பாடல் #1675: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)
தானறி தன்மையுந் தானவ னாதலு
மேனைய வச்சிவ மான வியற்கையுந்
தானுறு சாதகர முத்திரை சாத்தலு
மோனமு நந்தி பதமுத்தி பெற்றதே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தானறி தனமையுந தானவ னாதலு
மெனைய வசசிவ மான வியறகையுந
தானுறு சாதகர முததிரை சாததலு
மொனமு நநதி பதமுததி பெறறதெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தான் அறி தன்மையும் தான் அவன் ஆதலும்
ஏனைய அச் சிவம் ஆன இயற்கையும்
தான் உறு சாதகர் முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பத முத்தி பெற்ற அதே.
பதப்பொருள்:
தான் (தான் யார் என்பதை) அறி (அறிந்து கொண்ட) தன்மையும் (தன்மையும்) தான் (தாமே) அவன் (சிவ பரம்பொருளாக) ஆதலும் (ஆகி இருக்கின்ற தன்மையும்)
ஏனைய (தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் மற்றும் நிகழ்கின்ற அனைத்தும்) அச் (அந்த மூலப் பரம்பொருளாகிய) சிவம் (சிவம்) ஆன (ஆகவே இருக்கின்ற) இயற்கையும் (தன்மையும்)
தான் (தாம்) உறு (வீற்றிருக்கின்ற) சாதகர் (சாதகத்தின் நிலையையே) முத்திரை (முத்திரையாக) சாத்தலும் (இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும்)
மோனமும் (மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும் ஆகிய இவை அனைத்தும்) நந்தி (குரு நாதராக இருக்கின்ற இறைவனின்) பத (திருவடிகளை அடைந்து) முத்தி (முக்தியை) பெற்ற (பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கு) அதே (அடையாளங்கள் ஆகும்).
விளக்கம்:
தான் யார் என்பதை அறிந்து கொண்ட தன்மையும், தாமே சிவ பரம்பொருளாக ஆகி இருக்கின்ற தன்மையும், தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் மற்றும் நிகழ்கின்ற அனைத்தும் அந்த மூலப் பரம்பொருளாகிய சிவம் ஆகவே இருக்கின்ற தன்மையும், தாம் வீற்றிருக்கின்ற சாதகத்தின் நிலையையே முத்திரையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும், மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும், ஆகிய இவை அனைத்தும் குரு நாதராக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை அடைந்து முக்தியை பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கு அடையாளங்கள் ஆகும்.