பாடல் #674

பாடல் #674: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற வையாண்டின் மாலகு வாகுமே.

விளக்கம்:

அணிமா என்கின்ற சக்தியானது கைவரப் பெற்ற பின்னும் விட்டுவிடாமல் யோகப் பயிற்சி செய்து முடிந்த ஐந்தாண்டு காலமும் தான் பயிற்சி செய்யும் யோகத்தின் வழியிலிருந்து மாறாது இருக்க இலகிமா என்கின்ற சித்தியும் கிடைக்கும்.

கருத்து: அணிமா என்னும் சித்தி கிடைத்தபின் ஐந்தாண்டுகள் இடைவிடாமல் யோகப் பயிற்சி செய்தால் இலகிமா என்னும் சித்தி கிடைக்கும்.

பாடல் #675

பாடல் #675: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

விளக்கம்:

இலகிமா என்னும் சித்தி கிடைத்து இறைவனை தரிசித்தபின் தாமே ஒளி உடம்பாய் மாறி ஒளி உடம்போடு இருக்கப் பால் போன்ற வெண்மையான ஒளியாகி எங்கும் பரந்து இருக்கும் பேரொளியாய் உண்மைப் பொருளாகவும் உள்ள இறைவனை தரிசிக்கலாம்.

கருத்து: இலகிமா சித்தியடைந்தபின் வெண்மையான ஒளி உடம்பாய் மாறி உண்மைப் பொருளான இறைவனை தரிசிக்கலாம்.

பாடல் #676

பாடல் #676: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே.

விளக்கம்:

அணிமாவும் இலகிமாவும் கிடைத்தபின் உண்டான உண்மை ஞானமாகிய பேரறிவை உணர்த்தும் அருள் சக்தியுடன் தமக்குள் தத்துவமாய் இருக்கும் இறைவனுடன் கலந்து ஒரு வருடம் இருந்தால் மாயை விலகி மறைந்திருந்த மகிமா எனும் சித்தி நமக்குக் கிடைக்கும்.

கருத்து: உண்மை ஞானமாகிய பேரறிவும் தமக்குள் தத்துவமாய் இருக்கும் இறைவனுடன் கலந்து ஒரு வருடம் இருந்தால் மகிமா எனும் சித்தி கிடைக்கும்.

பாடல் #677

பாடல் #677: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றபின்
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று அது சகஸ்ரதளத்தோடு கலந்து ஜோதியானதை அகக் கண்ணால் கண்டபின் மகிமா எனும் சித்தி கிடைக்கும். அதன்பின் வரும் காலங்கள் நமது ஆயுள் காலத்தை அழிப்பது இல்லை. உலகத்திலுள்ள அனைத்தையும் விட பெரியதாகிய காலத்தை மகிமா எனும் சித்தியால் வென்று காலத்தால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அவ்வாறு இருக்கும் காலங்களை நமது எண்ணப்படி அமைக்கலாம்.

கருத்து: சகஸ்ரதளத்தில் ஜோதி தரிசனம் கண்டபின் மகிமா எனும் சித்தி கைவரப்பெற்று காலத்தை வெல்லலாம்.

பாடல் #678

பாடல் #678: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தன்வழி யாகத் தழைத்திடு ஞானமுந்
தன்வழி யாகத் தழைத்திடு வையகந்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்
தன்வழி தன்னரு ளாகிநின் றானே.

விளக்கம்:

தான் என்னும் அகங்காரத்தை விட்டு தானே சிவம் என்பதை உணர்ந்தவன் மூலம் உலகத்தார் ஞானம் செழித்து ஓங்கும். உலகமும் செழிப்புற்று விளங்கும். அவன் வழியால் செழித்த பொருட்களெல்லாம் அவன் வசப்பட்டு நிற்கும். உலகத்தைவிட பெரியவனாக அவன் இருப்பதால் மகிமா எனும் சித்தியைக் குறிக்கின்றது.

கருத்து: மகிமா சித்தி கைவரப் பெற்றவரின் அருளால் உலகத்தில் ஞானமும் வளங்களும் செழித்து இருக்கும்.

பாடல் #679

பாடல் #679: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.

விளக்கம்:

நம்மைக் கட்டுப்படுத்தும் பஞ்ச பூதங்கள் முதலான பல்வேறு தத்துவங்களை உணர்ந்து அனைத்திற்கும் தலைவியான அருள் சக்தியுடன் மனதை ஒருமுகப்படுத்தி வைத்து அதிலேயே லயித்து யோகப் பயிற்சியில் ஒரு வருடம் இருந்தால் அந்தத் தத்துவங்களை வெல்லலாம். அவ்வாறு அனைத்து தத்துவங்களையும் வென்றவருக்கு பிராத்தி எனும் சித்தி கிடைக்கும்.

கருத்து: உலகத் தத்துவங்களிலிருந்து விலகி ஒரு வருடம் யோகப் பயிற்சி செய்தால் பிராத்தி எனும் சித்தி கிடைக்கும். பிராப்தி என்பது தூரத்திலிருப்பதை இருக்கும் இடத்திலேயே பார்க்கவும் மனதினால் நினைத்தவை யாவையும் அடையவும் பெறும் ஆற்றல்.

பாடல் #680

பாடல் #680: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று அது சகஸ்ரதளத்தோடு கலந்து ஜோதியானதை அகக் கண்ணால் கண்டபின் கரிமா எனும் சித்தி கிடைக்கும். அதன்பின் வரும் காலங்கள் நமது ஆயுள் காலத்தை அழிப்பது இல்லை. அவ்வாறு கரிமா எனும் சித்தியால் காலத்தை வெல்பவர்கள் மலைபோல அசைக்கமுடியாமல் இருப்பார்கள்.

கருத்து: சகஸ்ரதளத்தில் ஜோதி தரிசனம் கண்டபின் கரிமா எனும் சித்தி கைவரப்பெற்று காலத்தால் அசைக்கமுடியாமல் இருக்கலாம்.

பாடல் #681

பாடல் #681: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே.

விளக்கம்:

கரிமா சித்தி பெற்றவர்களுக்கு காலங்கள் அழிவது இல்லை. காலங்கள் புதிதாக வருவதும் இல்லை. இறப்பு இல்லை. ஆகவே பிறப்பும் இல்லை. அவர்கள் நிகழ்காலத்திலேயே எப்போதும் தனக்குள் இருக்கும் ஒளியுடனே லயித்து எவற்றாலும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.

கருத்து: கரிமா சித்தி பெற்றவர்களுக்கு காலத்தினால் பாதிப்புகள் வருவது இல்லை.

பாடல் #682

பாடல் #682: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாங்
குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்
விரிந்த பரகாய மேவலு மாமே.

விளக்கம்:

இறை சக்தியை நமக்குள்ளே உணர்ந்து அதனோடு ஒரு ஆண்டு மனதை ஒருமுகப்படுத்தி ஒன்றியிருந்தால் நம்மைக் கட்டுப்படுத்தும் பஞ்ச பூதங்கள் முதலான பல்வேறு தத்துவங்கள் அனைத்தும் விலகிவிடும். அவ்வாறு விலகியபின் எதையும் நினைத்தவுடன் அதாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் பிராகாமியம் என்னும் சித்தி கிடைக்கும்.

கருத்து: இறை சக்தியோடு ஒரு ஆண்டு ஒன்றியிருந்தால் உலகத் தத்துவங்களிலிருந்து விலகி பிராகாமியம் எனும் சித்தியை அடையலாம்.

பாடல் #683

பாடல் #683: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னே யுடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே.

விளக்கம்:

எதையும் நமக்கு உணரவைக்கும் சிவத்தின் ஒளி நமது புருவ மத்தியில் ஆக்ஞா ஒளியாக இருப்பதை யாரும் அறியவில்லை. மூலாதாரத்திலிருக்கும் அக்கினியை மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளிமயமாக பார்க்க முடிந்தவர்களுக்கு ஜோதியாய் இருக்கும் சதாசிவத்தை தரிசிப்பதும் அதன் மூலம் முக்தியை அடைவதும் எளிதாகும்.

கருத்து: மூலாதாரத்திலிருக்கும் அக்கினியை சகஸ்ரதளத்திற்கு கொண்டு செல்ல முடிந்தவர்களுக்கு ஜோதி தரிசனமும் முக்தியும் எளிதாகும்.