“திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 16-10-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
Month: அக்டோபர் 2022
பாடல் #1557
பாடல் #1557: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
இமையவர் தம்மையு மெம்மையு முன்னம்
அமைய வகுத்தவ னாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் றாளிணை நாட
வமையங் கழல்நின்ற வாதிப் பிரானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இமையவர தமமையு மெமமையு முனனம
அமைய வகுததவ னாதி புராணன
சமையஙக ளாறுநதன றாளிணை நாட
வமையங கழலநினற வாதிப பிரானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட
அமைய அங்கு அழல் நின்ற ஆதி பிரானே.
பதப்பொருள்:
இமையவர் (விண்ணுலக தேவர்கள்) தம்மையும் (அனைவரையும்) எம்மையும் (மண்ணுலக மனிதர்கள் அனைவரையும்) முன்னம் (ஆதி காலத்திலேயே)
அமைய (அவரவர் வினைகளுக்கு ஏற்ப) வகுத்தவன் (வகுத்து படைத்தவன்) ஆதி (ஆதியாகவும் / முதல்வனாகவும்) புராணன் (பழமையானவனாகவும் இருக்கின்ற இறைவன்)
சமையங்கள் (அவனை அடைவதற்கான வழி முறைகள்) ஆறும் (ஆறையும்) தன் (தனது) தாள் (திருவடிக்கு) இணை (இணையான முக்தியை) நாட (தமக்குள்ளேயே தேடி அடைவதற்காக)
அமைய (அவரவர் தகுதிகளுக்கு ஏற்றபடி அமைத்துக் கொடுத்து) அங்கு (அதை முறையாக கடைபிடிப்பவர்கள் பக்குவ நிலையை அடையும் போது அவர்களுக்குள்) அழல் (நெருப்பு வடிவமாக வந்து) நின்ற (நிற்கின்றான்) ஆதி (ஆதியிலிருந்தே) பிரானே (அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன்).
விளக்கம்:
விண்ணுலக தேவர்கள் அனைவரையும் மண்ணுலக மனிதர்கள் அனைவரையும் ஆதி காலத்திலேயே அவரவர் வினைகளுக்கு ஏற்ப வகுத்து படைத்தவன் ஆதியாகவும் பழமையானவனாகவும் இருக்கின்ற இறைவன். அவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் தனது திருவடிக்கு இணையான முக்தியை தமக்குள்ளேயே தேடி அடைவதற்காக அவரவர் தகுதிகளுக்கு ஏற்றபடி அமைத்துக் கொடுத்து அதை முறையாக கடைபிடிப்பவர்கள் பக்குவ நிலையை அடையும் போது அவர்களுக்குள் நெருப்பு வடிவமாக வந்து நிற்கின்றான் ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன்.
பாடல் #1558
பாடல் #1558: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
ஒன்றது பேரூர் வழியா றதற்குள
வென்றது போல விருமுச் சமையமு
நன்றிது தீதிது யென்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஒனறது பேரூர வழியா றதறகுள
வெனறது பொல விருமுச சமையமு
நனறிது தீதிது யெனறுரை யாளரகள
குனறு குரைததெழு நாயையொத தாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள
என்று அது போல இரு முச் சமையமும்
நன்று இது தீது இது என்று உரை ஆளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தாரே.
பதப்பொருள்:
ஒன்று (ஒன்றாக) அது (இருக்கின்ற) பேரூர் (மிகப் பெரும் ஊருக்கு / முக்திக்கு) வழி (வழியாக) ஆறு (ஆறு விதமானவை) அதற்கு (அதை நோக்கிச் செல்லுகின்ற வழிகளாக) உள (உள்ளன)
என்று (என்று கூறுகின்ற) அது (உவமையை) போல (போலவே) இரு (இரண்டும்) முச் (மூன்றும் பெருக்கி வரும் மொத்தம் ஆறு) சமையமும் (சமயங்களும் ஒரே பரம்பொருளாகிய இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையே சொல்லுகின்றன. ஆனால் இதை முழுவதுமாக உணர்ந்து கொள்ளாமல்)
நன்று (நன்மையானது) இது (இந்த சமயம்) தீது (தீமையானது) இது (இந்த சமயம்) என்று (என்று பிரித்து பிரித்து வேறுபாடுள்ள) உரை (கருத்துக்களை உரைத்து) ஆளர்கள் (தாம் கூறுவதே உண்மை என்று மற்றவர்களை நம்ப வைக்க பிரச்சாரம் செய்கின்றவர்கள்)
குன்று (மலையைப் பார்த்து) குரைத்து (குரைத்து) எழு (குதிக்கின்ற) நாயை (நாயை) ஒத்தாரே (போலவே இருக்கின்றார்கள்).
விளக்கம்:
ஒன்றாக இருக்கின்ற மிகப் பெரும் ஊருக்கு செல்லுவதற்கு ஆறு விதமான வழிகள் இருக்கின்றது. அது போலவே ஆறு விதமான சமயங்களும் ஒரே பரம்பொருளாகிய இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையே சொல்லுகின்றன. ஆனால் இதை முழுவதுமாக உணர்ந்து கொள்ளாமல் நன்மையானது இந்த சமயம் தீமையானது இந்த சமயம் என்று பிரித்து பிரித்து வேறுபாடுள்ள கருத்துக்களை உரைத்து தாம் கூறுவதே உண்மை என்று மற்றவர்களை நம்ப வைக்க பிரச்சாரம் செய்கின்றவர்கள் மலையைப் பார்த்து குரைத்து குதிக்கின்ற நாயை போலவே இருக்கின்றார்கள்.
பாடல் #1559
பாடல் #1559: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
சைவப் பெருமைத் தனிநாயகன் றன்னை
யுய்ய வுயிர்க்கின்ற வொண்சுடர் நந்தியை
மெய்யப் பெருமையர்க் கன்பனை யின்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந்துய் மினே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சைவப பெருமைத தனிநாயகன றனனை
யுயய வுயிரககினற வொணசுடர நநதியை
மெயயப பெருமையரக கனபனை யினபஞசெய
வையத தலைவனை வநதடைநதுய மினெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சைவ பெருமை தனி நாயகன் தன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம் செய்
வையத்து தலைவனை வந்து அடைந்து உய்மினே.
பதப்பொருள்:
சைவ (சைவம் என்று அறியப்படுகின்ற இறைவனை அடைவதற்கான நெறிமுறைக்கு) பெருமை (மிகப்பெரும் பெருமையாக இருக்கின்றவனும்) தனி (தனக்கு சரிசமமாக வேறு யாரும் இல்லாத) நாயகன் (தலைவனாக) தன்னை (இருக்கின்றவனும்)
உய்ய (உயிர்கள் அனைத்தும் தம்மை அடைவதற்காக) உயிர்க்கின்ற (அவற்றுக்குள் உணர்வாக கலந்து நின்று இயக்குகின்றவனும்) ஒண் (அதற்கான ஞானத்தை தரும்) சுடர் (ஜோதியாக இருந்து மாயையாகிய இருளை அகற்றுகின்ற) நந்தியை (குருநாதனாக இருக்கின்றவனும்)
மெய்ய (தம்மை உண்மையாக அறிந்து கொண்ட) பெருமையர்க்கு (பெருமை மிக்க அடியவர்களிடம்) அன்பனை (அன்பு செய்கின்ற அடியவனாக இருந்து) இன்பம் (பேரின்பத்தை) செய் (கொடுக்கின்றவனும்)
வையத்து (உலகங்கள் அனைத்திற்கும்) தலைவனை (தலைவனாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனை) வந்து (நீங்களும் வந்து) அடைந்து (உங்களுக்குள் தேடி அடைந்து) உய்மினே (அவனை உண்மையாக உணர்ந்து மேன்மை பெறுங்கள்).
விளக்கம்:
சைவம் என்று அறியப்படுகின்ற இறைவனை அடைவதற்கான நெறிமுறைக்கு மிகப்பெரும் பெருமையாக இருக்கின்றவனும் தனக்கு சரிசமமாக வேறு யாரும் இல்லாத தலைவனாக இருக்கின்றவனும் உயிர்கள் அனைத்தும் தம்மை அடைவதற்காக அவற்றுக்குள் உணர்வாக கலந்து நின்று இயக்குகின்றவனும் அதற்கான ஞானத்தை தரும் ஜோதியாக இருந்து மாயையாகிய இருளை அகற்றுகின்ற குருநாதனாக இருக்கின்றவனும் தம்மை உண்மையாக அறிந்து கொண்ட பெருமை மிக்க அடியவர்களிடம் அன்பு செய்கின்ற அடியவனாக இருந்து பேரின்பத்தை கொடுக்கின்றவனும் உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனை நீங்களும் வந்து உங்களுக்குள் தேடி அடைந்து அவனை உண்மையாக உணர்ந்து மேன்மை பெறுங்கள்.
பாடல் #1560
பாடல் #1560: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்
பவனவன் வைத்த பழவழி நாடி
யிவனவ னென்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள னாங்கட னாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சிவனவன வைதததொர தெயவ நெறியிற
பவனவன வைதத பழவழி நாடி
யிவனவ னெனப தறியவல லாரகட
கவனவ னஙகுள னாஙகட னாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில்
பவன் அவன் வைத்த பழ வழி நாடி
இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு
அவன் அவன் அங்கு உளனாம் கடன் ஆமே.
பதப்பொருள்:
சிவன் (சிவப் பரம்பொருளாக இருக்கின்ற) அவன் (இறைவன்) வைத்தது (வைத்து அருளிய) ஓர் (ஒரு) தெய்வ (தெய்வத்தை அடைவதற்கான) நெறியில் (நெறி முறையை கடைபிடித்து)
பவன் (அந்த சிவப் பரம்பொருளாகிய) அவன் (அவனே) வைத்த (வைத்து அருளிய) பழ (பழமையான) வழி (வழியை) நாடி (தமக்குள்ளே தேடி அடைந்து)
இவன் (அதன் மூலம் தமது ஆன்மாவாக இருப்பதும்) அவன் (அவனே) என்பது (என்பதை) அறிய (அறிந்து கொள்ள) வல்லார்கட்கு (முடிந்தவர்களுக்கு)
அவன் (தாம் பார்க்கின்ற அனைத்திலும்) அவன் (அவனை காண்பவர்களுக்கு) அங்கு (அவர்கள் பார்க்கின்ற அனைத்திலும்) உளனாம் (அதனதன் தன்மையிலேயே வந்து இருக்க வேண்டியது) கடன் (அந்த இறைவனின் கடமை) ஆமே (ஆகும்).
விளக்கம்:
சிவப் பரம்பொருளாக இருக்கின்ற இறைவன் வைத்து அருளிய தெய்வத்தை அடைவதற்கான ஒரு நெறி முறையை கடைபிடித்து அந்த சிவப் பரம்பொருளே வைத்து அருளிய பழமையான வழியை தமக்குள்ளே தேடி அடைந்து அதன் மூலம் தமது ஆன்மாவாக இருப்பதும் அவனே என்பதை அறிந்து கொள்ள முடிந்தவர்களுக்கு, தாம் பார்க்கின்ற அனைத்திலும் அவனை காண்பவர்களுக்கு அவர்கள் பார்க்கின்ற அனைத்திலும் அதனதன் தன்மையிலேயே வந்து இருக்க வேண்டியது அந்த இறைவனின் கடமை ஆகும்.
பாடல் #1561
பாடல் #1561: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
ஆமா றுரைக்கு மறுசமை யாதிக்குப்
போமாறு தானில்லைப் புண்ணிய மல்லதங்
காமார் வழியாக்கு மவ்வே றுயிர்கட்கும்
போமா றவ்வாதார பூங்கொடி யாளே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆமா றுரைககு மறுசமை யாதிககுப
பொமாறு தானிலலைப புணணிய மலலதங
காமார வழியாககு மவவெ றுயிரகடகும
பொமா றவவாதார பூஙகொடி யாளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆம் ஆறு உரைக்கும் அறு சமைய ஆதிக்கு
போம் ஆறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு
ஆம் ஆர் வழி ஆக்கும் அவ் வேறு உயிர்கட்கும்
போம் ஆறு அவ் ஆதார பூங் கொடியாளே.
பதப்பொருள்:
ஆம் (அவரவர்களின் நிலைக்கு ஏற்றபடியே) ஆறு (இறைவனை அடைவதற்கான வழியை) உரைக்கும் (எடுத்துக் கூறுகின்ற) அறு (ஆறு விதமான) சமைய (சமயங்களுக்கும்) ஆதிக்கு (ஆதிப் பரம்பொருளாகிய இறைவனிடம்)
போம் (போய் சேருகின்ற) ஆறு (வழி) தான் (தானாக) இல்லை (இருப்பது இல்லை) புண்ணியம் (புண்ணியம்) அல்லது (இல்லாத எதனாலும்) அங்கு (அவ்வாறு இறைவனிடம் போய் சேருவதற்கு வழியாக இருக்காது)
ஆம் (ஆகவே புண்ணியத்தினால்) ஆர் (இறைவனை அடைகின்ற) வழி (வழியை) ஆக்கும் (உருவாக்கிக் கொடுத்து) அவ் (அதனால்) வேறு (பல வகையான) உயிர்கட்கும் (உயிர்களுக்கும்)
போம் (இறைவனிடம் போய் சேருகின்ற) ஆறு (வழியாக) அவ் (அவர்களுக்குள் இருக்கின்ற) ஆதார (ஆறு ஆதார சக்கரங்களின்) பூங் (பூவிதழ்களை) கொடியாளே (இணைக்கின்ற கொடியாக இருந்து ஏழாவது சக்கரமாக இருக்கின்ற இறைவனிடம் இணைப்பது இறைவியே ஆகும்).
விளக்கம்:
அவரவர்களின் நிலைக்கு ஏற்றபடியே இறைவனை அடைவதற்கான வழியை எடுத்துக் கூறுகின்ற ஆறு விதமான சமயங்களுக்கும் ஆதிப் பரம்பொருளாகிய இறைவனிடம் போய் சேருகின்ற வழி புண்ணியத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகவே புண்ணியத்தினால் இறைவனை அடைகின்ற வழியை உருவாக்கிக் கொடுத்து அதனால் பல வகையான உயிர்களுக்கும் இறைவனிடம் போய் சேருகின்ற வழியாக அவர்களுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களின் பூவிதழ்களை இணைக்கின்ற கொடியாக இருந்து ஏழாவது சக்கரமாக இருக்கின்ற இறைவனிடம் இணைப்பது இறைவியே ஆகும்.
பாடல் #1562
பாடல் #1562: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
அரனெறி யாவ தறிந்தேனு நானுஞ்
சிவநெறி தேடித் திரிந்த வன்னாளு
முரைநெறி யுள்ளக் கடல் கடந்தேறுந்
தரநெறி யாய தனிச்சுடர் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அரனெறி யாவ தறிநதெனு நானுஞ
சிவநெறி தெடித திரிநத வனனாளு
முரைநெறி யுளளக கடல கடநதெறுந
தரநெறி யாய தனிசசுடர தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அரன் நெறி ஆவது அறிந்தேனும் நானும்
சிவ நெறி தேடி திரிந்த அந் நாளும்
உரை நெறி உள்ள கடல் கடந்து ஏறும்
தர நெறி ஆய தனி சுடர் தானே.
பதப்பொருள்:
அரன் (அனைத்தையும் காத்து நிற்கின்ற இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறைகளாக) ஆவது (இருப்பவற்றை) அறிந்தேனும் (அறிந்து கொண்டேன்) நானும் (யானும்)
சிவ (அந்த இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறைகளை) தேடி (தேடி) திரிந்த (யான் திரிந்து கொண்டு இருந்த) அந் (முன்னொரு) நாளும் (நாட்களில்)
உரை (எமக்குள் பல விதமான எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு இருக்கின்ற) நெறி (வழி முறைகளில்) உள்ள (எமது உள்ளமாகிய) கடல் (பெரும் கடலை) கடந்து (கடந்து) ஏறும் (மேல் நிலைக்கு செல்லுவதற்கு)
தர (இறைவன் எமக்குத் தந்து அருளிய) நெறி (வழி முறைகள்) ஆய (ஆக இருந்து வழி காட்டுவது) தனி (தமக்கு சரிசமமாக எதுவும் இல்லாத) சுடர் (பேரொளிச் சுடராக) தானே (எமக்குள் இருக்கின்ற இறைவனே என்பதை அறிந்து கொண்டேன்).
விளக்கம்:
அனைத்தையும் காத்து நிற்கின்ற இறைவனை அடைவதற்கான வழி முறைகளாக இருப்பவற்றை அறிந்து கொண்டேன் யானும். அந்த இறைவனை அடைவதற்கான வழி முறைகளை தேடி யான் திரிந்து கொண்டிருந்த முன்னொரு நாட்களில் எமக்குள் பல விதமான எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு இருக்கின்ற வழி முறைகளில் எமது உள்ளமாகிய பெரும் கடலை கடந்து மேல் நிலைக்கு செல்லுவதற்கு இறைவன் எமக்குத் தந்து அருளிய வழி முறைகளாக இருந்து வழி காட்டுவது தமக்கு சரிசமமாக எதுவும் இல்லாத பேரொளிச் சுடராக எமக்குள் இருக்கின்ற இறைவனே என்பதை அறிந்து கொண்டேன்.
பாடல் #1563
பாடல் #1563: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
தேர்ந்தவர் தன்னை யடைந்த சிவநெறி
பேர்ந்தவ ருன்னிப் பெயர்ந்த பெருவழி
யார்ந்தவ ரண்டத்து புக்க வருநெறி
போந்து பிணைந்து புணர்நெறி யாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தெரநதவர தனனை யடைநத சிவநெறி
பெரநதவ ருனனிப பெயரநத பெருவழி
யாரநதவ ரணடதது புகக வருநெறி
பொநது பிணைநது புணரநெறி யாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தேர்ந்தவர் தன்னை அடைந்த சிவ நெறி
பேர்ந்தவர் உன்னி பெயர்ந்த பெரு வழி
ஆர்ந்தவர் அண்டத்து புக்க அருள் நெறி
போந்து பிணைந்து புணர் நெறி ஆமே.
பதப்பொருள்:
தேர்ந்தவர் (இறைவனை தமக்குள் உணர்ந்து தெளிவு) தன்னை (பெற்றவர்கள்) அடைந்த (அடைந்த) சிவ (இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறைகளை)
பேர்ந்தவர் (அவர்கள் அடைந்த படியே வெளிப்புறமாக தேடுவதை விட்டு விட்டு) உன்னி (மனதை ஒருநிலைப் படுத்தி தமக்குள் இறைவனையே நினைத்துக் கொண்டு) பெயர்ந்த (ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டு விட்டு அடைகின்ற) பெரு (மிகப் பெரும்) வழி (வழி முறைகளை)
ஆர்ந்தவர் (நன்றாக ஆராய்ந்து அறிந்து கொண்டவர்கள்) அண்டத்து (அண்ட சராசரங்களில் உள்ள அனைத்திலும்) புக்க (புகுந்து இருக்கின்ற) அருள் (இறையருளை) நெறி (அடைவதற்கான வழி முறைகள் தமக்குள்ளே இருப்பதை உணர்ந்து)
போந்து (அதற்குள் புகுந்து) பிணைந்து (அதனோடு பின்னிப் பிணைந்து) புணர் (ஒன்றாக கலந்து இறைவனை அடைகின்ற) நெறி (வழி முறை) ஆமே (இதுவே ஆகும்).
விளக்கம்:
இறைவனை தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள் அடைந்த இறைவனை அடைவதற்கான வழி முறைகளை அவர்கள் அடைந்த படியே வெளிப்புறமாக தேடுவதை விட்டு விட்டு, மனதை ஒருநிலைப் படுத்தி தமக்குள் இறைவனையே நினைத்துக் கொண்டு, ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டு விட்டு, அடைகின்ற மிகப் பெரும் வழி முறைகளை நன்றாக ஆராய்ந்து அறிந்து கொண்டவர்கள், அண்ட சராசரங்களில் உள்ள அனைத்திலும் புகுந்து இருக்கின்ற இறையருளை அடைவதற்கான வழி முறைகள் தமக்குள்ளே இருப்பதை உணர்ந்து, அதற்குள் புகுந்து அதனோடு பின்னிப் பிணைந்து ஒன்றாக கலந்து இறைவனை அடைகின்ற வழி முறை இதுவே ஆகும்.
பாடல் #1564
பாடல் #1564: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
ஈரு மனத்தை யிரண்டற வீசுமி
னூருஞ் சகாரத்தை யோதுமி னோதியை
வாரு மரனெறி மன்னிய முன்னியத்
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஈறு மனததை யிரணடற வீசுமி
னூருஞ சகாரததை யொதுமி னொதியை
வாரு மரனெறி மனனிய முனனியத
தூருஞ சுடரொளி தொனறலு மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஈரு மனத்தை இரண்டு அற வீசுமின்
ஊரும் சகாரத்தை ஓதுமின் ஓதியை
வாரும் அரன் நெறி மன்னிய முன்னியத்து
ஊரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே.
பதப்பொருள்:
ஈரு (பொருளும் போகமும் வேண்டும் அருளும் ஞானமும் வேண்டும் என்று இரண்டு விதமாக அலைகின்ற) மனத்தை (மனதை) இரண்டு (அந்த இரண்டு ஆசைகளும்) அற (இல்லாமல் போகும் படி) வீசுமின் (வெளியே எடுத்து வீசிவிடுங்கள்)
ஊரும் (அப்போது கிடைக்கின்ற பேரமைதியான நிலையில் சாதகருக்குள் ஊருகின்ற) சகாரத்தை (சக்தியின் ஒலி வடிவமாகிய ஒரு மந்திர எழுத்தை) ஓதுமின் (அசபையாக ஓதிக் கொண்டே இருங்கள்) ஓதியை (அவ்வாறு ஓதிக் கொண்டு இருப்பவரை)
வாரும் (அணைத்துக்) அரன் (காப்பாற்றுகின்ற) நெறி (வழி முறையில்) மன்னிய (மனதை நிலை பெற வைத்திருந்தால்) முன்னியத்து (தமக்குள்ளே)
ஊரும் (உருவாகும்) சுடர் (சுடரானது) ஒளி (பேரொளியாக) தோன்றலும் (தோன்றுவதை) ஆமே (நீங்கள் உணரலாம்).
விளக்கம்:
பொருளும் போகமும் வேண்டும் அருளும் ஞானமும் வேண்டும் என்று இரண்டு விதமாக அலைகின்ற மனதை அந்த இரண்டு ஆசைகளும் இல்லாமல் போகும் படி வெளியே எடுத்து வீசிவிடுங்கள். அப்போது கிடைக்கின்ற பேரமைதியான நிலையில் சாதகருக்குள் சக்தியின் ஒலி வடிவமாகிய ஒரு மந்திர எழுத்து தோன்றும். அப்படி தானாகவே தோன்றுகின்ற மந்திர எழுத்தை அசபையாக ஓதிக் கொண்டே இருங்கள். அவ்வாறு ஓதிக் கொண்டு இருப்பவரை அணைத்துக் காப்பாற்றுகின்ற வழி முறையில் மனதை நிலை பெற வைத்திருந்தால், தமக்குள்ளே உருவாகும் சுடரானது பேரொளியாக தோன்றுவதை நீங்கள் உணரலாம்.
பாடல் #1550
பாடல் #1550: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)
இமையங்க ளாய்நின்ற தேவர்க ளாறு
சமையங்கள் பெற்றனர் சாத்திர மோத
வமையறிந் தோமென்ப ராதிப் பிரானைக்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இமையஙக ளாயநினற தேவரக ளாறு
சமையஙகள பெறறனர சாததிர மொத
வமையறிந தொமெனப ராதிப பிரானைக
கமையறிந தாருட கலநதுநின றானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இமையங்கள் ஆய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓத
அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானை
கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே.
பதப்பொருள்:
இமையங்கள் (இமயத்தை) ஆய் (போல உயர்ந்த நிலையில்) நின்ற (நிற்கின்ற) தேவர்கள் (தேவர்கள்) ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான)
சமையங்கள் (வழி முறைகளை) பெற்றனர் (இறைவனிடமிருந்து பெற்றனர்) சாத்திரம் (அவர்கள் பெற்ற வழி முறைகளின் படி சாஸ்திரங்களை) ஓத (ஓதுவதின் மூலமே)
அமை (இறைவனை அடைவதற்கான வழியை) அறிந்தோம் (அறிந்து கொண்டோம்) என்பர் (என்று அவர்கள் கூறுகின்றார்கள்) ஆதி (அனைத்திற்கும் ஆதியாகவும்) பிரானை (தலைவனாகவும் இருக்கின்ற இறைவனை)
கமை (எந்தவிதமான எண்ணங்களும் இல்லாத பேரமைதியில் இருந்து) அறிந்தார் (அறிந்து கொண்டவர்களின்) உள் (உள்ளுக்குள் ஒன்றாக) கலந்து (கலந்து) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).
விளக்கம்:
இமயத்தை போல உயர்ந்த நிலையில் நிற்கின்ற தேவர்கள் இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளை இறைவனிடமிருந்து பெற்றனர். அவர்கள் பெற்ற வழி முறைகளின் படி சாஸ்திரங்களை ஓதுவதின் மூலமே இறைவனை அடைவதற்கான வழியை அறிந்து கொண்டோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அனைத்திற்கும் ஆதியாகவும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனை எந்தவிதமான எண்ணங்களும் இல்லாத பேரமைதியில் இருந்து அறிந்து கொண்டவர்களின் உள்ளுக்குள் ஒன்றாக கலந்து நிற்கின்றான் இறைவன்.
கருத்து:
ஆறு சமயங்கள் சொல்லுகின்ற வழி முறையில் சாஸ்திரங்களை ஓதுவதன் மூலம் மட்டுமே இறைவனை அடைவதற்கான வழியை அறிந்து கொண்டோம் என்று மேன்மையான நிலையில் இருக்கின்ற தேவர்கள் சொல்லுவார்கள். ஆனால், எந்த சாஸ்திரத்தையும் ஓதாமல் இருந்தாலும் மனதில் அமைதியுடன் எண்ணங்கள் அற்ற நிலையில் ஒருவர் இருந்தாலே அவர்களால் தமக்குள்ளேயே கலந்து நிற்கின்ற இறைவனை அறிந்து கொள்ள முடியும்.
இறைவனை அடையும் முறையான ஆறு வித வழிகள்:
- தியானம் – மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்
- செபம் – அக வழிபாடு மூலம் செபித்தல்
- பூஜை – புற வழிபாடு மூலம் செபித்தல்
- சக்கரம் – சக்கரங்கள் அமைத்து செபித்தல்
- ஞானம் – மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்
- புத்தி – மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்
குறிப்பு: இந்த பாடலின் தலைப்பு நிராசாரம் என்றும் நிராகாரம் என்றும் பல புத்தகங்களில் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் ஓலை சுவடியில் நிராதாரம் என்று கொடுக்கப் பட்டு இருக்கிறது மேலும் இந்த தலைப்பில் உள்ள பாடல் #1556 இல் மூன்றாவது அடியில் வரும் “சார் உறார்” எனும் பதத்தை ஒத்து இருப்பதாலும் இதனை ஆதாரமாகக் கொண்டு நிராதாரம் என்ற தலைப்பு எடுத்துக் கொள்ளப் பட்டது.