பாடல் # 812

பாடல் # 812 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர்தம் மதியிலுள் ளானே.

விளக்கம் :

தன்னை வழிபடும் நல்வினை இல்லாதவர்க்கும் அவர் தலையில் மறைந்தே இறைவன் இருக்கின்றான். தன்னை ஏதேனும் ஒரு வழியில் வெளிப்பக்கமாக வைத்து வழிபடுகின்றவர்களுக்கும் அவ்வழியாய் நின்று இறைவன் அருள் செய்கின்றான். தன்னை மானசீகமாய் ஆதாரங்களில் வைத்து பாவிக்கின்றவர்கட்கு அப்பாவனையிலே இறைவன் விளங்குகின்றான். யோகத்தைச் செய்கின்றவர்களுக்கு அவர்களது உணர்வு வடிவாய் இறைவன் நிற்கின்றான்.

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன? - ஆன்மிகம்

பாடல் # 813

பாடல் # 813 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.

விளக்கம் :

சந்திரனில் இருந்து வரும் கதிர்கள் பதினாறு. அது போல் கழுத்துப் பகுதி விசுத்திச் சக்கரத்தில் இருந்து வரும் கதிர்கள் பதினாறாய் இருந்தும், உடம்பில் அந்தந்த இடங்களின் அதிபதியாய் 224 கதிர்களாய் இருந்தும், இயங்கும் இல்லமாகிய உடம்பினுள் வினைகளாய் உள்ள பகைவர்களை அவ்யோகியர் எதிர்சென்று போர் புரியாதவாறு தனது அருளாற்றலாகிய கணைகளைப் பொழிந்து கொண்டு இருக்கின்றான்.

பாடல் # 814

பாடல் # 814 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

இருந்தனள் சத்தியு மக்கலை சூழ
இருந்தனள் கன்னியு மந்நடு வாக
இருந்தனள் மானேர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.

விளக்கம் :

விசுத்திச்சக்கரத்தின் 16 கதிர்களின் நடுவே இறைவனின் சக்தி திருவருளோடு இருக்கின்றாள். மான்போல் விழிகளும் சந்திரன் போல் திருமுகமும் கொண்டு உடலில் இருந்து அமுதத்தைப் பொழிந்துகொண்டு அவற்றோடு தானும் இருக்கின்றாள்.

பாடல் # 815

பாடல் # 815 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகுங் குணமது தானே.

விளக்கம்:

திருவருளால் உடம்பில் உள்ள வெண்ணிறமான அமிர்தம் பொன்நிறமான மண்போல் இருக்கும் மூலத்திடம் சேர்ந்தால் அங்குப் பெருகி வழிந்து நிறைந்திருந்து உடம்புக்கு உறுதி தரும். ஐம்பூதங்களால் ஆன உடம்பில் கழிவுகள் ஏற்பாடாது. இது போல் உடம்பை காக்க வல்லவர்களுக்கு உடம்பு இளமையுடன் கொழுந்து போல் என்றும் பொலிவுடன் இருக்கும்.

Eklingji temple at Kumbhalgarh fort Rajasthan

பாடல் # 816

பாடல் # 816 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே.

விளக்கம் :

ஒரு பொருளுக்கும் அப்பொருளின் குணத்திற்கும் உள்ள சம்பந்தம் பிரிக்க முடியாது. அது போல ஆன்மாவின் குணமாய் ஒன்றாய் இருக்கும் திருவருள் சக்தி யோகத்தால் வெளிப்பட்டு யோகியோடு என்றும் உடனாய் சிவனோடு சேர்ந்து இருக்கும். கேசரி யோகம் அளிக்கும் உண்மை ஞானத்தின் வழியாகச் சிவனும் அவனிடத்தினின்றும் நீங்காதிருப்பான்.

பாடல் # 817

பாடல் # 817 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.

விளக்கம் :

கேசரி யோகப் பயிற்சியால் மூலாதாரத்தில் உள்ள பிராணனை உள்ளே நடுநாடியின் வழியாக மேல் எழுப்பி தலை உச்சியில் உள்ள சஹஸ்ரதளத்தில் சேர்க்க ஆயிரம் இதழ் தாமரை நன்கு விரிந்து உடலுடன் நெடுங்காலம் வாழலாம்.

பாடல் # 818

பாடல் # 818 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே.

விளக்கம் :

ஞான எண்ணத்துள் மனம் ஒடுங்கும் நிலை உள்ளதை உணர்ந்து கேசரி யோகத்தின் மூலம் கீழே செல்ல விடாமல் வைத்தால் உடம்பில் பகலில் உள்ள ஒளி போல குண்டலம் அணிந்த சிவபெருமான் தன் ஐந்தொழில்களை விட்டு அசைவின்றி அங்கே இருப்பான்.

பாடல் # 819

பாடல் # 819 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவும் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிகின்ற காலத்துப் பையகற் றீரே.

விளக்கம் :

வெளியில் செல்லும் மூச்சுக்காற்றை கேசரி யோகத்தின் மூலம் உள்ளே வைத்தால் வெளியே வராமல் உடம்பில் இருக்கின்ற அந்த மூச்சுக்காற்று உடம்பில் இருந்து உயிர் வெளியே செல்லாமல் காக்கும். வரும் காலத்தில் குண்டலி சக்தியின் தலையில் உள்ள பிரமரந்திரத்தை அடைய கற்றுக் கொள்வீர்கள்.

THE FIRST BOOK Chapter II On questions put by S’aunaka and other Rsis p. 3 1-5…

பாடல் # 820

பாடல் # 820 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்
மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்
கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக் காமே.

விளக்கம் :

உடலில் உள்ள மூலாதாரக் கதவு குதம் (எருவாய்) ஆகும். அதை கேசரி யோகத்தின் மூலம் இருகால்களால் அணைத்து சுருக்கினால் அபானன் அமுக்கப்படும். அபானன் தன் திசையை மாற்றிக் கொண்டு மேல் நோக்கிப் போகும். உயிர்ப்பை மாற்றி மேலே செல்லும் போது உடல் ஒளியுடன் விளங்கும். அபானன் நாடியினுள் மேலே எழும் போது மலங்கள் நிறைந்த உயிர் ஒளி உடையதாக இருக்கும்.

பாடல் # 821

பாடல் # 821 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
நலங்கிடும் கண்டத்து நாபியி னுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்ந்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே.

விளக்கம் :

உடலின் அடிவயிற்றில் தொப்புளுக்கு பின்புறம் இருக்கின்ற மூச்சுக்காற்றை மேல்நோக்கி செலுத்தி முகவாயைக் கழுத்தோடு சேர்த்து ஜாலந்திர பந்தம் என்கிற முறையில் சுருக்கிக் கொண்டு யோகத்தில் எண்ணங்களை நெற்றிக்கு நடுவில் வைத்து அமர்ந்திருந்தால் தலை உச்சியிலிருந்து சுரக்கும் அமிர்தமானது அடி வயிற்றுக்கு சென்று அங்கிருக்கும் நெருப்பில் பொசுங்கிப் போகாமல் நெற்றியிலேயே நிலைத்து நிற்கும். அவ்வாறு அமிர்தம் நின்றால் கிடைக்கும் பெரும் பயன்களைச் சொல்லவும் முடியாது.