பாடல் #594

பாடல் #594: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

வாழலு மாம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையிலே.

விளக்கம்:

உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விட்டுவிடாமல் மனதை ஒருமுகப்படுத்தி சுழுமுனை வழியாக அந்த மூச்சுக்காற்றை மேலே ஏற்றி தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டால் ஒன்பது துவாரங்களைக் கொண்ட இந்த உடம்பில் நீண்ட காலம் அழியாமல் பேரானந்த நிலையில் இருக்கலாம்.

பாடல் #595

பாடல் #595: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.

விளக்கம்:

உடம்பில் உள்ள பத்துவித வாயுக்களில் முக்கியமான ஐந்து வாயுக்களை பிராணாயாம முறைப்படி கட்டுப்படுத்தி வெளியே விடாமல் வீணாக வெளியேற்றுபவர்கள் இந்த உலகில் வெறுமனே உயிர் வாழ்ந்து எந்தப் பயனையும் அடையமாட்டார்கள். அந்த ஐந்து வாயுக்களையும் வீணாக்காமல் பிராணாயாம முறையில் கூறிய அளவுகளின்படி அடக்கி வெளியே விடுபவர்களுக்கு மனமாகிய குரங்கை ஒருமுகப்படுத்தி உடம்பின் உள்ளேயே நிலைத்திருக்கும்படி வைக்க முடியும்.

உடலிலுள்ள பத்துவித வாயுக்கள்:

  1. பிராணன் – உயிர்க்காற்று
  2. அபாணன் – மலக் காற்று
  3. வியானன் – தொழிற்காற்று
  4. உதானன் – ஒலிக்காற்று
  5. சமானன் – நிரவுக்காற்று
  6. நாகன் – விழிக்காற்று
  7. கூர்மன் – இமைக்காற்று
  8. கிருகரன் – தும்மற் காற்று
  9. தேவதத்தன் – கொட்டாவிக் காற்று
  10. தனஞ்செயன் – வீங்கல் காற்று

முறைப்படி கட்டுப்படுத்தி வெளியே விடவேண்டிய ஐந்து வாயுக்கள்:

  1. பிராணன் – உயிர்க்காற்று
    நுரையீரலில் இருந்து மேல் நோக்கிச் செல்வது. பசியையும், தாகத்தையும் ஏற்படுத்துவது. உணவை செரிமானம் செய்வது.
  2. அபாணன் – மலக் காற்று
    உடற்கழிவுகளான மலம், ஜலம், சுக்கிலம் (விந்து), சுரோணிதம் (கரு முட்டை) ஆகியவற்றை வெளியேற்ற உதவுவது.
  3. வியானன் – தொழிற்காற்று
    உடல் முழுவதும் பரவி தொடு உணர்ச்சியை உணர வைப்பது ஜீரணமான உணவை சத்து வேறாகவும் சக்கை வேறாகவும் பிரிக்கும் பணியைச் செய்வது.
  4. உதானன் – ஒலிக்காற்று
    தொண்டையில் இருந்து கொண்டு உணவை விழுங்கச்செய்வது, ஏப்பம் வரச்செய்வது, குறட்டை வரச்செய்வது, உறங்கும் போது ஐம்புலன்களுக்கும் ஓய்வு கொடுப்பதும் விழித்த பின்பு ஐம்புலன்களின் இயல்பிற்கேற்ப மறுபடியும் இயங்கச் செய்வது.
  5. சமானன் – நிரவுக்காற்று
    தொப்புள் பகுதியில் இருந்து கொண்டு உணவின் சத்தையெல்லாம் எல்லா உறுப்புகளுக்கும் அதனதன் தேவைக்கேற்ப பகிர்ந்து அளிப்பது.

பாடல் #596

பாடல் #596: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

முன்னமே வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னையும் வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னூறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரையும் நிற்குமே.

விளக்கம்:

நமக்கு முன்பு வந்தவர்களெல்லாம் மனதை ஒருமுகப்படுத்தி நிலைத்து வைக்காமல் இறந்து போய்விட்டார்கள். பின்பு பிறந்த நாமும் அவ்வாறே மனதை ஒருமுகப்படுத்தாமல் அழிந்து விடுவோம் என்பது நிச்சயம் இல்லை. முன்பு வந்த முன்னூறு கோடி மனிதர்களும் அடைந்த கதியைப் பற்றிப் பேசி ஒரு பயனும் இல்லை. மனதை ஒருமுகப்படுத்தி நிலைத்து வைத்தால் அழியக்கூடியதாக இருக்கும் இந்த உடல் அழியாததாக மாற்ற முடியும்.

பாடல் #597

பாடல் #597: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்து
பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.

விளக்கம்:

ஆற்று வெள்ளம் கரையினை அரித்துப் பாழாக்குவது போல ஐம்பூதங்களான மெய் (உணர்வது) கண் (பார்ப்பது) காது (கேட்பது) மூக்கு (நுகர்வது) வாய் (சுவைப்பது) ஆகிய ஐம்புலன்கள் உடம்பினை அரித்துப் பாழாக்குகின்றது. ஐம்புலன்களும் உடலுக்குள் அடங்கும் முறையை உணர்ந்தால் உலகம் அழியக்கூடியது சிவமே அழியாதது என்ற உண்மையை உணரலாம். அவ்வாறு உணர்ந்து விட்டால் உலகப்பற்று அறுந்துவிடும். உடலைக் கட்டுப்படுத்தும் ஐம்பூதங்களையும் மனதால் கட்டுப்படுத்த வேண்டும். வெளியே உள்ள ஐம்பூதங்களின் (உணர்ச்சி, காட்சி, சத்தம், வாசனை, சுவை) உணர்வுகளை உள்ளுக்குள் உணர வேண்டும். மனதை மூலாதாரத்தில் ஒருநிலைப்படுத்த வேண்டும். உடலில் இருக்கும் ஆத்மாவை இறைவனோடு சேர்த்தல் வேண்டும். இவை அனைத்தும் செய்வதே தாரணை எனப்படும்.

பாடல் #579

பாடல் #579: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலத்தில்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண்டு ஈசன் குடியிருந் தானே.

விளக்கம்:

தொப்புளுக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம் தூரத்தில் உள்ள மூலாதாரத்தில் இருக்கும் ஓம் எனும் மந்திரத்தை அறிந்தவர்கள் யாருமில்லை. அந்த ஓம் என்னும் மந்திரத்தை உணர்ந்துவிட்டால் அந்த மந்திர ஒலியாய் இருக்கும் சிவபெருமானை நமக்குள் உணரலாம்.

பாடல் #580

பாடல் #580: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருந்து இரண்டு அங்குலம் அளவிற்கு மேலும் பிறப்பு உறுப்பிலிருந்து இரண்டு அங்குலம் அளவிற்குக் கீழும் உள்ள இடத்தில் வட்ட வடிவமாக இருக்கும் குண்டலினி சக்தியின் மையப்புள்ளி உள்ளது. அந்த குண்டலினி சக்தியிலிருந்து வெளிப்படும் செம்மையான ஒளி தொப்புள் குழியிலிருந்து நான்கு அங்குலம் அளவிற்குக் கீழே இருக்கும் இடம் வரை பரவியுள்ளது.

பாடல் #581

பாடல் #581: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே.

விளக்கம்:

மூக்கிலிருந்து பன்னிரண்டு அங்குலம் அளவிற்குக் கீழே உள்ள இடத்தில் வைத்து (நான்காவது சக்கரமான அநாகதம் இருக்கும் இடமான நெஞ்சுக் குழி) நிர்மூலமாக இறைவனை தியானிக்கும் சக்தியுள்ளவர்களுக்கு எட்டு வகையான சித்திகளையும் கொடுக்கும் மாபெரும் யோகங்களும் வந்து சேரும். அப்படி சேர்ந்தபின் உடம்பிற்கு எப்போதும் அழிவு என்பது இல்லை.

பாடல் #582

பாடல் #582: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதிய தன்னுடல் உன்மத்த மாமே.

விளக்கம்:

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தி தலை உச்சிக்குச் சென்றபின் பிராகாசமான ஒளி தோன்றி அந்த ஒளிக்கதிர் உடலெங்கும் பரவி பேரின்பம் கிடைக்கும் என்று மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து, தலை உச்சிக்கு நேராகக் கீழே இருக்கும் கழுத்தில் அந்த ஒளிக் கதிர் தெரியும் நிலையை அடைந்தால் அவ்வாறு தியானித்த உடல் தன்னை மறந்த நிலையில் பேரானந்தமாக இருக்கும்.

பாடல் #583

பாடல் #583: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருக்கும் துளையை (மலத்துவாரம்) சதைகளால் இறுக்கி அடைத்துக் கொண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் இடத்தில் (ஆக்ஞா சக்கரம் இருக்கும் இடம்) மனதை வைத்து உடல் உணர்வுகளை மறந்த நிலையில் தியானித்து இருப்பதே இறவாமல் இருக்கும் வழியாகும்.

பாடல் #584

பாடல் #584: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடும் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.

விளக்கம்:

மலதுவாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலும் பிறப்புறுப்புக்கு இரண்டு அங்குலம் கீழும் உள்ள இடத்தில் இருக்கும் ஜோதியை (குண்டலினி சக்தி) உணர்ந்து தியானிக்க முடிந்தவர்களோடு உடலுக்கு உயிர் கொடுக்கும் இறைவன் கலந்து நிற்பான்.