திருமந்திரம் முதலாம் தந்திரம் அனைத்து பாடல்களும் விளக்கங்களுடன் PDF மின் புத்தகமாக கீழே இருக்கும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளும்படி கொடுத்துள்ளோம். அதற்கு கீழே நேரடியாகவே புத்தகத்தை பார்த்துப் படிக்கும்படி கொடுத்துள்ளோம்.
திருமந்திரம் இரண்டாம் தந்திரம் அனைத்து பாடல்களும் விளக்கங்களுடன் PDF மின் புத்தகமாக கீழே இருக்கும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளும்படி கொடுத்துள்ளோம். அதற்கு கீழே நேரடியாகவே புத்தகத்தை பார்த்துப் படிக்கும்படி கொடுத்துள்ளோம்.
பாடல் # 799 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
கட்டக் கழன்று கீழ்நான்று விழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணை கோலி விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே.
விளக்கம்:
மூச்சுக் காற்று கீழே இறங்காமல் அண்ணாக்கில் அதைக் கட்டிவிட வேண்டும். அபான வாயு குதம் வழியாகவோ அல்லது குறி வழியாகவோ வெளியேறாமல் குதத்தைச் சுருக்கி நிறுத்த வேண்டும். இரு கண் பார்வைகளையும் ஒன்றாக்கிவிட வேண்டும். உள்ளத்தைச் சுழுமுனை வழியே பாயும் மூச்சில் கொண்டு நிறுத்த வேண்டும். உடலைத் தாண்டிய இந்த நிலையை ஒருவன் அடைந்து விட்டால் அவன் காலத்தைக் கடந்து விடலாம். அவனுக்கு ஒரு மரணம் இல்லை.
வண்ணான் (துணி துவைப்பவர்) துணியை கல்லில் அடித்து துவைக்கும் போது ஆடையில் இருக்கும் அழுக்கு போவது போல உயிர் முன் பக்கம் உள்ள தன் மூளையை தியானம் மூலம் வரும் சிவயோக ஒளியினால் மோத வேண்டும். இரண்டு கண்களின் பார்வைகளையும் மாறி மாறிப் பார்ப்பதால் சிரசின் உள்ளே தெரியும் இரண்டு பக்கத்துக்கும் இடையே உள்ள சஹஸ்ரதளம் என்னும் குளத்தை தியானத்தின் மூலம் வந்த ஒளியைக் கொண்டு நிரப்ப வேண்டும். அதற்குப் பிறகு நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்த்தால் அந்த உயிர் தன் குற்றங்கள் அனைத்தும் நீங்கித் தூய்மை அடைந்து விடுவான்.
பாடல் # 801 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட் கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.
விளக்கம் :
இடகலை பிங்கலை நாடிகள் வழியே மூச்சுக் காற்று இயங்குவதை மாற்றிச் சுழுமுனை வழியே மூச்சுக்காற்றை செலுத்தும் கலையை ஒருவன் அறிந்து கொண்டு விட்டால் அவருக்குத் சோர்வு ஏற்படாது. உறங்கும் காலத்தில் உறக்கத்தை விட்டு பயிற்சி செய்து வந்தால் ஒருவனுக்கு இறப்பு இல்லாமல் நீண்ட காலம் வாழலாம்.
பாடல் # 802 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும் வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து நீந்துரை செய்யில் நிலாமண் டலமாய்ப் பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.
விளக்கம் :
யோக நூல்களை ஆராய்ந்து அதனை முறையோடு செய்தால் உடம்பிலிருந்து அமுதம் சுரக்கும். அந்த அமுதம நாடிகளில் பாய்கின்றபோது ஓர் ஒலியை எழுப்பும். அந்த ஒலி சந்திர மண்டலமாக விளங்கி நரை, திரை, பிணி, மூப்பு இல்லாமல் நம்மைப் பாதுகாக்கும்.
பாடல் # 803 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
நாவின் நுனியை நடுவே விசிறிடிற் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும் இல்லை சதகோடி ஊனே.
விளக்கம் :
நான்கு வகை யோகங்களுள் ஒன்றான அடயோக முறைப்படி நல்லாசனத்தில் அமர்ந்து நாக்கின் நுனியை அண்ணாக்கில் உரசினால் பிரணவ மந்திரம் கேட்கும். அந்த சாதகம் செய்யும் உயிருடன் சிவனும் கலந்து சேர்ந்து அதன் உடலையே தனக்கு விருப்பமான உறைவிடமாக கொண்டு தங்குவார். அங்கே மும்மூர்த்திகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் தோன்றுவார்கள். அந்த உயிருக்கு நூறு கோடி ஆண்டுகளுக்கு மரணம் என்பதே இருக்காது.
பாடல் # 804 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல் வானூறல் பாயும் வகையறி வாரில்லை வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத் தேனூறல் உண்டு தெளியலு மாமே.
விளக்கம் :
ஊனால் ஆன உடம்பின் நெற்றி நடுவில் ஓர் ஓளி உள்ளது, அதனை தலை உச்சிக்கு மேல் உள்ள வான மண்டலத்தோடு சேர்க்கும் வகைகளை அறிபவர்கள் யாரும் இல்லை. வான மண்டலத்தோடு சேர்க்கும் வகைகளை தெரிந்து கொண்டு அவ்ஒளியை வான மண்டலத்தோடு சேர்ப்பவர்கள் அங்கு ஊறும் தேன் போன்ற அமுதத்தை உண்டு தெளிவு பெற்று அதன் சிறப்பை உணர்வார்கள்.
அண்ணாக்கின் அருகில் உள்ள பகுதியில் இடகலை பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியே இயங்கும் மூச்சுக்காற்றை பயிற்சியின் மூலம் பொருத்தினால் யமன் பயம் இல்லை. உடலுக்கு அழிவு இருக்காது. மேலுலகத்து வாயிற் கதவு திறக்கும். நரை திரைகளும் மாறிவிடும். அதன்பின் யோகி உலகம் அறிய இளமைத் தோற்றத்தையும் உடையவனாவான். இது குருவான இறைவன் மேல் ஆணையாகச் சொல்லுகின்ற உண்மை.
குருநாதர் காட்டிய வழியில் நாக்கின் நுனியை அண்ணாக்கில் ஏறும்படிச் செய்து அங்கே நடுநாடியின் உச்சியில் கூடி இருக்க வேண்டும். அதனைச் செய்கின்ற யோகி உலகத்தார் யாவரையும் ஆட்கொள்கின்ற திருவருட் செல்வம் உடையவன் ஆவான். அந்த யோகத்தை மேற்கொள்ளாது உலகியலில் அறிவை நினைத்துக்கொண்டிருப்போர் பிறப்பு இறப்புத் துன்புக்கு ஆட்படும் தீவினையராவர் ஆவார்.