பாடல் #1526

பாடல் #1526: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவ
னணுகிய வொன் றறியாத வொருவ
னணுகு முலகெங்கு மாவியு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நணுகினு ஞானக கொழுநதொனறு நலகும
பணிகிலும பனமலர தூவிப பணிவ
னணுகிய வொன றறியாத வொருவ
னணுகு முலகெஙகு மாவியு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும்
பணிகிலும் பல் மலர் தூவி பணிவன்
அணுகிய ஒன்று அறியாத ஒருவன்
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே.

பதப்பொருள்:

நணுகினும் (அருள் சக்தியை நெருங்கிச் சென்று அடைந்தால்) ஞான (ஞானத்தின்) கொழுந்து (உச்சமாக இருக்கின்ற) ஒன்று (பேரறிவு ஞானத்தை) நல்கும் (அந்த அருட் சக்தியே வழங்குவாள்)
பணிகிலும் (அப்படி இல்லாமல் அருள் சக்தியை ஞானத்தால் நெருங்கி அடைய முடியாவிட்டாலும்) பல் (பல விதமான) மலர் (மலர்களை) தூவி (தூவி) பணிவன் (வணங்கி வழிபடும் போது அந்த வழிபாட்டின் பயனால்)
அணுகிய (நம்மை நெருங்கி வரும்) ஒன்று (அருட் சக்தியை) அறியாத (தன் அறிவால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாத) ஒருவன் (சாதகனாக ஒருவன் இருந்தாலும் அருள் சக்தி வழங்கும் ஞானத்தால் அறியும் போது)
அணுகும் (அவன் இருக்கின்ற) உலகு (உலகம் மட்டுமின்றி அனைத்து உலகங்கள்) எங்கும் (எங்கும்) ஆவியும் (இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் நிற்கின்ற ஆன்மாவாக) ஆமே (அந்த அருட் சக்தியே இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்ளலாம்).

விளக்கம்:

அருள் சக்தியை நெருங்கிச் சென்று அடைந்தால் ஞானத்தின் உச்சமாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தை அந்த அருட் சக்தியே வழங்குவாள். அப்படி இல்லாமல் அருள் சக்தியை ஞானத்தால் நெருங்கி அடைய முடியாவிட்டாலும் பல விதமான மலர்களை தூவி வணங்கி வழிபடும் போது அந்த வழிபாட்டின் பயனால் நம்மை நெருங்கி வரும் அருட் சக்தியை தன் அறிவால் முழுவதுமாக அறிந்து கொள் முடியாத சாதகனாக ஒருவன் இருந்தாலும் அருள் சக்தி வழங்கும் ஞானத்தால் அறியும் போது அவன் இருக்கின்ற உலகம் மட்டுமின்றி அனைத்து உலகங்கள் எங்கும் இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் நிற்கின்ற ஆன்மாவாக அந்த அருட் சக்தியே இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கருத்து:

யோகத்தாலும் ஞானத்தினாலும் இறைவியை அடைய முடியாதவர்கள் கூட சரியை மற்றும் கிரியையின் மூலமே இறைவியை அடைந்து விட முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.