அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #33

20-12-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மீக பாதையில் செல்லும் காலத்தில் அன்பு காட்டுவது விடுதல் வேண்டுமோ?

அடிப்படையாக கூறுவது அன்பே சிவம் என்று அனைத்தும் அன்புக்குரியதாம். குடும்பத்தில் அன்பு காட்ட வேண்டாம் என்று யாம் கூறியதில்லை. குடும்பத்தில் காட்டும் அன்பை உலகத்தில் காட்டுவாய் என்றே கூறுகிறோம். அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்பு காட்டுதல் வேண்டும். குறுகிய குடும்பத்தில் காட்டிய அன்பு வெளியில் உள்ள படைப்புக்கு அணைத்திற்கும் காட்டுதல் வேண்டும் என்பதே உண்மையான ஆன்மீக நிலை. இதனை உணராமல் அன்பு காட்டுவது தவறு. அன்பு காட்டாதிருந்தால் ஆன்மீக வளர்ச்சி உண்டாகும் என எண்ணிக் கொண்டால் இது பாதாளத்திற்கே செல்ல வேண்டிய நிலை உண்டாகும். அன்பு அன்பு அன்பு ஏனெனில் நாம் இன்று இங்கு நிலைப்பதே இறைவனின் அன்பின் விளைவாகும் என்பதை மறவாது அவ்அன்பினை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும் அனைத்து ஜீவராணிகளும் உமது அன்பை பெறுதல் வேண்டும் என்பதே ஓர் நோக்கமாகக் கொண்டால் அதுவே ஜெயம் என கூறுகின்றோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #32

கேள்வி: இறைவன் கொடியவனா நம்மை தண்டிக்க?

தண்டிப்பது இறைவன் அல்ல நீங்களே உங்களை தண்டிக்கிறீர்கள். ஏனெனில் இறைவன் நல்வழியில் நமக்குள் இயங்குகின்றான் என உணர்ந்து கொண்டால் நாம் தவறு செய்ய மாட்டோம் அல்லவா! இவ்விதம் உணர்ந்து தவறுகள் செய்திட அதன் விளைவு நம்மை தண்டிக்கின்றது. இறைவன் வெறும் சாட்சியாக நிற்கின்றான் என்பதை நன்கு உணருதல் வேண்டும். தண்டனைகளை தவிர்த்திட எப்பொழுதும் இறைவன் உள்ளிருந்து நம்மை இயக்குகின்றான் இறைவனை சட்சியாக நிற்கும் போது தீயவை யாதும் செய்தல் கூடாது என்று மட்டுமல்லாது தீயவை சிந்தித்தல் கூடாது என்பதை மனமதில் நிறுத்தி செயல்பட அனைத்தும் நல்வழியில் நீங்கும் பின்பு தண்டனை இல்லை.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #31

26-10-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: மகான்களுக்கு ஜெயந்தியும் (பிறந்த நாள்) ஆராதனையும் (முக்தி அடைந்த நாள்) நல்வழியில் கொண்டாடப்படுகிறது இதில் எது முக்கியத்துமானது?

பொதுவாக ஆதியில்லாது அந்தம் இல்லை. அந்தம் இல்லாமல் ஆதியும் இல்லை என்பது விதியாகும். இவ்விதம் பார்க்க இரண்டும் முக்கியமாகும். இருப்பினும் முக்கியத்துவம் காண்பது பிறப்பே ஆகும். பிறப்பு என்பது மானிடப் பிறப்பாகும். மானிடனாகப் பிறந்து பல பிறவி கண்ட பின்பே முக்தி நிலை அடைய முடிகிறது என்பதால் ஜெயந்தியே முக்கியத்துவம் ஆகும். அந்நாளில் மகான்களிடம் பெறும் வாழ்த்துக்களும் ஆசிகளும் பெருமளவில் நலம் தரும். ஆராதனை என்பதும் முக்தி என்பதும் ஓர் சாதனையின் நாளில் பக்தர்களும் மக்களும் முக்தி பெற்றவர்களை மட்டுமல்லாது அவரின் சாதனையையும் போற்றுகின்றனர். இந்நிலையில் முதன்மையில் வந்தது பிறப்பு, பின்பு வந்தது முக்தி என்பதால் முக்கியத்துவம் காண்பது முதலில் வந்த பிறப்பு ஆகும். சாதனையில் முக்தி பெரிதாக தோன்றினாலும் பிறவி இல்லையெல் முக்தி இல்லை.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #30

29-9-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக நிலை அடைய வேண்டும் என பலரும் எண்ணம் கொண்டும் அந்நிலையில் சிறப்புகள் காணுதல் வேண்டும் என ஏக்கம் கொண்டனர். அதற்குரிய பயிற்சிகள் யாரும் செய்வதில்லை. பயிற்சிகளை கையாளவே அனைத்தும் கைகூடும் என்பதை மறந்தீர்களே. அனைவரும் இன்று ஓடுகின்றனர் செல்வத்தை நாடியே செல்வம் வேண்டும் அதை மறுப்பதற்கில்லை. எந்த அளவிற்கு வேண்டும் என்பதே கேள்வியாகின்றது. மானிட நிலையில் வேண்டியது உடை, உணவு, இருப்பதற்கு ஓர் இடம் இதற்கு மேலாக சொத்துக்கள் சேர்ப்பது ஏன் என கேள்வி கேட்போம். குழந்தைகளுக்கு வேண்டும் என்று கூறினால் தவறாகாது குழந்தைகளால் அச்சொத்துகளை காக்க முடியுமா என கேள்வி கேட்போம் இல்லை அவர்கள் ஏமாற்றப்பட்டால்? என கேள்வி கேட்போம் இவையாவும் உங்களது பொறுப்பல்ல படைத்த இறைவனின் பொறுப்பே பின்பு நீங்கள் ஏன் செல்வத்தை நோக்கி ஓடுகின்றிர்கள். சிறு காலம் தெய்வ சிந்தனையில் ஈடுபடுங்கள்.

இரண்டாவதாக எதிர்காலங்கள் அறிய வேண்டும் என அறிய ஆவல் ஏன்? நடப்பது நன்றாகவே நடக்கும் அதை தடை படுத்த முடியாது. வீணாக ஜாதகத்தை எடுத்து அங்கும் இங்கும் அலைவதை சிறிது நிறுத்துங்கள். இறைவன் மீது பரிபூரணமாக நம்பிக்கை வையுங்கள். ஜாதக நிலைகளில் என்ன நடக்கும் என அறிந்து விட்டால் வருவதை உங்களால் தவிர்க்க முடியுமா? இயலாத நிலையில் அதை அறிந்து கொள்ள நினைப்பது ஏன்? ஜோதிடம் என்பது ஓர் பொய்யான அறிவு என்று யாம் இங்கு எடுத்துரைக்கவில்லை அதில் சத்தியம் உண்டு. ஆனால் அதை தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப் போகின்றாய் என்பது தான் கேள்வியாகின்றது. இறைவனிடம் அனைத்தும் விட்டு விட்டு சரணடைந்த பின் எதிர்காலம் அவன் பொறுப்பாகின்றது. அதனை அறியாமல் அங்கும் இங்கும் ஓடி பல நூறு பணம் செலவு செய்து அவன் கூறும் பரிகாரங்களும் செய்த பின் இறைவனை குறை சொல்வது ஆகாது. முழுமையாக சரணடைந்தவனுக்கு எவ்வித தோல்விகள் நேரிடாது ஏனெனில் அவன் மனப்பக்குவன் அந்த அளவிற்கு இருக்கும். தன் கர்ம வினை தன்னை தொடர்ந்தது என அவன் அறிவான். இதற்கு இறைவன் பொறுப்பாக மாட்டான் சகிக்கும் தன்மை மட்டும் தருவான் என்பதை முழுமையாக உணர்ந்து சரணடைந்து முழுமையாக இறைவனைஅடையுங்கள் இல்லையேல் அகங்காரத்தின் மறுபக்கமாக நான் செய்கிறேன் என்ற நம்பிக்கையில் செல்லுங்கள் மத்தியில் கிடந்து தவழாதிர்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #29

1-9-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: மகான்கள் புனிதர்கள் இவர்களுக்கு உள்ள வித்யாசம் என்ன? அவர்களை எவ்விதம் அறிவது?

விஷேசமாக மகான்களுக்கும் புனிதர்களுக்கும் பேதங்கள் இல்லை சாதாரண மானிடர் போல் இருந்த போதிலும் மனநிலை ஒன்றே மாறும். சமதர்ஸனம் என்கின்ற ஓர் மகத்தான தகுதி ஒன்று உள்ளதே அதன் விளக்கம் என்னவென்றால் அவர்கள் மகான் என்னும் நிலையை அடைந்ததும் அனைவரையும் ஓரே விதமாகவே அன்பாகவே பார்க்கிறார்கள். இங்கு அவன் அன்பிற்கு எல்லையும் இல்லை அவர்களுக்கென தனியென நபரும் இல்லை. அனைவரையும் ஓர் நிலையில் பார்த்து அன்பளிக்கிறான் என்பது ஓர் சிறந்த நிலை. வெளியில் விஷேசமாக அறிகுறிகளும் இல்லை, கொம்புகளும் இல்லை, கீறும் நகங்களும் இல்லை, யாதுமில்லை இருப்பினும் பரிபூரணமாக இறை விசுவாசமும் இறை மீது உள்ள அன்பும் உண்டு. தானாக விசித்திரங்கள் அதிசயங்கள் செய்வதில்லை சமயங்களில் இறைவன் அவன் வழியாக சில அதிசயங்கள் புரிகிறான். இது ஒன்றை சாதாரண நிலைக்கும் மகான்களின் நிலைக்கும் வித்யாசமாகின்றது. குறிப்பாக கூறினால் இறைவன் அனைவர்க்குள் வசிக்கிறான் என்பது உண்மை நிலை. அவ்விறைவனை முழுமையாக உணர்ந்தவன் மகான் என்றும் இறைவன் உள் இருக்கின்றதை உணர்ந்து அவ்விறைவனை திருப்திப்படுத்தும் ஆனந்தப்படுத்தும் வேலையை இவன் வேலையை செய்கின்றான்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #28

5-8-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

யாம் இறைவனை நல்வழியில் நாடுகின்றோம் பூஜிக்கின்றோம் பல வழியில் சேவிக்கின்றோம் இருந்த போதிலும் இறைவன் எம்மைத் திரும்பிப் பார்ப்பதில்லை என்னும் மனக்குறை பலரிடம் உள்ளது. உண்மை என்னவென்றால் உண்மையாக நாம் இறைவனை நாடுவதில்லை. மண் படிந்த ஒரு குழந்தையை நீராட்ட வரும் தாயைக் கண்டு அந்தக் குழந்தை ஓடுகின்றதே அதுபோலவே நாமும் ஓடிக்கொண்டு இருக்கின்றோம். நமது லெளகீக (உலக) எதார்த்த பாசங்களை நாடி நாமும் பின் தொடர்ந்து செல்கின்றோம். அந்த தாயைப்போல் ஆண்டவன் என்றும் நம்மைத் தேடிக்கொண்டே இருக்கின்றான். நாம் ஒளிந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை மறவாது இருத்தல் வேண்டும். அந்தத் தாயிடம் சரணடைந்து நாமும் நமது அழுக்குகளை நீக்கிக் கொண்டால் எளிதாக இறைவனடி சேர்ந்திட இயலும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #27

9-7-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மந்திரங்கள் ஜெபிக்கும் காலங்களில் எண்ணிக்கை வைப்பது அவசியம்தானா?

ஆன்மீக நிலையில் இவ்வித எண்ணிக்கை வைப்பது அவசியமற்றது ஆகும். எண்ணிக்கையை விட மன ஒரு நிலைப்பாடு முக்கியமாகின்றது. இருப்பினும் மந்திரங்கள் சித்தி (பயன்) பெற்று பிரயோகம் (செயல்படுத்த) காண விரும்பும் சிலர் எண்ணிக்கை வைப்பதும் உண்டு. குறிப்பாக ஒரு இலட்சம், இருபத்தி ஐந்தாயிரங்கள் ஜெபித்தால் சித்தி (பயன்) என கூறுவர். ஐம்பது இலட்சம் ஜெபித்தாலும் மன ஒரு நிலைப்பாடு இல்லையேல் சித்தி ஆகாது (பயன் தராது) என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும். எண்ணிக்கைதனை மன சிரத்தையுடன் மனதினை ஒரு நிலைப்படுத்தி ஜெபித்து வர சிறு நற்பலன் தரும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #26

11-6-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: பயம் என்பது என்ன? அது எவ்விதம் உருவாகிறது? அதை எவ்விதம் வெல்வது?

பயம் என்பது ஒரு மனநிலை என்பதை முதலில் உணர வேண்டும். இது நாமாக உருவாக்கும் ஒரு மானசீக பூதமென்பதை அறிய வேண்டும். பொதுவாக மனிதன் பயப்பட வேண்டியது இல்லை. இப்பயம் எதனால் வருகின்றது என்பதை நன்கு சிந்தித்தோம் என்றால் பயம் என்பது நமது என்கின்ற அந்தச் சொல்லினால் அந்த மனத் தன்மையால் நமது சொத்து, நமது சொந்தம், நமது பிள்ளைகள், நமது உயிர் என்றெல்லாம் சிந்திக்கும் போது பயம் ஏற்படுகின்றது. இவை இழந்து விடுவோமோ என்கின்ற அந்தப் பயமானது நம்மை முழுமையாகக் கவர்ந்து ஒருவித கிலியை (அச்சத்தை) உண்டாக்குகின்றது. அதாவது ஓர் மனநிலை இழப்போமோ என்கின்ற பயமாக மாறுகின்றது. இந்தப் பயத்தை எவ்விதம் வெல்வது என்பது ஓர் விளக்கத்தில் உண்டு. கீதையின் சாரமதை நன்கு உணர்ந்து கொண்டால் பயத்தை எவ்விதம் நீக்குவது என்பதை நன்கு அறிந்து கொள்ளலாம். வரும்பொழுது ஒன்றுமில்லை செல்லும்பொழுதும் ஒன்றுமில்லை இடையிலிருப்பது அவன் அளித்தது என முழுமையாக உணர்ந்து கொண்டால் உயிரும் அவ்விதமே என உணர்ந்து கொண்டால் எதுவும் நஷ்டப்படுவதற்கில்லை. எதுவும் தொலைப்பதற்கில்லை. எதுவும் இழப்பதற்கும் இல்லை என்பதை நன்கு அறிந்த பின்பு பயமும் இல்லை அச்சமும் இல்லை. இந்நிலை மாறுவதற்கு மன உறுதி வேண்டும். பொதுவாக இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் தானாக தைரியம் உருவாகின்றது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #25

15-5-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

வாழ்வுதனில் இறைநாட்டம் கொண்டும் இவ்வாழ்வில் இறைவனை அடையவும் சித்திகள் வேண்டுமா? இது உதவுமா?

சித்திகள் கிடைக்க ஓர் அளவிற்கு ஓரிரு படிகள் முன்னேற உதவும் என்பது மட்டுமல்லாது சித்திகள் மற்றொன்றிற்கும் ஆகாது என்றும் இங்கு முன்னதாக கூறியுள்ளோம். பறக்கும் திறன் இருந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் பறவைகள் யாவும் முக்தி அடைந்திருக்க வேண்டும். நீரில் வாழ்ந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் முக்தி அடைந்திருக்கும். ஆடையில்லாமல் திரிந்தால் இறைவனை அடையலாம் என்று இருந்தால் காட்டில் வாழும் பிராணிகள் அனைத்தும் முக்தி அடைந்திருக்கும். இவையாவும் முக்தி அடையவில்லையே இவையாவும் இறைவனை அடைய உதவாது. இறைவனை அடைய வேண்டுமென்றால் அசையாத நம்பிக்கையும் அன்றாட வழிபாடும் சதா அவன் நினைவும் இருக்க வேண்டும் என்பது விதியாகும் அர்ஜீனன் பெரும் பூஜைகள் செய்தும் ஓர் அளவிற்கு கர்வம் வந்த போது கிருஷ்ணன் அவனை கூட்டிச் சென்று பீமன் மானசீகமாக வில்வத்தை அளித்து உருவாக்கிய ஓர் வில்வ மலையை காட்டினார். இதன் வழியாக அர்ஜீனனின் அகந்தையை ஒழித்தான் என்பது மட்டுமல்லாது மானசீக பூஜையின் முக்கியத்துவத்தை இங்கு எடுத்துரைத்தோமே.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #24

18-4-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இங்கு இறைநாமம் பாடிட பலர் பயப்படுகின்றனர். இங்கு இறைநாமம் கூற பலர் பயப்படுகின்றனர். அனைவரின் மனதிலும் பயம் உள்ளது பயத்தைவிட நாணமே (வெட்கமே) அதிகம் உள்ளது.

நல்துணை என்பது இறைநாமமே. நல்துணை என்பது நமச்சிவாயமே. நல்துணை என்பது இறையருளே. நல்துணை இதையன்றி வேறு ஒன்றுமில்லையே. இறைவனுக்கு கூட்டு பிரார்த்தனை செய்யும் காலங்களில் தியானம் செய்தல் வேண்டாம். தியானம் செய்ய வேறு நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். தியானம் செய்ய நேரம் தனியாகவும் பூஜை செய்யும் நேரம் தனியாகவும் பிரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு சொல்வது உங்கள் மனது வருத்தப்பட அல்ல. நீங்கள் அனைவரும் மேன்மை அடைவதற்க்காக உங்கள் நாணத்தை போக்கிடவே அனைவரும் நலம் பெறுவதற்கே.