பாடல் #1312: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)
சட்கோணம் தன்னிற் சிரீயிரீ தானிட்டு
வக்கோண மாறின் றலையிலிரீங் காரமிட்
டெக்கோண முஞ்சூழெ ழில்வட்ட மிட்டுப்பின்
மிக்கீரெட் டக்கர மம்முதல் மேலிடே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சடகொணந தனனிற சிரீயிரீ தானிடடு
வககொண மாறின றலையிலிரீங காரமிட
டெககொண முஞசூழெ ழிலவடட மிடடுபபின
மிககீரெட டககர மமமுதல மெலிடெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சட் கோணம் தன்னில் சிரீம் யிரீம் தான் இட்டு
அக் கோணம் ஆறின் தலையில் இரீங்காரம் இட்டு
எக் கோணமும் சூழ எழில் வட்டம் இட்டுப் பின்
மிக்க ஈர் எட்டு அக்கரம் அம் முதல் மேலிடே.
பதப்பொருள்:
சட் (ஆறு) கோணம் (முக்கோணங்களாக அமைத்த) தன்னில் (இரண்டு பெரிய முக்கோணங்களின் நடுவில்) சிரீம் (ஸ்ரீம்) யிரீம் (ஹ்ரீம்) தான் (ஆகிய பீஜங்களை) இட்டு (எழுதி விட்டு)
அக் (அந்த) கோணம் (முக்கோணங்கள்) ஆறின் (ஆறுக்கும்) தலையில் (முனையில்) இரீங்காரம் (ஹ்ரீம் பீஜத்தை) இட்டு (எழுதி விட்டு)
எக் (அனைத்து) கோணமும் (முக்கோணங்களும்) சூழ (சூழ்ந்து இருக்கும் படி) எழில் (அழகான) வட்டம் (வட்டமாக) இட்டுப் (வரைந்து விட்டு) பின் (பிறகு)
மிக்க (அதற்கு மேலே) ஈர் (இரண்டும்) எட்டு (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு) அக்கரம் (அட்சரங்களாக) அம் (ஹம்) முதல் (முதலாகிய பதினாறு உயிர் எழுத்துக்களையும்) மேலிடே (மேலே சுற்றி இருக்கும் படி எழுத வேண்டும்).
விளக்கம்:
பாடல் #1311 இல் உள்ளபடி செப்புத் தகட்டில் ஆறு கோணங்கள் வரும்படி இரண்டு பெரிய முக்கோணங்களை வரைந்து அதற்கு நடுவில் ‘ஸ்ரீம்’ மற்றும் ‘ஹ்ரீம்’ ஆகிய இரண்டு பீஜ எழுத்துக்களை எழுத வேண்டும். அந்த ஆறு கோணங்களுக்கும் தலைப்பகுதியாக இருக்கின்ற ஒவ்வொரு முனையிலும் ‘ஹ்ரீம்’ பீஜ எழுத்தை எழுத வேண்டும். இந்த ஆறு கோணங்களையும் சூழ்ந்து இருக்கும் படி அழகான வட்டமாக வரைய வேண்டும். அந்த வட்டத்திற்கு மேல் ஆதி காலத் தமிழ் எழுத்துக்களில் ‘ஹம்’ முதலாக இருக்கும் பதினாறு அட்சர எழுத்துக்களை சுற்றி இருக்கும் படி எழுத வேண்டும்.
குறிப்பு புவானபதி சக்கரம் வரையும் முறை இப்பாடலில் ஆரம்பித்து 3 பாடல்களில் வருகிறது. இப்பாடலுடன் கொடுக்கப்பட்ட புவானபதி சக்கரம் படம் முழுமையான படம் இல்லை அடுத்த 2 பாடல்களிலும் வரையும் முறை தொடரும்.