பாடல் #350: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)
தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்காத அருள்செய்தான் நின்மலன் தானே.
விளக்கம்:
இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த இலங்கையின் அரசன் ராவணன் ஒரு முறை அவரைப் பார்க்க எண்ணி கையிலாய மலைக்கு வந்தான். அவன் மானிடனாக இருப்பதால் உள்ளே விட முடியாது என்று வாயிற் காவலர்கள் தடுத்துவிட இறைவனைக் காண முடியவில்லையே என்ற கோபத்தில் தனது இருபது தோள்களால் கையிலாய மலையை தூக்கி இலங்கைக்கு எடுத்துச் செல்ல முயன்றான். ராவணனை நிகரில்லாத பேராற்றலை உடைய இறைவன் தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தம் கொடுக்க அதன் அழுத்தத்தால் தாங்க முடியாத பெரும் வேதனையை அடைந்த இராவணன் கோபம் நீங்கி இறைவா எம்மைக் காப்பாற்று என்று உரக்க அழைத்தான். ஒரு மாசும் இல்லாத இறைவனும் அவனின் உண்மையான பக்தியை மெச்சி அவன் முன்னே தோன்றி அவனுக்கு என்றும் நீங்காத திருவருளை வழங்கி அருளினார்.
உட்கருத்து: உயிர்கள் பாடல் #347 ல் உள்ளபடி லிங்க தத்துவத்தையும் லிங்கத்தையும் தனக்குள் உணரும் போது மனிதனின் குணங்கள் பத்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் கன்மேந்திரியம் ஐந்தும் அவற்றால் ஏற்படங்கூடிய உலகப்பற்றுகள் இறைவனை அடையவிடாமல் தடுக்கும் போது இறைவா காப்பாற்று என்று உயிர்கள் வேண்டிட அவர்களுக்கு திருவடி தீட்சை வழங்கி அவர்களின் குணங்கள் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களை நீங்கி மீண்டும் வராமல் அருள் செய்வான்.
குணங்கள் உயிரை மனதால் பாதிப்பது குணங்களுக்கான விளக்கம்:
- காமம்-சிற்றின்பம்
- குரோதம்-கோபம்
- உலோபம்-பேராசை,கருமித்தனம்
- மோகம்-மாயை யால் நிகழும் மயக்க உணர்ச்சி,
- மதம்-கொள்கை,செருக்கு,வெறி,மதுபானக் களிப்பு,பெருமை
- மாச்சரியம்-பொறாமை,பகைமை
- டம்பம்-ஆடம்பரம்
- தர்ப்பம்-ஆசைகள், கர்வம்
- அசூயை-பொறாமை
- ஈரிசை-பிறர் துன்பம் கண்டு மகிழ்வது.
ஞானேந்திரிய கர்மங்கள் என்பது ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி இவற்றால் உயிரை பாதிப்பது,
கன்மேந்திரியம் என்றால் செயல் மனித உடல் செய்யும் ஐந்து வகையான செயல்கள் இந்த ஐந்து வகையான செயல்கள் தொடர்ந்து செயல்படுவதால் ஆத்மா உடலோடு கலந்து இருக்கிறது.