பாடல் #649: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
தானே அணுவுஞ் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகமுந்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே.
விளக்கம்:
தானே அணிமாவும் உலகமாகிய மகிமாவும் கனமுடையதாகிய கரிமாவும் எல்லவற்றிலும் அடங்கிய ஆகாயமாகிய லகிமாவும் அழியா உடலையடைதலாகிய பிரப்தியும் தானே ஆதலாகிய பரகாயத்தை அடையும் பிராகாமியமும் அமையாத உண்மையாகிய ஈசத்துவமும் வியாப்பியமாகிய வசித்துவமும் ஆகியவை அட்டமா சித்திகள் ஆகும்.
எட்டுவித சித்திகள்:
- அணிமா – அணுவைப் போல் உடலை சிறிதாக்கும் ஆற்றல்.
- மகிமா – மலையைப் போல் உடலை பெரிதாக்கும் ஆற்றல்.
- கரிமா – மலை போல எதனாலும் அசைக்க முடியாத அளவு உடலை கனமாக்கும் ஆற்றல்.
- இலகிமா – காற்றைப் போல் இலேசாய் உடலை மாற்றி எங்கும் செல்லும் ஆற்றல்.
- பிராப்தி – தூரத்திலிருப்பதையும் இருக்கும் இடத்திலேயே பார்க்கவும், மனதினால் நினைத்தவை யாவையும் அடையவும் பெறும் ஆற்றல்.
- பிராகாமியம் – எதையும் நினைத்தவுடன் அதாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல்.
- ஈசத்துவம் – ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைத் தன் ஆளுகைக்குட்பட்டுச் செய்தல்.
- வசித்துவம் – ஈரேழு பதினான்கு உலகங்களிலும் கலந்து, அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து இருக்கும் ஆற்றல்.
கருத்து: எட்டுவித சித்திகளாவன அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.