பாடல் #446

பாடல் #446: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

விளக்கம்:

ஏழு உலகங்களைப் படைத்து அவை தம் வினைகளைத் தீர்த்தபின் அவற்றை அழித்து தம்மோடு மீண்டும் சேர்த்துக் கொண்டு அருளுகின்றவன் இறைவன். ஏழு உலகங்களும் தன் தொழில்களை செய்ய பலவித தேவர்களையும் படைத்து அருளினான். பலவித உயிர்களைப் படைத்து தம் வினைகளைத் தீர்த்தபின் அவற்றை அழித்து தம்மோடு மீண்டும் சேர்த்துக் கொண்டு அருளுகின்றவன் இறைவன். அந்த உயிர்கள் தன்னை நாடி வரும்போது அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகவும் நின்று அருளுகின்றான்.

பாடல் #447

பாடல் #447: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதங்கள்
ஆதி படைத்தனன் ஆயபல் ஊழிகள்
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவையும் தாங்கிநின் றானே.

விளக்கம்:

அனைத்திற்கும் ஆதியான இறைவனே உயிர்கள் வாழ்வதற்க்காக ஆகாயம் நீர் நெருப்பு காற்று மண் என ஐந்து பெரும் பூதங்களைப் படைத்து அருளினான். அந்த உயிர்கள் வினைகள் முடியும் வரை வாழ்ந்து தன்னை வந்து அடைவதற்காக பல ஊழிக்காலங்களையும் அருளினான். அந்த உயிர்கள் தவமிருந்து தன்னை நாடி வரும் போது அவர்களை எண்ணிலடங்காத பல தேவர்களாகக்கி அருளுகின்றான். இப்படி அனைத்தையும் படைத்த இறைவனே தான் படைத்த அனைத்தையும் தாங்கிக் கொண்டு பாதுகாத்து அருளுகின்றான்.

பாடல் #448

பாடல் #448: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே.

விளக்கம்:

பரந்து விரிந்த ஏழு உலகங்கள் முழுவதும் அகன்று பரவி இருந்தாலும் அனைத்தும் ஒருவனாய் இருப்பவன் இறைவன் ஒருவனே. இவன் தான் இறைவன் என்று சுட்டிக் காட்டி உணர்த்தக் கூடிய அளவிற்கு இறைவன் எளிமையானவன் இல்லை. அவனே பலவித ஆன்மாக்களின் உயிரோடு உயிராக உடனே இருந்து பாதுகாத்து அருளுகின்றவன். அவனே பல்வேறு குருநாதர்களாய் வந்து உயிர்களுக்கு நல்வழியை போதித்து அருளிய அவனே உலகத்து உயிர்களெல்லாம் நம்பியிருக்கும் தலைவனும் ஆவான்.

பாடல் #449

பாடல் #449: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதக மாமே.

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்திற்குள் ஒளியாக இருக்கும் இறைவனே உயிரோடு உயிராகவும் கலந்து ஒரே உடலாக இருக்கின்றான். அவனே விண்ணுலக அமரர்களெல்லாம் விரும்பித் தொழும் அனைத்திற்கும் மேலான பரம்பொருள். அவனே மண்ணுலக அடியவர்களெல்லாம் புகழ்ந்து போற்றும் பல்வேறு உருவங்களாகத் திருமேனி தரித்து இருப்பவன். அவனே கண்களுக்குள் இருந்து காட்சியைக் காட்டும் கருமணியாகவும் இருந்து கண்களால் காண முடியாத பேருண்மைகளைக் குருநாதனாய் இருந்து போதிப்பவனும் ஆவான்.

பாடல் #450

பாடல் #450: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

ஆரும் அறியாதவ் வண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணும் சுகமுமறிந் தேனே.

விளக்கம்:

யாராலும் அறிந்துவிட முடியாத அண்டசராசரங்கள் அடங்கிய திருமேனியைக் கொண்ட இறைவன் நீரில் பால் சேர்க்கும் போது எப்படி இரண்டும் ஒன்றாகிக் கலந்து விடுகின்றதோ அதுபோலவே உலகத்தில் பிறக்கும் உயிர்களுடன் உயிராகக் கலந்து உடலாகி ஒன்றாக இருப்பதை இடைவிடாமல் கண்டு பேரின்பம் அடையும் பாக்கியத்தை அவனது திருவருளால் யான் பெற்றிருக்கின்றேன்.

பாடல் #431

பாடல் #431: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனது உருவறி யாதே.

விளக்கம்:

ஒவ்வொரு உயிரின் உள்ளத்திற்குள்ளும் கண்டு உணரக் கூடிய ஜோதி உருவமாக இறைவன் வீற்றிருக்கின்றான். அவன் உயிர்களின் உள்ளத்தை விட்டு ஒரு அடி கூட விலகி நிற்பதில்லை. எப்போதும் உயிர்களின் உள்ளத்துடனே சேர்ந்து இறைவன் இருந்தாலும் மாயையினால் மறைக்கப்பட்ட உயிர்களின் உள்ளம் அவனது உருவத்தை அறியாது.

பாடல் #432

பாடல் #432: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாக்குமே.

விளக்கம்:

இறைவனோடு இருந்த ஆன்மாக்கள் ஆசைப்பட்டுவிடும் போது அந்த ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டி உலகத்தில் பிறவி எடுக்கும்படி உயிர்களாகப் படைக்கின்றான் இறைவன். அந்த உயிர்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளும் போது சில வினைகளும் சேர்த்து விடுகிறது. இந்த வினைகளை அனுபவிக்க வேண்டி உலகப்பற்று குடும்பம் பாசம் என்னும் துயரத்துக்குள் உயிர்களை மாயையால் பூட்டி அடைத்துவிடுகின்றான். எலும்பை முழுவதும் தோல் தசைகளால் மூடி அந்த எலும்போடு ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் இந்த உலக உடம்பானது உயிர்களின் பிறவிக்கு காரணமாகிய வினைகள் முடியும் வரை ஒன்றாகச் சேர்ந்து இருக்கும். இந்தப் பிறவியின் வினைகள் முடிந்ததும் உயிரை முடிப்பதாக இருக்கின்றது.

உட்கருத்து: ஆன்மாக்கள் ஆசையினால் இன்பம் பெறுவதற்காகப் பிறவி எடுப்பதால் அந்த இன்பத்தை அனுபவித்து தீர்க்கும்வரை பேரின்பத்தை மறைத்து அருளும் இறைவன் அந்த ஆன்மாக்கள் எடுத்த பிறவியில் இன்பத்தை அனுபவிப்பதினால் கிடைக்கும் வினைகளையும் அதன் விளைவுகளால் ஏற்படும் துன்பத்தையும் அந்தத் துன்பத்திற்குக் காரணமாக இருக்கும் உலகப் பற்றுக்களையும் சேர்த்து பிறவிக்குள் அடைத்துவிடுகின்றான். இதில் எலும்பும் தோலும் போர்த்திய உடலே சிறையாகவும் உலகப் பற்று எனும் மாயை பூட்டாகவும் வினைகள் சாவியாகவும் இருக்கின்றது. எப்போது உயிர்கள் தமது வினைகளை அனுபவித்துக் கழித்து முடிக்கின்றதோ அப்போது இந்தப் பூட்டு திறந்து உலகத்தில் அதுவரை ஆன்மா அனைத்தையும் அனுபவிக்க உதவிய உடலையும் உயிரையும் அழித்து ஆன்மா விடுதலை பெறுகின்றது.

பாடல் #433

பாடல் #433: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.

விளக்கம்:

இறைவன் உயிர்களை படைக்கும் தொழிலுக்கு காரியம் புரியும் தெய்வங்களாகிய உருத்திரன் மாபெரும் தவம் புரிபவனாகிய திருமால் வேதங்கள் ஓதி உயிர்களையும் அவை உலகத்தில் அடையும் இன்பத்தையும் படைத்த பிரம்மன் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து இறைவனின் கட்டளைக்கு ஏற்ப செய்த வலிமை மிக்க இரும்பாலான இயந்திரம் போன்ற உடலுக்குள் மாயையால் மறைத்து இறைவன் வைத்த ஒரு மாபெரும் பரிசு இருக்கின்றது. அதை உயிர்கள் அறியவில்லை.

உட்கருத்து: உலகத்தில் உயிர்களை படைத்த இறைவன் அதன் வினைகளை அனுபவித்துக் கழிக்கும் வரை அந்த உயிர்களைப் பாதுகாக்க இறைவனே மாபெரும் பரிசாக உயிர்களின் உள்ளத்திற்குள் இருக்கின்றதை மாயையால் மறைத்து அருளுகின்றான்.

பாடல் #434

பாடல் #434: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

காண்கின்ற கண்ணொளி காதல்செய் யீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியைப்
பூண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கையின் செயல்அணை யாரே.

விளக்கம்:

உயிர்களின் மேலுள்ள மாபெரும் அன்பினால் உயிர்களுடனே இருந்து அவர்களின் கண்ணில் காணும் ஒளியாகவும் காட்சிகளைக் காட்டும் ஒளியாகவும் இருக்கின்றான் இறைவன். ஆதியாக இருக்கும் இறைவனே அனைத்து உயிர்களின் உருவத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருக்கின்றான். உண்ணும் உணவை நாக்கினால் சுவைத்து அதன் இன்பத்தை நெஞ்சத்தில் உணர்வதைப்போலவே தமது தலையின் உச்சியில் இறைவனாக இருக்கும் அமிர்தத்தை நெஞ்சத்தில் உணராத உயிர்கள் பேரின்பத்தைக் கொடுக்கும் அமிர்தத்தின் செயலை உணராமல் இருக்கின்றார்கள்.

உட்கருத்து: உண்ணும் உணவை நாக்கினால் சுவைத்து அதன் இன்பத்தை நெஞ்சத்தில் உணர்வதைப்போலவே கண்ணில் காணும் ஒளியாகவும் காட்சிகளைக் காட்டும் ஒளியாகவும் இருப்பவன் இறைவன் என்பதையும் நெஞ்சத்தில் உணர்ந்து விட்டால் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருப்பவன் இறைவன் என்பதையும் தலை உச்சியில் பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவனாக இருக்கும் அமிர்தத்தையும் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் உயிர்கள் உணவு உண்ணும் ருசிக்கு ஆசைப்பட்டு அதனால் கிடைக்கும் வினையின் காரணமாக மறைக்கப்பட்டு உணராமல் இருக்கின்றார்கள்.

பாடல் #435

பாடல் #435: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளுஞ் சுடருறு தூவெஞ் சுடரும்
இருளும் அறிநின் றிருட்டறை யாமே.

விளக்கம்:

உண்மை ஞானத்தை அடைந்த உலக உயிர்களுக்கும் விண்ணுலகத் தேவர்களுக்கும் பேரின்பத்தைப் பெறும் வழியை அருளிச் செய்கின்றான் ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனாகிய இறைவன். உண்மை ஞானத்தை அடையாமல் உலக ஆசையில் இருக்கின்ற உயிர்களுக்கு தினமும் மாறி மாறி வரும் சூரியனின் ஒளியையும் அந்தச் சூரியனின் ஒளியை தன்னுள் வாங்கிக் கொடுக்கும் நிலாவின் ஒளியையும் வெப்பமான தீயினால் கிடைக்கும் ஒளியையும், இந்த மூன்றுவித ஒளியும் இல்லாதபோது இருக்கும் இருளை உணர்வினால் அறிந்திருக்கின்ற உயிர்களுக்கு உணர்வினால் அறியமுடியாத மாயை எனும் இருளைக் கொண்ட உள்ளம் எனும் இருட்டறையில் வீற்றிருக்கின்றான் இறைவன்.

உட்கருத்து: உண்மை ஞானம் பெற்ற உலகத்து உயிர்களுக்கும் விண்ணுலக உயிர்களுக்கும் பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவன் உண்மை ஞானம் பெறாத உயிர்களுக்கு மாயை எனும் இருட்டையே கொடுக்கின்றான்.