பாடல் #565

பாடல் #565: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

விளக்கம்:

மனம் என்னும் ஆரியன் மிகவும் நல்லவன் அவனிடம் இடகலை ( மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்) பிங்கலை (மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்) என இரண்டு சுவாசங்கள் உள்ளது. அந்த சுவாசத்தை வெளியே விட்டு உள்ளே நிறுத்தி வைக்கும் திறமையை அறிபவர் யாரும் இல்லை. சீடனைப் பற்றி அனைத்தும் அறிந்த குருவின் அருள் பெற்றால் இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு சுவாசங்களையும் அடக்கி மனதை ஒருநிலைப்படுத்தி நிலையாக வைக்கலாம்.

பாடல் #566

பாடல் #566: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ணவும் வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

விளக்கம்:

பறவையை விட வேகமாகச் செல்லக்கூடிய சுவாசத்தை பிராணாயாம் செய்து தலையிலுள்ள சகஸ்ரதளத்தை நோக்கி எடுத்துச் சென்றால் கள் (போதைப்பொருள்) அருந்தாமலேயை மனம் மகிழ்ச்சி (தன்னை மறந்த நிலை) அடையும். உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். உடல் சோர்வு நீங்கும். இறைவனை உணர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கே இந்த உண்மையை கூறுகிறோம்.

பாடல் #567

பாடல் #567: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.

விளக்கம்:

பிராணாயாமத்தின் மூலமாக சுவாசத்தையும் மனத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு நிலைப்படுத்தி மூச்சுக்காற்றை இடகலை பிங்கலை ஆகிய இரண்டு சுவாசத்தின் வழியாகச் செலுத்தி சமாதி நிலையை (தன்னை மறந்த நிலை) அடைந்தால் இனி வேறு பிறப்பின்றி பிராணாயாமத்தினால் அடையக்கூடிய பலன்கள் அனைத்தையும் பெற்று இன்புற்று இருப்பீர்கள்.

குறிப்பு: மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்.

மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்.

பாடல் #568

பாடல் #568: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நான்கில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமு மாமே.

விளக்கம்:

ஒரு மடங்கு அளவு (பதினாறு வினாடிகள்) காற்றை இடது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்தல் பூரகம் ஆகும். அந்த மூச்சுக்காற்றை உள்ளுக்குள்ளேயே நான்கு மடங்கு அளவு (அறுபத்து நான்கு வினாடிகள்) அடக்கி வைத்திருத்தல் கும்பகம் ஆகும். அப்படி அடக்கிய மூச்சுக்காற்றை இரண்டு மடங்கு அளவு (முப்பத்து இரண்டு வினாடிகள்) வலது மூக்குத்துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விடுதல் இரேசகம் ஆகும். இவ்வாறு செய்வதே பிராணாயமம் செய்யும் வழிமுறையாகும். பிராணாயாமத்தை இவ்வாறு சரியாகச் செய்வதால் உடல் தூய்மை பெற்று ஆற்றல் மிகுந்து நற்பண்புகள் கைகூடும். இவ்வாறு செய்யாமல் வலது மூக்குத்துவாரத்தின் வழியாக முதலில் இழுத்து இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மாற்றி விடுதல் கெடுதல் ஆகும்.

குறிப்பு: பிராணாயாமம் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் இடது பக்கம் முதலில் மூச்சுக் காற்றை இழுத்து வலது பக்கம் மூக்குத் துவாரத்தின் வழியாக மாற்றி விட்டு பயிற்சி செய்ய வேண்டும். முதலில் வலது பக்கம் முதலில் மூச்சுக் காற்றை இழுத்து இடது பக்கம் மூக்குத்துவாரத்தின் வழியாக மாற்றி விட்டு பயிற்சி செய்தால் உடலுக்கு தீங்கு உண்டாகும்.

பாடல் #569

பாடல் #569: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.

விளக்கம்:

பாடல் #568 இல் உள்ள பிராணாயம முறைப்படி மூச்சுக்காற்றை வயிற்றில் அடக்கி வைத்திருந்தால் உடம்புக்கு அதன் வயதுக்கு ஏற்ப ஏற்படும் முதுமை வெளியே தெரிந்தாலும் உள்ளே முதுமைத் தன்மை சிறிதும் இல்லாமல் இளமையாக பளிங்கு போன்ற வலிமைப் பெற்று இருக்கும். அந்த உணர்வு தெளிவை பெற்று ஞான குருவின் அருளையும் பெற்றுவிட்டால் காற்றைவிட இலேசாகி மிதக்கும் நிலையை உடல் பெற்றுவிடும்.

பாடல் #570

பாடல் #570: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கவும் தலைவனு மாமே.

விளக்கம்:

எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திலேயே பிராணாயாம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மூச்சுக்காற்றை இழுத்து பூரகத்தை செய்தால் உடலுக்கு அழிவு இல்லை. அப்படி இழுத்த மூச்சுக்காற்றை கும்பக முறைப்படி அடக்கி வைத்து இரேசக முறைப்படி அளவாக வெளியே விட்டால் உள்ளுக்குள் ஓங்காரமாகிய ஓம் எனும் ஒலி கேட்டு மேன்மையை அடையலாம்.

பாடல் #571

பாடல் #571: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியுமது வாமே.

விளக்கம்:

பிராணாயம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) பூரக முறையில் மூச்சுக்காற்றை இடது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்து இரேசக முறையில் வலது மூக்குத்துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விட்டு கும்பக முறையில் வயிற்றில் அடக்கி வைத்திருக்கும் அளவுகளைத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு மூன்று முறைகளின்படி மூச்சுக்காற்றை இழுத்து அடக்கி வெளியே விடும் அளவுகளைத் தெரிந்தவர்களுக்கு எமனையே காலால் எட்டி உதைக்கும் ஆற்றல் உண்டாகும்.

பாடல் #572

பாடல் #572: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தானுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டானின் அருள்பெற லாமே.

விளக்கம்:

  1. தலை, கண், காதுகள், கழுத்து வரை உள்ளவை மேல் பகுதியாகும். 2. கழுத்திலிருந்து அடிவயிறு வரை, நெஞ்சு, தொப்புள் முதலானவை நடுப் பகுதியாகும். 3. அடிவயிறு முதல் கால் பெருவிரல் வரை உள்ளவை கீழ் பகுதியாகும். பிராணாயாம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) மூச்சுக்காற்றை பூரக முறைப்படி உள்ளிழுத்து அந்தக் காற்றை கும்பக முறைப்படி உள்ளே அடக்கிவைத்து மேலே கூறிய மூன்று பகுதிகளுக்கும் அந்த மூச்சுக்காற்றைச் செலுத்தி அந்த மூன்று பகுதிகளுக்குள் வியாபிக்க (நிறைத்து) வைத்திருந்தால் நாம் செய்யும் தீய செயல்களால் வரும் கர்ம வினையாகிய நஞ்சை அழித்து நம்மைக் காப்பாற்றும். சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

பாடல் #573

பாடல் #573: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

விளக்கம்:

இடகலை (மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்) வழியாக பூரக முறைப்படி ஒரு பங்கு (பதினாறு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை உள்ளிழுத்து கும்பக முறைப்படி நான்கு பங்கு (அறுபத்து நான்கு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை அடக்கிவைத்து பிங்கலை (மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்) வழியாக இரேசக முறைப்படி இரண்டு பங்கு (முப்பத்து இரண்டு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை மெதுவாக வெளியே விடுவதன் மூலம் பாதுகாப்பான பிராணாயாமத்தின் உண்மை கூறப்படுகின்றது. கும்பக முறை 64 வினாடிகள் வரை மட்டுமே பாதுகாப்பானது. அதற்கு மேல் செய்தால் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்து தலைச் சுற்றல் மயக்கம் போன்றவை ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் 64 வினாடி நேரத்திற்கு மேல் கும்பகம் செய்யக்கூடாது என்பதையே இப்பாடல் விளக்குகின்றது.

பிராணாயமத்தைக் கற்றுக்கொள்ளும் முறை:

மூச்சுப் பயிற்சி செய்யத் துவங்கும் ஆரம்ப கால கட்டங்களில் இந்த 16:64:32 என்ற காலக் கணக்கில் பயிற்சி செய்வது இயலாத காரியமாக இருக்கும். தொடர்ந்த பயிற்சிகளின் மூலமே இது கைகூடும். பயிற்சியைத் துவங்கும்போது 8:32:16 என்ற கால அளவில் துவங்கி படிப்படி யாக நேரத்தை அதிகரிக்கலாம். திருமூலர் கூறும் 16:64:32 என்ற கால அளவை எட்டிப் பிடிக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையில் ஆகலாம். ஒரு குருவின் மேற்பார்வையில் இந்த பயிற்சியைத் துவங்கினால் எளிதில் கைகூடும்.

பாடல் #574

பாடல் #574: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்து
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.

விளக்கம்:

இறைவன் வழங்கிய இந்த உடல் சோர்வாக இல்லாத போது இரேசக முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) மூச்சுக்காற்றை வெளியே விட்டுவிட்டு பத்து நாடிகளும் (1. இடகலை – (இடப்பக்க நரம்பு), 2. பிங்கலை – (வலப்பக்க நரம்பு), 3. சுமுழுனை – (நடுநரம்பு), 4. சிகுவை – (உள்நாக்கு நரம்பு), 5. புருடன் – (வலக்கண் நரம்பு), 6. காந்தாரி – (இடக்கண் நரம்பு), 7. அத்தி – ( வலச்செவி நரம்பு), 8. அலம்புடை – (இடச்செவி நரம்பு), 9. சங்கினி – (கருவாய் நரம்பு), 10. குகு – (மலவாய் நரம்பு)) நிரம்புமாறு மூச்சுக்காற்றை உள்ளிழுத்து அந்த மூச்சை அடக்கி மலவாயையும் சுருக்கி அக்காற்றை கும்பக முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) வைத்து உடலை நேராக நிமிர்த்தி வைத்திருந்தால் இறப்பு என்றும் இல்லை.