பாடல் #1776: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
மலர்ந் தயன்மாலு முருத்திர மகேசன்
பலந்தெழு மைமுகன் பரவிந்து நாதம்
நலந்தரு சத்தி சிவன் வடிவாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மலரந தயனமாலு முருததிர மகெசன
பலநதெழு மைமுகன பரவிநது நாதம
நலநதரு சததி சிவன வடிவாகிப
பலநதரு லிஙகம பராநநதி யாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மலர்ந்த அயன் மாலும் உருத்திரன் மகேசன்
பலந்து எழும் ஐம் முகன் பர விந்து நாதம்
நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி
பலம் தரும் இலிங்கம் பரா நந்தி ஆமே.
பதப்பொருள்:
மலர்ந்த (திருமாலின் தொப்புள் கொடியின் தாமரை மலரிலிருந்து வெளிப்படுகின்ற) அயன் (பிரம்மாவும்) மாலும் (திருமாலும்) உருத்திரன் (உருத்திரனும்) மகேசன் (மகேஸ்வரனும்)
பலந்து (அருளை வழங்குவதற்கு தம்மை பலவிதமாக பிரிந்து) எழும் (எழுகின்ற) ஐம் (ஐந்து) முகன் (முகங்களைக் கொண்ட சதாசிவனும்) பர (பரம்பொருளாகிய) விந்து (வெளிச்சத்திலும்) நாதம் (சத்தத்திலும் இருந்தே வெளிப்படுகின்றனர்)
நலம் (அந்த வெளிச்சமும் சத்தமும் அனைத்து நன்மைகளையும்) தரும் (தருகின்ற) சத்தி (வெளிச்ச வடிவாகிய இறைவி மற்றும்) சிவன் (சத்த வடிவாகிய இறைவனின்) வடிவு (வடிவங்களாக) ஆகி (ஆகி)
பலம் (இந்த ஐந்து தெய்வங்களுக்கும் சக்தியை) தரும் (தருகின்ற) இலிங்கம் (சிவ இலிங்க வடிவமாகவும்) பரா (அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகவும்) நந்தி (குருநாதனாகவும் இருந்து அருளுகின்ற) ஆமே (ஆதிப் பரம்பொருளாகவும் இருக்கின்றது).
விளக்கம்:
அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தி எனும் பரம்பொருளே சிவ இலிங்க வடிவமாக இருந்து தனது பேரருளால் வெளிச்சத்தின் வடிவமாகிய இறைவி, சத்தத்தின் வடிவமாகிய இறைவன், அவர்களுக்கு கீழே ஐந்து விதமான தொழில்களை புரிகின்ற பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களாகவும் இருந்து அனைவருக்கும் சக்தி கொடுத்து வழி நடத்துகின்ற குருநாதனாகவும் இருக்கின்றான்.