பாடல் #47

பாடல் #47: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பம் தானே.

விளக்கம்:

கர்மவினைப் பயனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே எப்போதும் இறைவன் சிந்தனையில் இருக்கக் கூடியவர்கள் மாபெரும் தவம் செய்பவர்களுக்கு ஈடானவர்கள். இறைவனை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பவர்கள் அவனின் பேரன்பிலேயே எப்போதும் நிற்கின்றார்கள். பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பருந்து பனைமரத்தின் பலன்களை அனுபவிக்காமல் (சுவையான பனம்பழங்களையோ இலைகளையோ பட்டைகளையோ உண்ணாமல்) வெளியில் உணவு தேடி அலைகின்றதோ அதுபோலவே இறைவன் அருகில் இருந்தும் இறைவனை நினைக்காமல் இருக்கின்றவர்களுக்கு பேரின்பம் எப்போதும் கிடைப்பதில்லை.

பாடல் #48

பாடல் #48: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

விளக்கம்:

அடியவர்கள் போற்றிப் புகழும் தேவர்களின் தலைவனை தலை தாழ்த்தி வணங்கி அனைத்திற்கும் முதல்வனானவனை எனது எண்ணத்தில் வைத்து உலகமனைத்திலும் உள்ள உயிர்களுக்கு அருளும் ஆதிப் பொருளானவனை எனது தந்தை என்று நினைத்து ஆன்ம இருளைப் போக்கும் எப்போதும் அனையாத மணிவிளக்கு அவன் என்று உணர்ந்து அவனோடு கலந்து நின்றேன்.

பாடல் #49

பாடல் #49: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்தெய்த லாமே.

விளக்கம்:

மாயையால் உயிர்களைக் கட்டிப்போடும் பரை (பராசக்தி) மும்மலங்களால் கட்டுண்ட ஆன்மாவாகிய பசு ஆன்மாக்களை உலகோடு கட்டிப்போடும் பாசம் (உலகப் பற்றுக்கள்) இவை அனைத்திற்கும் தலைவனான இறைவனை உள்ளத்தில் வைத்துப் போற்றிப் புகழ்ந்து அன்பினால் அவனோடு கலந்து இருக்கக்கூடியவர்களுக்கு ஆன்மாவின் கர்மாக்கள் பெருங்கடல் போன்று சூழ்ந்து மெய்ஞானத்தை மறைக்கும் திரைபோல இருந்தாலும் இறைவனின் அருளால் அந்தக் கடலையும் நீந்திக் கரையேறி மும்மலக்கட்டுக்களை அறுத்து உலகப் பற்றுக்களை ஒதுக்கி மாயையைக் கடந்து முக்தியை எய்தலாம்.

பாடல் #50

பாடல் #50: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.

விளக்கம்:

இறைவனின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொள்வேன். அவனின் திருவடிகளை என் நெஞ்சத்தில் வைத்துக்கொள்வேன். எம்பெருமான் என்று அவன் புகழ்களைப் பாடுவேன். பலவித மலர்களை அவன் திருவுருவத்தின் மேல் தூவி அவனைப் பணிந்து நின்று அவன் முன்னால் அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டே ஆடுவேன். ஆடியபின் அமரர்களின் தலைவனான இவனே எனக்கு முக்தியளிக்கக்கூடியவன் என்று அவனை நாடி அடைந்தபின் அனைத்தும் அவனே எனும் உண்மை ஞானத்தை அறிந்து அவனோடே கலந்து நிற்பேன்.

உள்விளக்கம்:

இறைவனை அடைந்து முக்திபெற மாபெரும் தவங்கள் யோகங்கள் யாகங்கள் இருந்தாலும் அவனது திருவடியை எண்ணத்தில் எப்போதும் வைத்து அவனைப் புகழ்ந்து பாடி ஆடி பலவித மலர்களைத் தூவி பூஜித்தாலே அவனை நாடி முக்தியை அடையலாம். இதுவே யாம் அறிந்த சிறந்த உபாயம் என்று திருமூலர் அருளுகின்றார்.