பாடல் #643

பாடல் #643: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

விளக்கம்:

ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களிலும் அறுபத்து நான்கு கலைகள், மூன்று காலங்கள் (இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) மாயை ஆகிய தத்துவங்களிலும் சேராமல் விலகி ஒன்றுபட்டு இருக்கும் அறிவை ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இருக்கும் தொடர்பை உண்மையென அறிந்து அதிலேயே கலந்திருந்தால் என்றும் அழியாத உடலை அடையலாம்.

கருத்து: நிலையில்லாத உலகை விட்டு நிலையான இறைவனோடு கலந்திருந்தால் என்றும் அழியாத உடலை அடையலாம்.

பாடல் #644

பாடல் #644: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாமந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகுந் தானே
அருமிரு நான்காய் அட்டமா சித்திக்கே.

விளக்கம்:

விருப்பத்தோடு மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் செயல்கள் கர்ம யோகமாகும். அது இருபதாயிரத்து எண்ணூறு பிரிவுகளைக் கொண்டது. கர்ம யோகம் உடம்பினால் செய்யப்படும் அருமையான உழைப்பினால் நிறைவு பெறும். அவ்வாறு நிறைவு பெறுவதால் பெறக்கூடிய சித்திகள் எட்டுவித சித்திகளாகும்.

கருத்து: கர்ம யோகத்தை மனதை ஒருமுகப்படுத்தி உடல் உழைப்பால் செய்து முடித்தவர்களுக்கு எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.

பாடல் #645

பாடல் #645: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.

விளக்கம்:

சந்திர நாடியாகிய இடைகலையில் (இடது நாசி) பன்னிரண்டு அங்குல அளவாய் இழுக்கப் பெறும் மூச்சுக்காற்றில் சூரிய நாடியாகிய பிங்கலை (வலது நாசி) வழியாக நாலங்குல அளவு மூச்சுக்காற்று வெளியே போக மீதியுள்ள எட்டங்குல அளவு மூச்சுக்காற்று உள்ளே தங்கும். இதனைப் பன்னிரண்டு ஆண்டுகள் உலகப்பற்றை விட்டுக் கவனித்து வந்தால் உறுதியாக அட்டமா சித்திகளை அடையலாம்.

கருத்து: பன்னிரண்டு ஆண்டுகள் முறைப்படி பிராணாயாமம் செய்து வந்தால் எட்டுவித சித்திகளையும் உறுதியாக அடையலாம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #41

27-12-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆசைகளையும் பாசத்தையும் முழுமையாக ஒழிக்க முடியவில்லையே அது ஏன்?

ஆசைகளை முழுமையாக ஒழிப்பது மிகவும் கடினம். ஆசைகளை அடக்கினாலும் மீண்டும் சில நேரங்களில் அந்த ஆசைகள் திரும்ப வரும். இதற்கு உதாரணமாக ஊசி என்பது மனம் போலவும் நூலானது ஆசைகள் போலவும் எடுத்துக்கொண்டால் ஊசியில் நூலைக் கோர்த்துவிட்டு நூலின் இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டால் ஊசியானது இரண்டு பக்கமும் அலைந்து கொண்டிருக்கும். ஆனால் ஊசியிலிருந்து நூலை எடுத்து விட்டால் ஊசியானது அலையாமல் தனியாக நிற்கும். ஆகவே ஆசைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்பது மிகக் கடினம் என்பதை அறிய வேண்டும். இதற்கு என்ன வழி என்று சிந்தித்தால் ஊசியிலிருந்து நூலைத் தூக்கி எறிவதே சரியான வழி. அதாவது ஆசைகளை நீக்கும் முன்பு அந்த ஆசைகளை உண்டாக்கும் காரணங்களை நீக்க வேண்டும். உதாரணமாக லகரி வஸ்துக்களை (சிகரெட் பாக்கு சாராயம் முதலிய போதைப் பொருட்கள்) உபயோகிப்பவர்கள் அதை எப்போதும் தன்னோடு வைத்திருக்கக் கூடாது. எப்பொழுதும் அவற்றைத் தன்னுடனே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் மனதில் இருந்து நீக்க வேண்டும். அத்தகைய லகரி வஸ்துக்களை உபயோகிக்கும் நபர்களுடன் சேரக்கூடாது என்பதை ஒரு விதியாக எடுத்துக் கொண்டால் முழுமையாக அந்த ஆசைகளில் இருந்து விடுபடலாம். சிறுது கடினம் என்கின்ற போதிலும் ஒவ்வொரு ஆசையாக இவ்வாறு நீக்கிவிட முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #40

16-7-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எவ்வாறு நாம் இறைவனைத் தொடர்பு கொள்வது?

இறைவனைத் தொடர்பு கொள்வதற்குப் பாவனைகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் பல வகையான பாவனைகள் இருக்கின்றது. நமக்கு எளிதான பாவனைகள் எவையோ அவைகளை உணர்ந்து ஏற்றுக் கொண்டு அதன் வழியாக செல்லுதல் வேண்டும். மற்றவர்கள் செல்லும் பாவனைகளை நாமும் ஏற்றுக்கொண்டு செல்வது தவறாகும். நமக்கு எந்த பாவனை எளிமையானது என்று சிந்தித்து அந்த பாவனையின் வழி தடுமாறாமல் செல்ல வேண்டும். இதற்கும் மேலாக தெய்வத்தின் பெயரை எப்பொழுதும் கூறிக்கொண்டு இருந்தால் ஓர் தொடர்பு உண்டாகி இறைவனின் சிந்தனை எப்பொழுதும் மனதில் இருக்கும். இவ்வாறு இறைவனின் பெயரைக் கூறிக்கொண்டு இருந்தால் என்னைப் பலர் கேலி செய்கின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்கள் கேலி செய்கின்றதை பொருட்படுத்தாமல் எப்பொழுதும் இறைவன் பெயரை மனதில் கூறிட தெய்வ சிந்தனை எப்பொழுதும் மனதை விட்டு நீங்காமல் செய்கின்ற எந்தக் காரியமும் தெய்வீகக் காரியமாகவே தோன்றும்.

பாடல் #646

பாடல் #646: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்
நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்
நீடுந் துரங்கேட்டல் நீண்முடி வீராறே.

விளக்கம்:

எண்ணிலடங்காத நோய்கள் போன்ற பிறப்புகளில் நம்மைச் சூழ்ந்து பற்றிக் கொண்டிருக்கும் உறவுகளும், நிலைத்திருக்கும் கலை உணர்வுகளும், அந்த உணர்வுகளைத் தரும் கல்விகளும், அந்தக் கல்விகளால் வரும் தெளிவும், அந்தத் தெளிவால் பெறப்படும் நுட்பமான உணர்வுகளும், அந்த உணர்வினால் அடையும் பெருமைகளாலும் எட்டுவித சித்திகளும் கிடைப்பதில்லை. பன்னிரண்டு ஆண்டுகள் ஆத்ம குரு கூறிய வழியைக் கேட்டு அதன்படி பொறுமையுடன் நடந்துவந்தால் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.

கருத்து: உலகத்தில் கிடைக்கும் எதனாலும் சித்திகள் கிடைப்பதில்லை. பன்னிரண்டு ஆண்டுகள் குரு கூறிய வழியைக் கடைபிடித்தால் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.

பாடல் #647

மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்
தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே.

விளக்கம்:

பாடல் #644 #645 #646 இல் உள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்தால் ஏழாவது ஆண்டில் சூறாவளிக் காற்றைவிட வேகமாக செல்லக்கூடிய தன்மையும் உடல் தளராது நெடுந்தூரம் நடந்து செல்லக்கூடிய வலிமையும் கிடைக்கும். எட்டாவது ஆண்டில் வயோதிகத்தால் வரும் நரைமுடியும் உடல் சுருக்கங்களும் மறைந்து இளமை கிடைக்கும். ஒன்பதாவது ஆண்டில் என்றும் அழியாத உடல் கிடைக்கும்.

கருத்து: குரு அருளிய யோக முறையைக் கடைபிடித்தால் 7,8,9 ஆம் ஆண்டுகளில் வேகமும் வலிமையும் இளமையும் அழியாத உடலும் கிடைக்கும்.

பாடல் #648

பாடல் #648: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்
ஏரொன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே.

விளக்கம்:

பாடல் #644 #645 #646 ல் உள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்து வந்தால் பத்தாவது ஆண்டில் தியானத்திலிருக்கும் சிவ நிலையை அடையலாம். பதினோராவது ஆண்டில் எட்டுவித சித்திகளும் கிடைக்கும். பன்னிரண்டாவது ஆண்டில் மேலிருக்கும் ஏழு உலகங்களுக்கும் கீழிருக்கும் ஏழு உலகங்களுக்கும் சென்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து இருக்கும் நிலையை அடையலாம்.

கருத்து: குரு அருளிய யோக முறையைக் கடைபிடித்தால் 10,11,12 ஆம் ஆண்டுகளில் சிவ நிலையும் எட்டுவித சித்திகளையும் எங்கும் பரந்து இருக்கும் நிலையையும் அடையலாம்.

பாடல் #649

பாடல் #649: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தானே அணுவுஞ் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகமுந்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே.

விளக்கம்:

தானே அணிமாவும் உலகமாகிய மகிமாவும் கனமுடையதாகிய கரிமாவும் எல்லவற்றிலும் அடங்கிய ஆகாயமாகிய லகிமாவும் அழியா உடலையடைதலாகிய பிரப்தியும் தானே ஆதலாகிய பரகாயத்தை அடையும் பிராகாமியமும் அமையாத உண்மையாகிய ஈசத்துவமும் வியாப்பியமாகிய வசித்துவமும் ஆகியவை அட்டமா சித்திகள் ஆகும்.

எட்டுவித சித்திகள்:

  1. அணிமா – அணுவைப் போல் உடலை சிறிதாக்கும் ஆற்றல்.
  2. மகிமா – மலையைப் போல் உடலை பெரிதாக்கும் ஆற்றல்.
  3. கரிமா – மலை போல எதனாலும் அசைக்க முடியாத அளவு உடலை கனமாக்கும் ஆற்றல்.
  4. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் உடலை மாற்றி எங்கும் செல்லும் ஆற்றல்.
  5. பிராப்தி – தூரத்திலிருப்பதையும் இருக்கும் இடத்திலேயே பார்க்கவும், மனதினால் நினைத்தவை யாவையும் அடையவும் பெறும் ஆற்றல்.
  6. பிராகாமியம் – எதையும் நினைத்தவுடன் அதாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல்.
  7. ஈசத்துவம் – ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைத் தன் ஆளுகைக்குட்பட்டுச் செய்தல்.
  8. வசித்துவம் – ஈரேழு பதினான்கு உலகங்களிலும் கலந்து, அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து இருக்கும் ஆற்றல்.

கருத்து: எட்டுவித சித்திகளாவன அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.

பாடல் #650

பாடல் #650: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கி வரமுத்தி முந்திய வாறே.

விளக்கம்:

சிவயோகியாகி அணு அளவு மாறினாலும் பல உயிர்களைத் தாங்கும் தன்மையைப் பெறுவார். அவ்வுயிர்களைத் தமக்குள் கலந்து இருந்த போதும் தமக்குள் எந்தவித மாற்றமும் இல்லை. தமக்குள் இருக்கும் அவ்வுயிர்கள் ஓம் எனும் நாதமாக எழுந்து உச்சிக்கு சென்று முக்தி பெறுகின்றன.

கருத்து: அட்டமா சித்தியடைந்தவர் எவ்வுயிரையும் தமக்குள் எடுத்து முக்தி பெறச் செய்வார்.