பாடல் #1344

பாடல் #1344: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தானது சும்மீறீக் கௌவது வீரா
நானது சக்கர நன்றறி வார்க்கெல்லாங்
கானது கன்னி கலந்த பராசத்தி
கேளது வையங் கிளரொளி வானதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானது சுமமீறீக கௌவது வீரா
நானது சககர நனறறி வாரககெலலாங
கானது கனனி கலநத பராசததி
கெளது வையங கிளரொளி வானதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் அது சும் ஈறீம் கௌ அது ஈரா
நான் அது சக்கரம் நன்று அறிவார்க்கு எல்லாம்
கான் அது கன்னி கலந்த பராசத்தி
கேள் அது வையம் கிளர் ஒளி வான் அதே.

பதப்பொருள்:

தான் (சக்கரம்) அது (அதுவாகவே இருக்கின்ற) சும் (ஸெளம்) ஈறீம் (ஹ்ரீம்) கௌ (கெளம்) அது (ஆகிய பீஜங்களை) ஈரா (ஒவ்வொன்றும் இரண்டு முறையாக அமைத்தால்)
நான் (சாதகரும்) அது (அதுவாகவே) சக்கரம் (சக்கரத்தில் இருப்பதை) நன்று (தமக்குள்ளேயே நன்றாக) அறிவார்க்கு (அறிந்து கொள்ளுகின்ற) எல்லாம் (சாதகர்களெல்லாம்)
கான் (பார்க்கின்ற) அது (அனைத்திலும்) கன்னி (என்றும் இளமையாகவே) கலந்த (ஒன்றோடு ஒன்றாகக் கலந்து இருக்கின்ற) பராசத்தி (அசையும் சக்தியாகிய இறைவியை பார்ப்பார்கள்)
கேள் (யான் சொல்வதைக் கேளுங்கள்) அது (அப்போது) வையம் (அனைத்து உலகங்களாகவும்) கிளர் (பிரகாசத்தோடு பரந்து விரிந்து இருக்கின்ற) ஒளி (பேரொளியாகவும்) வான் (ஆகாயமாகவும்) அதே (அந்த இறைவியே இருப்பதை தெரிந்து கொள்வீர்கள்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரமாகவே இருக்கின்ற பீஜங்களில் ‘ஸெளம்’ ‘ஹ்ரீம்’ மற்றும் ‘கௌம்’ ஓவ்வொன்றும் இரண்டு முறையாக அமைத்தால் வருகின்ற சக்கர அமைப்பில் சாதகரும் சக்கரமாகவே இருப்பதை தமக்குள் அதை நன்றாக அறிந்து கொள்ளுகின்ற சாதகர்கள் அனைவரும் தாம் காணுகின்ற அனைத்திலும் என்றும் இளமையுடன் அசையும் சக்தியாக இருக்கின்ற இறைவியானவள் ஒன்றாகக் கலந்து இருப்பதை பார்ப்பார்கள். அது மட்டுமின்றி யான் சொல்வதையும் கேட்டுக் கொள்பவர்கள் அந்த இறைவியானவளே அனைத்து உலகங்களாகவும் பிரகாசத்தோடு அனைத்து உலகங்களுக்கும் பரந்து விரிந்து இருக்கின்ற பேரொளியாகவும் அவை இருக்கின்ற ஆகாயமாகவும் இருப்பதை தெரிந்து கொள்வார்கள்.

பாடல் #1345

பாடல் #1345: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஒளிக்கும் பராசத்தி யுள்ளே யமரிற்
களிக்கு மிச்சிந்தை யுங்காரணங் காட்டித்
தெளிக்கு மழையுடன் செல்வ முண்டாக்கு
மளிக்கு மிவளை யறிந்து கொள்வார்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒளிககும பராசததி யுளளெ யமரிற
களிககு மிசசிநதை யுஙகாரணங காடடித
தெளிககு மழையுடன செலவ முணடாககு
மளிககு மிவளை யறிநது கொளவாரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையும் காரணம் காட்டித்
தெளிக்கும் அழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே.

பதப்பொருள்:

ஒளிக்கும் (பேரொளியாக விளங்குகின்ற) பராசத்தி (அசையும் சக்தியான இறைவி) உள்ளே (சாதகருக்குள் வந்து) அமரில் (வீற்றிருந்தால்)
களிக்கும் (பேரின்பத்தில் திளைக்கும்) இச் (சாதகரின்) சிந்தையும் (மனம் முழுவதும்) காரணம் (அதற்கான காரணமாகவே) காட்டித் (தம்மைக் காட்டி)
தெளிக்கும் (தெளிவு படுத்துகின்றாள்) அழையுடன் (அதன் பிறகு சாதகரை தம்மோடு சேர்த்துக் கொண்டு) செல்வம் (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் உண்மைப் பொருளை உணர்த்தும் அருளையும்) உண்டாக்கும் (உண்டாக்கி)
அளிக்கும் (சாதகருக்கு அளிக்கின்றாள்) இவளை (இப்படிப்பட்ட இறைவியை) அறிந்து (முழுவதுமாகத் தமக்குள் அறிந்து) கொள்வார்க்கே (கொண்ட சாதகர்களுக்கே இவை அனைத்தையும் இறைவி அருளுகின்றாள்).

விளக்கம்:

பாடல் #1343 இல் உள்ளபடி அனைத்து உலகங்களுக்கும் பரந்து விரிந்து இருக்கின்ற பேரொளியாக விளங்குகின்ற அசையும் சக்தியான இறைவி சாதகருக்குள் வந்து வீற்றிருந்தால் சாதகரின் மனம் பேரின்பத்தில் திளைத்திருக்கும். அப்போது அந்த பேரின்பத்திற்கு காரணம் தாமே என்பதை இறைவி சாதகருக்கு காண்பித்து தெளிவு படுத்துகின்றாள். அது மட்டுமின்றி நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் உண்மைப் பொருளை உணர்த்துகின்ற அருளையும் உருவாக்கி சாதகருக்கு அளிக்கின்றாள். இவை அனைத்தும் பேரொளியாக இருக்கின்ற இறைவியை தமக்குள் முழுவதுமாக அறிந்து கொண்ட சாதகர்களுக்கே இறைவி அருளுகின்றாள்.

பாடல் #1346

பாடல் #1346: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அறிந்திடுஞ் சக்கர மற்சனை யோடே
யறிந்திடும் வையத்திடர் வகை காணில்
மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யிற்
பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிநதிடுஞ சககர மறசனை யொடெ
யறிநதிடும வையததிடர வகை காணில
மறிநதிடு மனனனும வநதனை செயயிற
பொறிநதிடுஞ சிநதை புகையிலலை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே
அறிந்திடும் வையத்து இடர் வகை காணில்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யில்
பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே.

பதப்பொருள்:

அறிந்திடும் (சாதகர் அறிந்து கொண்ட) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை) அருச்சனை (தமக்குள்ளேயே வைத்து பூஜைகள்) யோடே (செய்து கொண்டே இருந்தால்)
அறிந்திடும் (சாதகர் அறிந்து கொண்ட) வையத்து (உலகத்தில் உள்ள) இடர் (துன்பங்களின்) வகை (வகைகள் அனைத்தையும்) காணில் (கண்டு கொண்டால் அதிலிருந்து விலகி இருக்க முடியும்)
மறிந்திடும் (பகைவர்களைத் தடுத்து நாட்டு மக்களை காக்கின்ற) மன்னனும் (அரசர்களும்) வந்தனை (வந்து வணக்கம்) செய்யில் (செலுத்தும் நிலையில் இருந்து)
பொறிந்திடும் (இறை நினைப்பிலேயே திளைத்து இருக்கின்ற) சிந்தை (சாதகரின் சிந்தனைக்குள்) புகை (எந்தவிதமான துன்பகரமான எண்ணங்களும்) இல்லை (இல்லாமல் எப்போதும்) தானே (பேரின்பத்திலேயே இருப்பார்).

விளக்கம்:

பாடல் #1345 இல் உள்ளபடி இறைவியை தமக்குள் முழுவதுமாக அறிந்து கொண்ட சாதகர்கள் அவள் வீற்றிருக்கும் நவாக்கிரி சக்கரத்தை தமக்குள்ளேயே பூஜித்து வந்தால் அவர்களால் உலகத்திலுள்ள அனைத்து விதமான துன்பங்களையும் கண்டு அறிந்து கொண்டு அவற்றில் இருந்து விலகி இருக்க முடியும். இந்த நிலையை அடைந்த சாதகர்களை பகைவர்களைத் தடுத்து நாட்டு மக்களை காக்கின்ற பெரும் அரசர்களும் அவர் இருக்கும் இடம் தேடி வந்து அவரை வணங்குவார்கள். அரசர்களும் வந்து வணங்கினாலும் உலகப் பற்று இல்லாமல் இறை நினைப்பிலேயே திளைத்து இருக்கின்ற சாதகர்களின் சிந்தனைக்குள் எந்தவிதமான துன்பகரமான எண்ணங்களும் வராமல் அவர்கள் எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பார்கள்.

பாடல் #1347

பாடல் #1347: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

புகையில்லைச் சொல்லிய பொன்னொளி யுண்டங்
குகையில்லைக் கொல்வ திலாமை யினாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்
சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர் தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

புகையிலலைச சொலலிய பொனனொளி யுணடங
குகையிலலைக கொலவ திலாமை யினாலெ
வகையிலலை வாழகினற மனனுயிரக கெலலாஞ
சிகையிலலைச சககரஞ செரநதவர தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டு அங்கு
உகை இல்லை கொல்வது இல்லாமையின் ஆலே
வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம்
சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே.

பதப்பொருள்:

புகை (சாதகருக்கு எந்தவிதமான துன்பமும்) இல்லை (இல்லை) சொல்லிய (ஏற்கனவே சொல்லியது போல) பொன் (தங்க நிறத்தில் பிரகாசிக்கும்) ஒளி (ஒளி பொருந்திய) உண்டு (உடல் உண்டு) அங்கு (சாதகருக்கு)
உகை (ஒளி பொருந்திய சாதகர் இருக்கும் இடத்தில் மாபெரும் பாதகங்கள்) இல்லை (இல்லை ஏனென்றால்) கொல்வது (அவரைச் சுற்றி எந்த உயிரும் இன்னொரு உயிரை கொல்லுகின்ற) இல்லாமையின் (எண்ணமே இல்லாமல் இருக்கின்ற) ஆலே (காரணத்தினால்)
வகை (அவர் பிரித்துப் பார்ப்பது) இல்லை (இல்லை) வாழ்கின்ற (உலகத்தில் வாழ்கின்ற) மன் (அசையும்) உயிர்க்கு (உயிர்கள்) எல்லாம் (அனைத்தையும்)
சிகை (அவருக்கு முடிவு) இல்லை (என்பதும் இல்லை) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை) சேர்ந்தவர் (சேர்ந்தே இருக்கின்ற) தாமே (சாதகர்களுக்கு).

விளக்கம்:

பாடல் #1346 இல் உள்ளபடி இறை நினைப்பிலேயே திளைத்து இருக்கின்ற சாதகர்களின் சிந்தனைக்குள் எந்தவிதமான துன்பகரமான எண்ணங்களும் இல்லை. பாடல் #1344 இல் சொல்லி உள்ளபடி தங்க நிறத்தில் பிரகாசிக்கும் ஒளி பொருந்திய உடலும் அவருக்கு உண்டு. ஒளி பொருந்திய சாதகர் இருக்கும் இடத்தில் மாபெரும் பாதகங்கள் எதுவும் இல்லை ஏனென்றால் அவரைச் சுற்றி எந்த உயிரும் இன்னொரு உயிரை கொல்லுகின்ற எண்ணமே இல்லாமல் இருக்கும் காரணத்தினால். இந்த உலகத்தில் வாழ்கின்ற அசையும் உயிர்கள் அனைத்தையும் பல வகைகளாக பிரித்துப் பார்க்காமல் இறை அம்சமாகவே பார்க்கின்றார். இப்படி நவாக்கிரி சக்கரத்தை சேர்ந்தே இருக்கின்ற சாதகர்களுக்கு முடிவு என்பதும் இல்லை.

பாடல் #1348

பாடல் #1348: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சேர்ந்தவ ரென்றுந் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழு முள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

செரநதவ ரெனறுந திசையொளி யானவர
காயநதெழு மெலவினை காணகி லாதவர
பாயநதெழு முளளொளி பாரிற பரநதது
மாயநதது காரிருள மாறொளி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர்
காய்ந்து எழும் மேல் வினை காண இலாதவர்
பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது
மாய்ந்தது கார் இருள் மாறு ஒளி தானே.

பதப்பொருள்:

சேர்ந்தவர் (நவாக்கிரி சக்கரத்தை சேர்ந்தே இருக்கின்ற சாதகர்கள்) என்றும் (எப்பொழுதும்) திசை (அனைத்து திசைகளுக்கும்) ஒளி (பரவும் ஒளியாகவே) ஆனவர் (இருப்பார்கள்)
காய்ந்து (இது வரை பல பிறவிகளாக அவர்களைத் தொடர்ந்து) எழும் (வருகின்ற) மேல் (உச்ச) வினை (வினைகள்) காண (இனிமேல் அவரைத் தொடர்ந்து வராமல்) இலாதவர் (அழிந்து எந்த வினையும் இல்லாமல் இருப்பார்கள்)
பாய்ந்து (அவர்களுக்கு உள்ளிருந்து வேகமாக) எழும் (மேலெழுந்து வருகின்ற) உள் (ஞானமாகிய) ஒளி (ஒளியானது) பாரில் (உலகம் முழுவதும்) பரந்தது (பரந்து விரியும்)
மாய்ந்தது (அதன் பிறகு அழிந்து போகின்ற) கார் (மாயையாகிய) இருள் (இருளை) மாறு (மாற்றி) ஒளி (ஞானமாகிய ஒளியை) தானே (தம்மை நாடி வரும் தகுதியானவர்களுக்கு கொடுக்கின்றவராக சாதகர்கள் இருப்பார்கள்).

விளக்கம்:

பாடல் #1347 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சேர்ந்தே இருக்கின்ற சாதகர்கள் எப்பொழுதும் அனைத்து திசைகளுக்கும் பரவிச் செல்லுகின்ற ஒளியாகவே இருப்பார்கள். இது வரை பல பிறவிகளாக அவர்களைத் தொடர்ந்து வருகின்ற உச்ச வினைகள் இனிமேல் அவரைத் தொடர்ந்து வராமல் அழிந்து எந்த வினையும் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு உள்ளிருந்து வேகமாக மேலெழுந்து வருகின்ற ஞானமாகிய ஒளியானது உலகம் முழுவதும் பரந்து விரியும். அதன் பிறகு தம்மை நாடி வரும் தகுதியானவர்களுக்கு அவர்களுடைய மாயையாகிய இருளை அழித்து ஞானமாகிய ஒளியை கொடுக்கின்றவராக சாதகர்கள் இருப்பார்கள்.

பாடல் #1349

பாடல் #1349: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஒளியது ஹௌ முதல்ஹ்ரீ மதுவீறாங்
களியது சக்கரங் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்
பளியது பஞ்சாக் கரமது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒளியது ஹெள முதலஹரீ மதுவீறாங
களியது சககரங கணடறி வாரககுத
தெளிவது ஞானமுஞ சிநதையுந தெறப
பளியது பஞசாக கரமது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒளி அது ஹௌ முதல் ஹ்ரீம் அது ஈறு ஆம்
களி அது சக்கரம் கண்டு அறிவார்க்குத்
தெளிவு அது ஞானமும் சிந்தையும் தேறப்
பளி அது பஞ்ச அக்கரம் அது ஆமே.

பதப்பொருள்:

ஒளி (பேரொளி அம்சமாகவே) அது (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை) ஹௌ (ஹௌம் எனும் பீஜம்) முதல் (முதலில் இருந்து) ஹ்ரீம் (ஹ்ரீம் எனும்) அது (பீஜத்தை) ஈறு (கடைசியாக வைத்து) ஆம் (முறைப்படி அமைத்து தியானித்தால்)
களி (உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கின்ற) அது (அதுவே) சக்கரம் (நவாக்கிரி சக்கரமாகவும் இருப்பதை) கண்டு (தமக்குள் கண்டு) அறிவார்க்குத் (அறிந்து கொள்ளுகின்ற சாதகர்களுக்கு)
தெளிவு (உண்மை பொருளை தெளிவு படுத்துவதாகவும்) அது (அதுவே இருந்து) ஞானமும் (உண்மை ஞானத்தைக் கொடுப்பதாகவும்) சிந்தையும் (எண்ணங்கள்) தேறப் (தேர்ச்சி பெறும் ஞானத்தை)
பளி (கற்றுக் கொடுக்கின்ற இடமாகவும்) அது (அதுவே இருந்து) பஞ்ச (இறைவனின் எழுத்து வடிவான ஐந்து) அக்கரம் (அட்சரங்களைக் கொண்ட ‘நமசிவாய’ மந்திரமாகவும்) அது (அதுவே) ஆமே (இருக்கின்றது).

விளக்கம்:

பாடல் #1348 இல் உள்ளபடி தகுதியானவர்களுக்கு மாயை அழித்து ஞானத்தைக் கொடுக்கின்ற சாதகர்களுக்கு உள்ளே இருக்கின்ற ஒளியான நவாக்கிரி சக்கரத்தில் ‘ஹௌம்’ எனும் பீஜம் முதலில் வைத்து ‘ஹ்ரீம்’ எனும் பீஜத்தை கடைசியாக வைத்து முறைப்படி அமைத்து தியானித்தால் உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கின்றதாக அதுவே இருக்கும். இந்த நவாக்கிரி சக்கரத்தை தமக்குள் கண்டு அறிந்து கொள்ளுகின்ற சாதகர்களுக்கு உண்மை பொருளை தெளிவு படுத்துவதாகவும் அதுவே இருந்து உண்மை ஞானத்தைக் கொடுப்பதாகவும், எண்ணங்கள் தெளிவு பெறும் அறிவைக் கற்றுக் கொடுக்கின்ற இடமாகவும் அதுவே இருக்கும். அது மட்டுமின்றி இறைவனின் எழுத்து வடிவான ஐந்து அட்சரங்களைக் கொண்ட ‘நமசிவாய’ மந்திரமாகவும் அதுவே இருக்கின்றது.

பாடல் #1350

பாடல் #1350: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆமே சதாசிவ நாயகி யானவ
ளாமே யதோமுகத் துள்ளறி வானவ
ளாமே சுவையொளி யூரோசை கொண்டவ
ளாமே யனைத்துயிர் தன்னுளு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ சதாசிவ நாயகி யானவ
ளாமெ யதொமுகத துளளறி வானவ
ளாமெ சுவையொளி யூரொசை கொணடவ
ளாமெ யனைததுயிர தனனுளு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே சதாசிவ நாயகி ஆனவள்
ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள்
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கொண்டவள்
ஆமே அனைத்து உயிர் தன் உளும் ஆமே.

பதப்பொருள்:

ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) சதாசிவ (அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தியின்) நாயகி (சரி பாதியான இறைவியாகவும்) ஆனவள் (இருக்கின்றாள்)
ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) அதோ (இறைவனின் ஐந்து முகங்களில் கீழ் நோக்கிய முகமாகிய அதோ) முகத்து (முகத்தில்) உள் (அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்தையும் தாங்கி இருக்கின்ற) அறிவு (அறிவாகவும்) ஆனவள் (அவளே இருக்கின்றாள்)
ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) சுவை (புலன்களின் மூலம் உயிர்கள் உணர்கின்ற உணர்வுகளில் சுவைக்கின்ற உணர்வு) ஒளி (பார்க்கின்ற உணர்வு) ஊறு (தொடுகின்ற உணர்வு) ஓசை (கேட்கின்ற உணர்வு) கொண்டவள் (ஆகிய அனைத்து உணர்வுகளையும் அறிகின்ற உயிர்களுக்கான ஞானத்தை தனக்குள்ளே கொண்டவள்)
ஆமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே) அனைத்து (அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து) உயிர் (உயிர்களையும்) தன் (தமக்கு) உளும் (உள்ளேயே தாங்கிக் கொண்டவள்) ஆமே (ஆகவும் இருக்கின்றாள்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் அசையும் சக்தியாகிய பரா சக்தியே அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தியின் சரி பாதியான இறைவியாக இருக்கின்றாள். அவளே இறைவனின் ஐந்து முகங்களில் கீழ் நோக்கிய முகமாகிய அதோ முகத்தில் அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்தையும் தாங்கி இருக்கின்ற அறிவாகவும் இருக்கின்றாள். அவளே புலன்களின் மூலம் உயிர்கள் உணர்கின்ற உணர்வுகளில் சுவைக்கின்ற உணர்வு, பார்க்கின்ற உணர்வு, தொடுகின்ற உணர்வு, கேட்கின்ற உணர்வு ஆகிய அனைத்து உணர்வுகளையும் அறிகின்ற உயிர்களுக்கான ஞானத்தை தனக்குள் கொண்டிருக்கின்றாள். அவளே அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து உயிர்களையும் தனக்குள் தாங்கிக் கொண்டு இருக்கின்றாள்.

பாடல் #1351

பாடல் #1351: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி யிடம்பெற நின்றவள்
மன்னுளு நீரனல் காலுளும் வானுளுங்
கண்ணுளு மெய்யுளுங் காணலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனனுளு மாகித தரணி முளுதுஙகொண
டெனனுளு மாகி யிடமபெற நினறவள
மனனுளு நீரனல காலுளும வானுளுங
கணணுளு மெயயுளுங காணலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தன் உளும் ஆகித் தரணி முழுதும் கொண்டு
என் உளும் ஆகி இடம் பெற நின்றவள்
மண் உளும் நீர் அனல் கால் உளும் வான் உளும்
கண் உளும் மெய் உளும் காணலும் ஆமே.

பதப்பொருள்:

தன் (இறைவியானவள் தனக்கு) உளும் (உள்ளேயும்) ஆகித் (அனைத்தும் ஆகி) தரணி (அண்ட சராசரங்களில் இருக்கின்ற உலகங்கள்) முழுதும் (அனைத்தையும்) கொண்டு (தனக்குள் கொண்டு)
என் (எமக்கு) உளும் (உள்ளேயும்) ஆகி (அனைத்தும் ஆகி) இடம் (எமக்குள் முழுவதும்) பெற (நிறைந்து) நின்றவள் (நிற்கின்றாள்)
மண் (அவளே பஞ்ச பூதங்களில் நிலத்தின்) உளும் (உள்ளேயும்) நீர் (நீரின் உள்ளேயும்) அனல் (நெருப்பின் உள்ளேயும்) கால் (காற்றின்) உளும் (உள்ளேயும்) வான் (ஆகாயத்தின்) உளும் (உள்ளேயும்)
கண் (எமது கண்ணின்) உளும் (உள்ளேயும்) மெய் (எமது உடலுக்கு) உளும் (உள்ளேயும் வீற்றிருக்கிறாள் என்பதை) காணலும் (தரிசிக்க) ஆமே (முடியுமே).

விளக்கம்:

பாடல் #1350 இல் உள்ளபடி அனைத்து உயிர்களையும் தனக்குள் தாங்கி அனைத்துமாகவே இருக்கின்ற இறைவியானவள் அண்ட சராசரங்களில் இருக்கின்ற உலகங்கள் அனைத்தையும் தனக்குள் கொண்டும் இருக்கின்றாள். அவளே எமக்கு உள்ளேயும் அனைத்தும் ஆகி எமக்குள் முழுவதும் நிறைந்து நிற்கின்றாள். அவளே பஞ்ச பூதங்களில் நிலத்தின் உள்ளேயும் நீரின் உள்ளேயும் நெருப்பின் உள்ளேயும் காற்றின் உள்ளேயும் ஆகாயத்தின் உள்ளேயும் இருக்கின்றாள். அவளே எமது கண்ணின் உள்ளேயும் எமது உடலுக்கு உள்ளேயும் வீற்றிருக்கிறாள் என்பதை நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்யும் சாதகர்களால் தரிசிக்கவும் முடியும்.

பாடல் #1352

பாடல் #1352: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்
காணலு மாகுங் கலந்து வழிசெய்யக்
காணலு மாகுங் கருத்துற நில்லே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காணலு மாகுங கலநதுயிர செயவன
காணலு மாகுங கருதது ளிருநதிடிற
காணலு மாகுங கலநது வழிசெயயக
காணலு மாகுங கருததுற நிலலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில்
காணலும் ஆகும் கலந்து வழி செய்யக்
காணலும் ஆகும் கருத்து உற நில்லே.

பதப்பொருள்:

காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கலந்து (இறைவி ஒன்றாகக் கலந்து) உயிர் (உயிர்களோடு நின்று) செய்வன (செய்கின்ற அனைத்து செயல்களையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கருத்து (உயிர்களின் எண்ணங்களுக்கு) உள் (உள்ளே) இருந்திடில் (இறைவி இருக்கின்ற தன்மையையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கலந்து (உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று) வழி (அவற்றுக்கு ஏற்ற நல் வழியில்) செய்யக் (செல்ல வைப்பதையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கருத்து (ஆகவே உங்களது எண்ணங்களில்) உற (எப்போதும் இறைவியை வைத்து) நில்லே (தியானித்து இருங்கள்).

விளக்கம்:

பாடல் #1351 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்யும் சாதகர்களால் இறைவியானவள் உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று செய்கின்ற அனைத்து செயல்களையும் தரிசிக்க முடியும். அது மட்டுமின்றி உயிர்களின் எண்ணங்களுக்கு உள்ளே இறைவி இருக்கின்ற தன்மையையும் தரிசிக்க முடியும். அது போலவே உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று அவற்றுக்கு ஏற்ற நல் வழியில் இறைவி செல்ல வைப்பதையும் தரிசிக்க முடியும். ஆகவே உங்களது எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்து தியானித்து இருங்கள்.

பாடல் #1353

பாடல் #1353: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்றிட மேழு புவனமு மொன்றாகக்
கண்டிடு முள்ளங் கலந்தெங்குந் தானாகக்
கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறிட மெழு புவனமு மொனறாகக
கணடிடு முளளங கலநதெஙகுந தானாகக
கொணடிடும வையங குணமபல தனனையும
விணடிடும வலவினை மெயபபொரு ளாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்று இடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டு இடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக
கொண்டு இடும் வையம் குணம் பல தன்னையும்
விண்டு இடும் வல் வினை மெய்ப் பொருள் ஆகுமே.

பதப்பொருள்:

நின்று (சாதகர் சாதகம்) இடும் (செய்கின்ற இடத்திலிருந்தே) ஏழு (ஏழு விதமான) புவனமும் (உலகங்களையும்) ஒன்றாகக் (ஒரு உலகம் போலவே ஒன்றாகக்)
கண்டு (தமக்குள் பார்ப்பதை) இடும் (செய்கின்ற சாதகரின்) உள்ளம் (உள்ளம்) கலந்து (அனைத்தோடும் கலந்து) எங்கும் (அனைத்தும்) தான் (தாமாகவே) ஆக (ஆகி இருப்பதை)
கொண்டு (ஒன்றாகப் பார்க்கின்றதை) இடும் (செய்கின்ற சாதகர்) வையம் (உலகத்தில் இருக்கின்ற) குணம் (தன்மைகள்) பல (பலவாறாக இருக்கின்ற) தன்னையும் (குணங்களையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்வார்கள்)
விண்டு (உயிர்களிடமிருந்து பிரிப்பதை) இடும் (செய்கின்ற) வல் (கொடிய) வினை (வினைகளை எல்லாம் பிரித்து விடுகின்ற) மெய்ப் (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மைப்) பொருள் (பொருளாகவே) ஆகுமே (சாதகரும் ஆகிவிடுவார்கள்).

விளக்கம்:

பாடல் #1352 இல் உள்ளபடி தமது எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்து தியானித்து இருக்கின்ற சாதகர்கள் தாம் சாதகம் செய்கின்ற இடத்திலிருந்தே ஏழு விதமான உலகங்களையும் ஒரு உலகம் போலவே ஒன்றாகப் பார்க்கின்ற உள்ளத்தைப் பெறுகிறார்கள். அப்படி அனைத்து உலகங்களையும் ஒன்றாகவே பார்க்கின்ற சாதகர்கள் அனைத்தோடும் கலந்து அனைத்தும் தாமாகவே ஆகி விடுவது மட்டுமின்றி உலகத்தில் பலவாறாக இருக்கின்ற தன்மைகள் அனைத்தையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்வார்கள். அதனால் உயிர்களிடமிருந்து கொடுமையான வினைகளைப் பிரித்து நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே சாதகரும் ஆகிவிடுவார்கள்.