9-4-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
இன்று மாவிலைத் தோரணம், வாழைக்கால் பந்தல், அரசமரம் சுற்றுதல் என்பதெல்லாம் கண்டோம். விழா நாளில் இது அவசியமா?
உண்மையில் இக்கால நிலையில் இவை அனைத்தும் தேவையற்றதே என்றும் விளக்கிடுவோம். இக்காலமதில் பெரிதாக தோரணங்களும், நவீன மின்சார வர்ண விளக்குகளும் போதுமானது என்கின்ற நிலையும் கண்டோம். அக்காலங்களில் திருமணங்கள் என்பது விசேஷங்களாகப் பல நாட்கள் தொடர்ந்து நடந்தன. இவ்விதமிருக்க அவரவருக்கும் அஜீரண நிலைகள் காண்பது சாதாரண நிலை என்றும் விளக்கிடுவோம். இதனை நீக்கி வைக்கும் வகையில் கொழுந்தான மாவிலை உபயோகம் கண்டது. இதற்கெனவே தோரணம் என்று விளக்கிட்டோமே.
மேலும் வெட்ட வெளியில் பந்தல்கள் நட்டும் அங்கு திருமணம் விசேஷங்கள் நடைபெற அரவம்தனின் (பாம்பு முதலான ஜந்துக்கள்) தீண்டுதலும் பலரும் கண்டனர். இதற்குத் தக்க மருந்தாக நஞ்சை இழுக்கும் வகையில் உபயோகிக்கப்பெறும் வாழைப் பட்டைகள் என்றும் விளக்கிட்டோமே. இத்தகைய வாழைத் தண்டுகளைப் பிளந்து அவை பாம்பு கடித்த இடத்தின் மேல் வைத்து முதலுதவியாக அக்காலத்தில் கண்டனர் என்று இங்கு எடுத்துரைத்தோமே. மேலும் அரச மரத்தின் தன்மையைக் குறித்தால் அன்று திருமணங்களில் பந்தலின் நடுவாக அரசக்கொம்பு ஒன்றை நட்டு இதனை மணமக்கள் சுற்றி வர வேண்டும் என்ற சம்பிரதாய விதியும் இருந்தது. இது சம்பிரதாயமாக குழந்தையின்மையை நீக்க வல்லது என்பதே பொருளாகின்றது. பல சம்பிரதாயங்கள் இவ்விதம் உண்டு. இன்று இங்கு ஏற்றும் சூடத்தின் (கற்பூரம்) தரம் குறைந்து விட்டது. அக்காலத்தில் நல் கற்பூரம் என அழைக்கப்படும் வஸ்துவை எரித்தும் அதனைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்வதும் கிருமி நாசினியாக உதவியது என்றும் சாம்பிராணி என்னும் தூபங்களைப் புகைப்பதால் அத்தலமதிலிருந்து கடிக்கும் பிராணிகள் ஜந்துக்கள் விலகி விடுகிறது. இவையாவும் கூறினால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்கின்ற நிலையில் தெய்வத்தின் பெயரில் இதனைக் கூறிட பலரும் ஒப்புக்கொண்டு செய்கின்றனர் என்பதே நிஜமான நிலை.
மேலும் வெள்ளி, சனி அன்று பொதுவாக மாமிச வகைகள் யாவரும் உண்பதில்லை. இதற்குக் காரணம் இவ்விரண்டு நாட்களிலும் பொதுவாக உடம்பில் உஷ்ணம் அதிகரிக்கக் கூடிய நாட்களாகிறது. இதனால் உடம்புக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்க அந்நாள் தெய்வீகநாள் எவரும் புலால் உண்ணக்கூடாது என்கின்ற விதியை வகுத்தனர். இறைவனுக்கு எந்நாளும் நீ என்ன உண்ட போதிலும் அக்கறை இல்லை என்பதை இங்கு உணர்தல் வேண்டும். மனிதனாக சுய திருத்தங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். நல்வழியை நாட வேண்டும். என்பதற்கென இறைவன் சுயபுத்தியை அளித்தான் என்பதை நாம் மறக்கலாகாது. நம் புத்திக் கூர்மையை உபயோகித்துப் பல காரியங்கள் சாதிக்க இயலும் என்றும் சிறு சிறு காரியங்களுக்கு விடை தெரிய தெய்வத்தை நாடுவது சிலாக்கியமற்றது என்றும் இங்கு உரைத்தோமே. ஏனெனில் கோடிக்கணக்கான மக்களுக்குத் தனித்தனியாக விடை அளிக்க இயலாது என்பதால் பிரதானமான சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் மூலமாக சில விதிகளை வகுத்து இதனை பின்பற்ற ஏற்படுத்தினர் என்பதே உண்மை நிலையாகின்றது. பொதுவாக இதனை மனிதர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆகவே அனைத்திற்கும் தெய்வீகம் என்கின்ற ஓர் போர்வையை போர்த்தி அநுசரிக்க வைத்தனர். இது தான் நிலை.