருந்து பேரின்பத்தின் வடிவமாக அருளுகின்றான்.