பாடல் #1263

பாடல் #1263: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

அறிந்திடும் சக்கர மையைந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப்பக லோனிலை யாமே.

விளக்கம்:

பாடல் #1262 இல் உள்ளபடி சாதகர் அறிந்து உணர்ந்து கொண்ட ஏரொளிச் சக்கரத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களின் தன்மைகளும் ஐந்து மடங்கு பெருகி வெளிச்சமாகின்றது. இந்த ஏரொளிச் சக்கரத்தில் இருக்கின்ற அனைத்து தன்மைகளுக்கும் முதலாக சத்தமே இருக்கின்றது. ஏரொளிச் சக்கரத்திலிருக்கும் ஐந்து தன்மைகளும் வெளிச்சமும் நாதமும் ஒன்றாகச் சேர்ந்து மாறிய ஓர் எழுத்தே இறை நிலையில் தலைவர்களாக இருக்கின்ற தெய்வங்களாகவும் இருக்கின்றது. இதை முழுவதும் அறிந்து உணர்ந்து கொண்ட சாதகர் பேரொளியாகிய சிவசூரியனின் நிலையை அடைந்து விடுவார்கள்.

பாடல் #1264

பாடல் #1264: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

அம்முத லாறுமவ் வாதி யெழுத்தாகும்
அம்முத லாறுமவ் வம்மை யெழுத்தாகும்
இம்முதல் நாலு மிருந்திடு வன்னியே
இம்முத லாகு மெழுத்தவை யெல்லாம்.

விளக்கம்:

பாடல் #1265 இல் உள்ளபடி சிவசூரியனின் நிலையை அடையக் காரணமான ஒரு எழுத்தே ஆதியான பரம்பொருளைக் குறிக்கின்ற எழுத்தாகும். சாதகருக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களிலும் இருக்கின்ற எழுத்துக்களுக்கு இந்த ஒரு எழுத்தே முதன்மையானதாக இருக்கின்றது. சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களிலும் இருக்கின்ற எழுத்துக்கள் இறைவியின் சக்தி மயத்தைக் குறிக்கின்ற எழுத்துக்களாகும். இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களில் முதலில் இருக்கின்ற நான்கு சக்கரங்களுக்கு (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம்) நடுவில் (மணிப்பூரகத்திற்கும் சுவாதிஷ்டானத்திற்கும்) இருக்கின்ற தொப்புள் கொடியில் அக்னி வீற்றிருக்கின்றது. இந்த அக்னியிலிருந்தே ஏரொளிச் சக்கரத்தில் இருக்கும் நூற்று நாற்பத்து நான்கு எழுத்துக்கள் எல்லாம் வெளிப்படுகின்றன.

பாடல் #1265

பாடல் #1265: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை யாறது வந்நடு வன்னி
எழுத்தவை யந்நடு வச்சுட ராகி
எழுத்தவை தான்முத லந்தமு மாமே.

விளக்கம்:

பாடல் #1264 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படுகின்ற நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களும் சாதகருக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களில் அடங்கி இருக்கின்ற ஆறு எழுத்துக்களாக இருக்கின்றன. அந்த ஆறு எழுத்துக்களுக்கும் நடுவில் அக்னியாகவும் அதற்கு நடுவில் இருக்கின்ற சுடராகவும் இருக்கின்றன. இவை அனைத்தும் சாதகருக்குள் முதலாகவும் பாடல் #1259 இல் உள்ளபடி அவரைத் தாண்டிய அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களுக்கும் விரிந்து இருக்கும் ஏரொளிச் சக்கரத்தின் அந்தமாகவும் இருக்கின்றன.

பாடல் #1266

பாடல் #1266: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

அந்தமு மீறு முதலா னவையற
அந்தமு மப்பதி னெட்டுட னாதலால்
அந்தமு மப்பதின் மூன்றி லமர்ந்தபின்
அந்தமு மிந்துகை யாருட மானதே.

விளக்கம்:

பாடல் #1265 இல் உள்ளபடி சாதகருக்குள் முதலாகவும் அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களுக்கும் சென்று சேருகின்ற முடிவாகவும் இருக்கின்ற ஏரொளிச் சக்கரத்தில் சாதகரின் தலை உச்சியிலுள்ள எல்லையிலிருந்து அண்ட சராசரங்களின் முடிவாக இருக்கின்ற இடம் வரை நீங்கலாக மீதி இருக்கின்ற இடத்தில் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியானது விசுத்தி சக்கரம் வரை உள்ள 16 விரற்கடை தூரத்தையும் அதிலிருந்து ஆஞ்சை சக்கரம் வரை உள்ள 2 விரற்கடை தூரத்தையும் அதிலிருந்து துவாதசாந்த வெளி வரை உள்ள 12 விரற்கடை தூரத்தையும் ஏறிக் கடந்து சென்று பாடல் #1113 இல் உள்ளபடி அங்கிருக்கும் துவாதசாந்த வெளியிலிருந்து 1 விரற்கடை தூரத்திலுள்ள சந்திர மண்டலத்தில் வீற்றிருந்தால் முக்காலத்தையும் தமக்குள்ளே அறிகின்ற நிலையை சாதகர் அடைந்து விடுவார்.

பாடல் #1267

பாடல் #1267: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

ஆவின மானவை முந்நூற் றறுபதும்
ஆவின மப்பதி னைந்தின மாயுறும்
ஆவின மப்பதி னெட்டுட னாயுறும்
ஆவின மக்கதி ரோன்வர வந்தே.

விளக்கம்:

பாடல் #1266 இல் உள்ளபடி முக்காலத்தையும் தமக்குள்ளேயே அறிகின்ற நிலையை அடைந்த சாதகர்கள் அனைவரின் இனமாகவே (குழுக்கள்) இருப்பவை சூரியனை முதலாகக் கொண்டு வருகின்ற முந்நூற்று அறுபது நாட்கள் கொண்ட தமிழ் வருடங்களாகவும் அதற்குள் சந்திரனை முதலாகக் கொண்டு வருகின்ற வளர் பிறை மற்றும் தேய் பிறை ஆகிய பதினைந்து நாட்களாகவும் அதற்குள் இருக்கின்ற பன்னிரண்டு மாதங்களாகவும் ஆறு விதமான பருவங்களாகவும் சாதகருக்குள்ளிருந்து வெளிப்படுகின்ற ஏரொளிச் சக்கரமே ஒன்றோடு ஒன்று இணைந்து வெளிப்படுகின்றது.

கருத்து: சாதகருக்குள்ளிருந்து வெளிப்படுகின்ற ஏரொளிச் சக்கரமே உலகத்தில் இருக்கின்ற காலங்களோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றது.

தமிழ் பருவங்கள்:

  1. கார்காலம் – இது தமிழ் மாதமான ஆவணி புரட்டாசியை உள்ளடக்கியது.
  2. குளிர்காலம் – இது தமிழ் மாதமான ஐப்பசி கார்த்திகையை உள்ளடக்கியது.
  3. முன்பனிக்காலம் – தமிழ் மாதமான மார்கழி தையை உள்ளடக்கியது.
  4. பின்பனிக்காலம் – இது தமிழ் மாதமான மாசி பங்குனியை உள்ளடக்கியது.
  5. இளவேனில்காலம் – இது தமிழ் மாதமான சித்திரை வைகாசியை உள்ளடக்கியது.
  6. முதுவேனில்காலம் – இது தமிழ் மாதமான ஆனி ஆடியை உள்ளடக்கியது.

பாடல் #1268

பாடல் #1268: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

வந்திடு மாகாச மாறது நாழிகை
வந்திடு மக்கர முப்பதி ராசியும்
வந்திடு நாளது முந்நூற் றறுபதும்
வந்திடு மாண்டு வகுத்துரை யவ்வியே.

விளக்கம்:

பாடல் #1267 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்திடும் ஏரொளிச் சக்கரமே ஆகாயத்தில் இருக்கும் சூரிய சந்திர நட்சத்திர அமைப்புகளின் வழியாக வருகின்ற பகலில் இருக்கின்ற முப்பது நாழிகைகளும் இரவில் இருக்கின்ற முப்பது நாழிகைகளும் சேர்ந்து மொத்தம் அறுபது நாழிகைகளாக இருக்கின்றது. இந்த அறுபது நாழிகைகள் சேர்ந்து ஒரு நாளாக இருக்கின்றது. முப்பது நாள்கள் சேர்ந்து இராசி என்று சொல்லப்படுகின்ற பன்னிரண்டு மாதங்களாக இருக்கின்றது. மொத்தம் முந்நூற்று அறுபது நாள்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாக இருக்கின்றது. இப்படி உலகத்தவர்களால் சொல்லப்படுகின்ற காலத்தின் விதங்களாக ஏரொளிச் சக்கரமே இருக்கின்றது.

குறிப்பு:

1 நாழிகை = 24 நிமிடம்
60 நாழிகை = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதம் (இராசி) = 1 வருடம்
360 நாள் = 1 வருடம்

பாடல் #1269

பாடல் #1269: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

அவ்வின மூன்றுமவ் வாடது வாய்வரும்
எவ்வின மூன்றுங் கிளர்தரு வேறதாஞ்
சவ்வின மூன்றுந் தழைத்திடு தண்டதாம்
இவ்வின மூன்று மிராசிக ளெல்லாம்.

விளக்கம்:

பாடல் #1268 இல் உள்ளபடி உலகத்தவர்களால் சொல்லப்படுகின்ற காலத்தின் பல விதங்களாக இருக்கின்ற ஏரொளிச் சக்கரம் அடிப்படையில் இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் எனும் மூன்று விதங்களாகவே இருக்கின்றது. இந்த மூன்று விதமான காலங்களும் ஏரொளிச் சக்கரம் மூலாதாரத்திலிருந்து சுழுமுனை நாடி வழியே பிரகாசத்தோடு மேலெழுந்து வரும் போது அதன் உடனே அசைந்தாடிக் கொண்டே வருகின்றது. இப்படி மேலெழுந்து வந்து செழிப்பாக வெளிப்படும் மூன்று விதமான காலங்களே உலகத்தவர்களால் நாழிகை நாள் மாதம் வருடம் இராசி என்று குறிக்கப்படும் எல்லாமாகவும் இருக்கின்றது.

கருத்து:

ஏரொளிச் சக்கரத்திலிருந்து செழுமையுடன் வெளிப்படும் காலத்தின் சக்தியூட்டம் பெற்ற சாதகர்கள் முக்காலத்தையும் உணரும் சக்தியைப் பெற்று அவற்றை கட்டுப்படுத்தவும் அக்காலத்திற்கு செல்லும் வல்லமையையும் பெறுவார்கள்.

பாடல் #1270

பாடல் #1270: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

இராசியுட் சக்கர மெங்கும் நிறைந்தபின்
இராசியுட் சக்கர மென்றறி விந்துவாம்
இராசியுட் சக்கரம் நாதமு மொத்தபின்
இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.

விளக்கம்:

பாடல் #1269 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வெளிப்படும் சக்கரமே காலங்கள் அனைத்துமாகவும் இருக்கின்றது. இப்படி காலமாகவே இருக்கின்ற ஏரொளிச் சக்கரம் அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களிலும் நிறைந்த பிறகு சக்கரம் என்று அறியப்படுவது வெளிச்சமாகும். இந்த வெளிச்சத்தோடு சத்தமும் ஒன்றாகச் சேர்ந்த பிறகு ஏரொளிச் சக்கரமாகவே காலங்கள் இருக்கின்ற வழியாக வெளிச்சமும் சத்தமும் இருக்கின்றது.

குறிப்பு: காலப் பயணத்தை செய்யக்கூடிய சாதகர்கள் வெளிச்சமாகவும் சத்தமாகவுமே செல்கிறார்கள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1271

பாடல் #1271: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

நின்றிடும் விந்துவென் றுள்ள வெழுத்தெல்லாம்
நின்றிடும் நாதமு மோங்கு மெழுத்துடன்
நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரின்
நின்றிடு மப்புறந் தாரகை யானதே.

விளக்கம்:

பாடல் #1270 இல் உள்ளபடி காலமாகவே நிற்கின்ற ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பிரகாசமான வெளிச்சம் என்று அழைக்கப்படும் ஒளி வடிவம் பெற்ற எழுத்துக்கள் எல்லாமும் சத்தம் என்று அழைக்கப்படும் ஒலி வடிவத்தோடு ஒன்றாகச் சேர்ந்து பரவெளியில் சென்று அடையும் போது அங்கு வீற்றிருக்கும் இறை சக்தியால் சக்தியூட்டம் பெற்ற பிறகு காலமாக நிற்கின்ற ஏரொளிச் சக்கரமே அண்டத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்களாகவும் மாறி விடுகின்றது.

பாடல் #1272

பாடல் #1272: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

தாரகை யாகச் சமைந்தது சக்கரந்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திர னற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.

விளக்கம்:

பாடல் #1271 இல் உள்ளபடி நட்சத்திரமாகவே மாறிவிட்ட ஏரொளிச் சக்கரமானது மேலும் மேலும் விரிவடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டே இருக்கும் போது ஒரு நிலையில் செழிப்பு பெற்று மிகப் பெரும் பேரொளியாக மாறுகின்றது. அதன் பிறகு பேரொளியாக இருக்கின்ற நட்சத்திரம் சந்திரனாகவும் நன்மையைத் தரும் சூரியனாகவும் மாறிக் கொண்டே வந்து சூரியன் சந்திரன் கிரகங்கள் என்று உலகத்தவர்களால் அழைக்கப்படுகின்ற அனைத்து நட்சத்திரங்களாவும் மாறி இருப்பதைக் காணலாம்.

குறிப்பு: ஆகாயத்தில் இருக்கின்ற சூரியன் சந்திரன் கிரகங்கள் என்று தனித்தனிப் பெயர்களால் அழைக்கப்படுகின்ற அனைத்துமே அறிவியலின் படி நட்சத்திரங்கள் என்றே சொல்லப்படுகின்றது.