பாடல் #739

பாடல் #739: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற
நீர்கொள நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தான்கொண்டு ஒடுங்கே.

விளக்கம்:

ஒரு நெல்லை பயிர் செய்தால் அதிலிருந்து பல நெல் வரும் அந்த பல நெல்லை மீண்டும் பயிர் செய்தால் பல ஆயிரம் வரும் அதனையும் பயிர் செய்தால் பல கோடி வரும். அது போல பாடல் #737 ல் உள்ளபடி சரீர நெற்றியில் இருக்கும் நீலநிற ஜோதியில் இருக்கும் வெப்பத்தில் இருந்து வரும் மந்திரமான ஒலியை மீண்டும் மீண்டும் சரீரத்திற்குள்ளேயே எந்தவித எதிர்பார்ப்பின்றி மனனம் செய்யும் சாதகனின் உடல் அழியாமல் இருந்து ஒரு மந்திரம் பல மந்திரமாக பெருகி வேதமந்திரமாக இருக்கும் இறைவனுடனேயே ஒடுங்கிவிடுவார்.

கருத்து: சரீரத்திற்குள்ளேயே எந்தவித எதிர்பார்ப்பின்றி மனனம் செய்யும் சாதகனின் உடல் அழியாமல் இருந்து வேதமந்திரமாக இருக்கும் இறைவனுடனேயே ஒடுங்கிவிடுவார்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #66

22-4-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: பயம் எங்கிருந்து வருகின்றது? அதனை எவ்விதம் எதிர்ப்பது?

பொதுவாக நமக்குத் தெரியாத காரியங்களைக் கண்டு பயம் காண்கின்றோம் என்பதே உண்மை. இதற்கு உதாரணமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டக் கற்றுக் கொள்ளும் காலங்களில் செல்லும் வழியில் ஓர் கல்லைக் கண்டாலும் பயம் கொண்டு இறங்கி விடுகின்றோம் அல்லது விழுந்து விடுகின்றோம் அடிபடுகின்றோம். ஆனால் பழகிய பின்பு இவ்வளவு தானா என்கிற உணர்வு வந்துவிடப் பயம் போகின்றது. இவ்விதமே குழந்தைகள் நடக்க முயற்சிக்கும் காலங்களில் முதலில் பல முறைகள் விழுந்து எழுந்து பின்பு ஓட ஆரம்பிக்கின்றது. அப்படி ஓட ஆரம்பித்தபின் அது நடக்க முயற்சித்த காலத்தை மறந்து விடுகின்றது தான் விழுந்ததை எல்லாம் மறந்து விடுகின்றது அல்லவா? இவ்விதம் அறிந்த பின்பு பயம் விலகும் என்பதே உண்மையாகின்றது. அதனால் எதைக்கண்டு பயப்படுகின்றோமோ அக்காரியத்தை மீண்டும் மீண்டும் செய்தால் பயம் நீங்கும். சில நபர்கள் பயத்தால் ஓடி ஒளிகின்றனர். பயத்தால் பல காரியங்கள் செய்யாமல் இருக்கின்றனர். அவ்விதம் இருந்தால் நஷ்டப்படுவது நீங்களே என்பதை உணர வேண்டும். எது அச்சத்தைத் தருகின்றதோ அதனை மீண்டும் மீண்டும் செய்யுங்கள் பயத்தை வெல்லுங்கள். மேலும் எதிலும் நிதானம் வேண்டும். அதற்காக யாம் கூறிவிட்டோம் என்று நாகத்தைக் கையில் பிடிக்க முயற்சித்தல் கூடாது. சாதாரண நிலைகளில் பொதுவாக இளைஞர்களுக்கு நேரிடும் சில சம்பவங்கள், தேர்வுகள் (பரிட்சை) கணக்கு தொழிலுக்குச் செல்லும் போது நேர்முகத் தேர்ச்சிகள் இவையாவும் பயத்தைத் தரும். இதற்காக நாம் தொழிலுக்குச் செல்லவில்லை வீட்டிலேயே இருந்து விடுகின்றோம் என்கின்ற கருத்து தவறானதாகும். இவையாவும் நீக்கிக்கொண்டால் உங்கள் வாழ்வில் பயம் என்பது காணாமல் சென்று விடும். ஏனெனில் மற்ற ஒருவரால் நம்மிடமிருந்து பறிக்க இயன்றதில் உச்ச பட்சத்தில் இருப்பது நமது உயிர் மட்டுமே அந்த உயிரை இறைவனிடம் அர்ப்பணித்து விட்டால் பின்பு பயம் ஏது? இதை மனதில் வைத்து செயல்படுவீர்களாக.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #65

26-3-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: பிரார்த்தனை என்பது என்ன?

பொதுவாக பிரார்த்திக்கும் காலத்தில் இறைவா எமக்கு இதைக் கொடு அதைக் கொடு அனைத்தும் வேண்டும் இது வேண்டாம் என்பதே பிரார்த்தனையாக இருக்கின்றது. இவ்விதம் இல்லாமல் இறைவா எமக்கு எது நலம் தருமோ அதையே நடத்தி வைப்பாய் என்பதே சிறப்பான பிரார்த்தனை ஆகும். இதைப் பலரும் மறந்துவிட்டு நித்யம் (எப்பொழுதும்) மேலும் சிறிது சிறப்பாக ஆண்டவா எமக்கு இதைச் செய் நான் உனக்கு அதைச் செய்கிறேன் என்று கூறுகின்றனர். இது மாபெரும் தவறாகும். ஏனெனில் இறை சக்திக்கு நாம் அளிப்பது எதுவும் தேவையற்றது. ஏன் என சிந்தித்தால் இவ்வுடலில் நம் ஆத்மாவை அடைத்து வைப்பதே அவன் அருள்தான் என்பதை உணர வேண்டும். இவ்வுடலிலிருந்து நமது ஆத்மாவானது பிரிந்து நல்ல நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் அவனருள் தேவைப்படுகின்றது. இந்நிலையில் ஆண்டவனிடம் எமக்கு எது நலம் தருவதோ அதனை அளிப்பாய் என்று மட்டும் வேண்டுதலே சிறந்ததாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #64

26-2-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: இறை சக்தி ஒன்று மட்டுமே இருக்கும் போது நான் ஏன் காலத்தை வீணாக்கி மனிதர்களை நாடி அவர்களிடமிருந்து ஆன்மிகம் கற்றுக்கொள்ள வேண்டும்?

தெய்வம் நேரடியாக வந்து யாதும் உபதேசிப்பதில்லை இதை நன்கு உணர்தல் வேண்டும். இறைவனிடம் நேரடியாக ஆன்மிகம் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் மகத்தான தியாகங்கள் மகத்தான சாதனைகள் (தியானம்) செய்தல் வேண்டும். கலியுகத்தில் தெய்வ சக்தியானது நாம் கேட்கும் வினாக்களுக்கு மனித ரூபம் இல்லையேல் வேறு ஏதேனும் வழியில் விளக்கங்களை உணர்த்துவார். உண்மையாக வழிபாட்டில் ஈடுபடும் மகான்கள் வழியிலும் விளக்கங்கள் கிடைக்கக்கூடும். இதற்கு ஒருவர் நமக்கு உகந்த ஓர் குருவை தேடிக்கொள்ளுதல் வேண்டும் என்பது விதியாகும். இத்தகைய நிலையில் நாம் சாதனைகளைத் தெய்வத்தை நோக்கிச் செய்திட்டால் பின்பு அத்தெய்வத்தின் அருளால் நமக்கு ஓர் நல்ல வழிகாட்டியும் (குரு) கிடைத்திடுவார்.

பாடல் #738

பாடல் #738: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளருகின்ற வாறே.

விளக்கம்:

பாடல் #734 இல் உள்ளபடி நெற்றி நடுவில் கண்ட நீல நிற ஜோதியும் நான்கு கலைகளைக் கொண்டு ஏழு ஆதாரச் சக்கரங்களுக்கும் எடுத்துச் சென்ற மூச்சுக்காற்றும் உடலை முழுவதும் மூடியிருக்கும் தோலும் தமக்குள் உணர்ந்த உண்மை ஞானமாகிய மெய்யுணர்வானது உடலுக்கு சிறந்த மருந்தாகி மான் குட்டி கீரையைத் தின்று வளர்வது முதிர்ச்சி அடைவது போல மெய்யுணர்வைத் தின்று ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடைகிறது.

கருத்து: அகயோகத்தை முறையாக செய்தால் மெய்யுணர்வை பெற்று ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடையும்.

பாடல் #737

பாடல் #737: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடிக் காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே.

விளக்கம்:

சுழன்று அடிக்கின்ற சூறாவளிக் காற்றின் நடுவில் சிக்கி தேர் அலைந்து திரிவது போல இறப்பு பிறப்பு எனும் சுழற்சியில் சிக்கிக்கொண்ட உயிர்கள் பிறவித் துன்பத்தில் கிடந்து அலைகின்றன. இந்தப் பிறவிச் சுழற்சியிலிருந்து உயிர்களை விடுவிக்கும் இறைவன் உயிர்களின் உடலுக்குள்ளேயே பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் தோன்றும் நீல நிற ஜோதியில் ஒளியுருவமாக வீற்றிருக்கின்றான். அகயோகம் செய்து நீல நிற ஜோதியின் நடுவில் இறைவனின் ஒளியுருவத்தைத் தரிசித்து அவனது திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்பின் ஓசையும் கேட்டு அதிலேயே சிந்தனையை வைத்திருக்கும் சாதகர்கள் இறப்பு பிறப்பு என்கிற பிறவிச் சுழற்சி நீங்கி எப்போதும் பேரின்பத்தில் இறைவனின் திருவடி நிழலிலேயே வீற்றிருப்பார்கள்.

கருத்து: அகயோகம் செய்து இறைவனின் திருவடியை நெற்றிக்குள் தரிசிக்க பிறவி எனும் பெருந்துன்பம் தீர்ந்து இறப்பும் பிறப்பும் இன்றி எப்போதும் இறைவனது திருவடியிலேயே இருக்கலாம்.

திருமூலர் அருளிய மூச்சுப்பயிற்சி

பாடல் #736

பாடல் #736: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடின்
வண்டுஇச் சிக்கும் மலர்க்குழல் மாதரார்
கண்டுஇச் சிக்கும்நல்ல காயமு மாமே.

விளக்கம்:

உயிர்களின் உடலுக்குள் மலத்துவாரத்திற்கும் பிறவிக்குறிக்கும் நடுவிலுள்ள மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியின் மேல் சிந்தனையை வைத்துக்கொண்டே சுழுமுனை நாடியின் வழியாக ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களாக மேல் நோக்கி எடுத்து வந்து தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் சேர்த்துவிட்டால் வண்டுகள் தேனை விரும்பி சுற்றும் அழகிய மலர்களை தலையில் அணிந்திருக்கும் பெண்கள் கூட இப்படிப்பட்ட உடல் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் அளவிற்கு சாதகரின் உடல் அழகாகிவிடும்.

கருத்து: மூலாதாரத்திலுள்ள குண்டலினியை எழுப்பி ஆறு சக்கரங்களுக்கும் சக்தியூட்டி ஏழாவதான சகஸ்ரதளத்தில் சேர்ப்பவர்களின் உடல் அழகாகிவிடும்.

பாடல் #735

பாடல் #735: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கருத்தநற் கபாலியு மாமே.

விளக்கம்:

உயிர்கள் உணவை குறைப்பதினால் உடல் எடை குறைந்து சுருங்கினாலும் பாடல் #734 ல் உள்ளபடி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதி அழியாது. உணவை குறைத்து உடலை சுருக்கி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியில் சிந்தனையை நிரந்தரமாக வைத்து சரணாகதியில் இருப்பவர்களுக்கு மூச்சுக்காற்று அங்கேயே நிரந்தரமாக நிலைபெறும். உணவை குறைத்து உடலை சுருக்கி பாதுகாத்தால் இறைவனை அடையும் வழிகள் பல உள்ளன. இதனை செய்யும் சாதகன் கருமை நிறமுடைய கழுத்தைக் கொண்ட நண்மையே உருவான இறைவனைப் போல் ஆகிவிடுவார்கள்.

கருத்து: உணவை குறைத்து உடலை சுருக்கி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியில் சிந்தனையை நிரந்தரமக வைத்து சரணாகதியில் இருக்கும் சாதகனுக்கு மூச்சுக்காற்று நெற்றியில் நிலைபெற்று கருமை நிறமுடைய கழுத்தைக் கொண்ட நன்மையே உருவான இறைவனைப் போல் ஆகிவிடுவார்கள்.

பாடல் #734

பாடல் #734: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே.

விளக்கம்:

பாடல் #732 இல் உள்ளபடி மூச்சுக்காற்றை புருவ மத்தியில் நிறுத்திய பிறகு நடு நெற்றியில் தோன்றும் நீல நிறத்தில் ஜோதிமயமாக இருக்கும் சக்தியிலேயே சிந்தனையை நிரந்தரமாக வைத்து சரணாகதியில் இருப்பவர்களுக்கு உலகத்தவர்கள் அனைவரும் பார்க்கும்படி நரை முடியும் தோல் சுருக்கங்களும் நீங்கி வயது குறைந்து இளைஞனைப் போல இருப்பார்கள் என்பது பரம்பொருளாகிய குருநாதரின் ஆணையாகும்.

கருத்து: தியானத்தில் எப்போதும் நீல நிற சக்தியோடு இணைந்திருப்பவர்களின் உடல் முதுமை மாறி எப்போதும் இளமையோடு இருக்கும்.