பாடல் #1582: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)
சித்த மியாவையுஞ் சிந்தித் திருந்தாரு
மத்த னுணர்த்து வதாகு மருளாலே
சித்த மியாவையுந் திண்சிவ மாண்டக்கா
லத்தனு மவ்விடத் தேயமர்ந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சிதத மியாவையுஞ சிநதித திருநதாரு
மதத னுணரதது வதாகு மருளாலெ
சிதத மியாவையுந திணசிவ மாணடககா
லததனு மவவிடத தெயமரந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சித்தம் யாவையும் சிந்தித்து இருந்தாரும்
அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே
சித்தம் யாவையும் திண் சிவம் ஆண்ட கால்
அத்தனும் அவ் இடத்தே அமர்ந்தானே.
பதப்பொருள்:
சித்தம் (தங்களின் எண்ணத்தில்) யாவையும் (முழுவதும் இறைவனையே வைத்து) சிந்தித்து (அவனையே சிந்தித்து) இருந்தாரும் (இருக்கின்ற அடியவர்களுக்கு)
அத்தன் (இறைவனே தந்தையாக) உணர்த்துவது (வந்து அனைத்தையும் வழி காட்டி உணர வைப்பது) ஆகும் (எதனால் என்றால்) அருளாலே (அவனது திருவருளாலே ஆகும்)
சித்தம் (அப்போது அடியவரின் எண்ணங்கள்) யாவையும் (முழுமையும்) திண் (உறுதியாக பற்றிக் கொண்டு) சிவம் (சிவப் பரம்பொருளே) ஆண்ட (ஆட்கொள்ளும்) கால் (காலத்தில்)
அத்தனும் (தந்தையாக இருந்து வழி காட்டுகின்ற இறைவனும்) அவ் (அடியவரின் எண்ணங்கள்) இடத்தே (இருக்கின்ற சித்தத்திலேயே) அமர்ந்தானே (குருவாக வந்து வீற்றிருப்பான்).
விளக்கம்:
தங்களின் எண்ணத்தில் முழுவதும் இறைவனையே வைத்து அவனையே சிந்தித்து இருக்கின்ற அடியவர்களுக்கு இறைவனே தந்தையாக வந்து அனைத்தையும் வழி காட்டி உணர வைப்பது எதனால் என்றால் அவனது திருவருளாலே ஆகும். அப்போது அடியவரின் எண்ணங்கள் முழுமையும் உறுதியாக பற்றிக் கொண்டு சிவப் பரம்பொருளே ஆட்கொள்ளும் காலத்தில் தந்தையாக இருந்து வழி காட்டுகின்ற இறைவனும் அடியவரின் எண்ணங்கள் இருக்கின்ற சித்தத்திலேயே குருவாக வந்து வீற்றிருப்பான்.