பாடல் #1458

பாடல் #1458: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

ஊழி தோறூழி யுணர்ந்தவர்க் கல்லது
யூழி தோறூழி யுணரவுந் தானொட்டா
ராழி யமரு மரியய னென்றுளோ
ரூழி முயன்று மோருச்சியுள் ளானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஊழி தொறூழி யுணரநதவரக கலலது
யூழி தொறூழி யுணரவுந தானொடடா
ராழி யமரு மரியய னெனறுளொ
ரூழி முயனறு மொருசசியுள ளானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஊழி தோறும் ஊழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழி தோறும் ஊழி உணரவும் தான் ஒட்டார்
ஆழி அமரும் அரி அயன் என்று உளோர்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உள்ளானே.

பதப்பொருள்:

ஊழி (ஊழிக்காலம்) தோறும் (ஒவ்வொன்றிலும்) ஊழி (ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை) உணர்ந்தவர்க்கு (யோகத்தின் வழியால் சென்று தமக்குள் உணர்ந்தவர்களை) அல்லது (தவிர வேறு யாராலும் உணர இயலாது)
ஊழி (ஊழிக்காலம்) தோறும் (ஒவ்வொன்றிலும்) ஊழி (ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை) உணரவும் (தமக்குள் உணர்ந்து கொண்ட யோகியர்கள்) தான் (அந்த ஊழிக்காலத்தோடு தானும்) ஒட்டார் (ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பார்கள்)
ஆழி (பாற் கடலில்) அமரும் (பள்ளி கொண்டு அமர்ந்து இருக்கும்) அரி (திருமால்) அயன் (அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன்) என்று (என்று இருக்கின்ற) உளோர் (தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கின்றார்கள்)
ஊழி (ஊழிக்காலம்) முயன்றும் (எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும்) ஓர் (அதனால் அழிக்க முடியாத ஒரு மாபெரும்) உச்சி (உயரத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கின்ற அரனாக) உள்ளானே (இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்:

ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை யோகத்தின் வழியால் சென்று தமக்குள் உணர்ந்தவர்களை தவிர வேறு யாராலும் உணர இயலாது. ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை தமக்குள் உணர்ந்து கொண்ட யோகியர்கள் அந்த ஊழிக்காலத்தோடு தானும் ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பார்கள். பாற் கடலில் பள்ளி கொண்டு அமர்ந்து இருக்கும் திருமால் அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன் என்று இருக்கின்ற தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கின்றார்கள். ஊழிக்காலம் எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும் அதனால் அழிக்க முடியாத ஒரு மாபெரும் உயரத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கின்ற அரனாக இறைவன் இருக்கின்றான்.

கருத்து: பாடல் #1457 இல் உள்ளபடி யோகம் செய்து தமக்குள் இறைவனை உணர்ந்து அவனை மட்டுமே சார்ந்து இருக்கின்றவர்களை ஊழிக்காலம் எவ்வளவு முயன்று பார்த்தாலும் அழிக்க முடியாத அளவு பாதுகாக்கின்றான் இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.