பாடல் #716

பாடல் #716: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே.

விளக்கம்:

உயிர்களுக்கு தாம் வாழுகின்ற காலம் எவ்வளவு என்பது தெரியாது. தமது வாழ்நாளை அதிகப்படுத்திக் கொடுக்கும் அகயோகத்தின் பெருமையை உணர்ந்து அதனை நோக்கிச்சென்று தங்களின் மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளியாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து அதனால் கிடைக்கும் பேரின்பத்தில் திளைத்து எப்போதும் நிலையாக நிற்பவர்கள் சாதகர்கள் ஆகின்றார்கள்.

கருத்து: அழிகின்ற வாழ்நாளை நீட்டிக்க அகயோகம் செய்து இறைவனோடு கலந்து பேரின்பத்தில் திளைத்து நிற்பவர்கள் சாதகர்கள் ஆவார்கள்.

பாடல் #715

பாடல் #715: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.

விளக்கம்:

மூச்சுக்காற்றோடு கலந்து உயிர்களின் உயிர்த்துடிப்பின் நாதமாக நிற்கின்ற பஞ்ச பூதங்களின் தலைவனாகிய இறைவனை அந்த மூச்சுக்காற்று மற்ற நாடிகளின் வழியே சென்று வீணாகிவிடாமல் சுழுமுனை நாடியின் வழியே மேலேற்றிச் சென்று தலை உச்சியில் சடையணிந்த கோலத்தில் நின்ற சங்கரனின் தலைவனாகிய இறைவனோடு கலந்து விட்டால் அந்த இறைவன் உயிர்களின் உடலையே தனக்கு ஏற்ற காளை வாகனமாக்கி அதிலேயே அழியாமல் என்றும் வீற்றிருந்து அருளுவான்.

கருத்து: மூச்சுக்காற்றை மற்ற நாடிகளின் வழியே செலுத்தி வீணாக்காமல் சுழுமுனை நாடி வழியே எடுத்துச் சென்று இறைவனோடு கலந்துவிடும் யோகியர்களின் உடல் என்றும் அழியாமல் இறைவனின் திருவருளோடு நிலைத்து நிற்கின்றது.

பாடல் #714

பாடல் #714: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியது வாமே.

விளக்கம்:

இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றை நடுவில் உள்ள சுழுமுனை நாடி வழியே நேராக மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனோடு கலந்து அசைவில்லாமல் சிலை போல ஒன்றாக நின்றால் வெளிப்படும் அமிர்தத்தின் மூலம் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனின் அருள் வடிவம் பதினாறு கலைகளிலும் (பாடல் #713 இல் கொடுக்கப்பட்டுள்ளபடி 16 நாடிகள்) கலந்து நிற்பதை அறிந்து கொள்ளலாம். யோகியர்கள் மாயையினால் உருவாகும் மயக்கத்திலிருந்து விலகி உண்மை ஞானத்தில் எப்போதும் இருப்பதற்கான வழி இதை அறிந்து கொள்வதே ஆகும்.

கருத்து: சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை கொண்டு சென்று சக்ஸ்ரதளத்தில் சேர்க்கும் யோகியர்கள் தங்களின் 16 நாடிகளிலும் இறைவனது திருவருள் கலந்து இருப்பதை அறிந்து எப்போதும் மாயை இல்லாத உண்மை ஞானத்தில் இருப்பார்கள்.

பாடல் #713

பாடல் #713: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நிற்றலே.

விளக்கம்:

உலக விஷயங்களை எண்ணாமல் ஒளி உருவமான இறைவனின் மேல் எப்போதும் எண்ணத்தை வைத்திருந்தால் இறைவனின் திருவருள் நமது நான்கு அந்தக்கரணங்களையும், பதினாறு கலைகளையும், மூச்சுக்காற்றோடு என்றும் கலந்து நின்று காத்தருளும்.

கருத்து: இறைவனின் மேல் எண்ணம் வைத்து தியானிப்பவர்களை இறையருள் அனைத்திலிருந்தும் காத்து அருளும்.

நான்கு அந்தக்கரணங்கள்:

  1. மனம்
  2. புத்தி
  3. சித்தம்
  4. அகங்காரம்

பதினாறு கலைகள் (நாடிகள்):

  1. மேதைக்கலை
  2. அருக்கீசக்கலை
  3. விடக்கலை
  4. விந்துக்கலை
  5. அர்த்தசந்திரன் கலை
  6. நிரோதினிக்கலை
  7. நாதக்கலை
  8. நாதாந்தக்கலை
  9. சக்திக்கலை
  10. வியாபினிக்கலை
  11. சமனைக்கலை
  12. உன்மனைக்கலை
  13. வியோமரூபினிக்கலை
  14. அனந்தைக்கலை
  15. அனாதைக்கலை
  16. அனாசிருதைக்கலை

1. மேதைக்கலை தொப்புள் முதல் மார்பு நடு இதயம் வரை இருக்கும்

2. அருக்கீசக்கலை இதயம் முதல் தொண்டைக்குழிவரை இருக்கும்.

3. விடக்கலை தொண்டை முதல் நாக்கின் அடிவரை இருக்கும்.

4. விந்துக்கலை நாக்கினடி முதல் புருவ நடுவரை இருக்கும்.

5. அர்த்தசந்திரக்கலை புருவநடு முதல் உச்சித்துளைவரை இருக்கும்.

6. நிரோதினிக்கலை,

7. நாதக்கலை,

8. நாதாந்தகலை ஆகிய மூன்றும் சம அளவில் பரவியிருக்கும்.

9. சக்திக்கலை,

10. வியாபினிக்கலை,

11. சமனைக்கலை,

12. உன்மனைக்கலை, ஆகிய  நான்கும் 12 விரல் அளவில் பரவியிருக்கும்.

13. வியோமரூபிணிக் கலை

14. அனந்தைக் கலை

15. அனாதைக் கலை,

16. அனாசிருதைக் கலை சமனைக்கும் வியாபினிக்கும் நடுவே இருக்கும்.

பாடல் #712

பாடல் #712: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்குவது மாமே.

விளக்கம்:

தன்னை அடைவதற்கு உண்மையான அன்பை வழியாக வைத்த நெற்றிக்கண்ணையுடைய இறைவனை உண்மையான அன்போடு இருகண்களுக்கு நடுவே இருக்கும் சுழுமுணை நாடியின் உச்சியை நோக்கி தியானத்தில் இருந்தால் தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒளிப்பிரவாகமாக வீற்றிருக்கும் இறைவனைச் சென்றடையும் வழி கிடைக்கும். அந்த வழியை அன்போடு பின்பற்றி அடைந்து விட்டால் எப்போதும் பேரின்பத்தில் திளைத்து என்றும் அழியாமல் இறையருள் காத்து நிற்கும்.

கருத்து: நாடிகளின் வழியே இறைவனை அடைவதற்கு உண்மையான அன்பு ஒன்றே வழியாகும்.

பாடல் #711

பாடல் #711: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தானாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டுஅறி வார்க்கு நமனில்லை தானே.

விளக்கம்:

கீழ்நோக்கிச் செல்லும் மூச்சுக்காற்றை மேல்நோக்கி செல்ல வைத்து அதை சுழுமுனை நாடியோடு கட்டி வைக்கும் திறனைப் பெற்ற யோகியர்கள் அனைத்தும் தாமே என்பதை உணர்ந்து நிற்பார்கள். அதன்பின் சகஸ்ரதளத்தில் மலர்ந்த ஆயிரம் தாமரை இதழ்களின் மேலே வீற்றிருக்கும் இறைவனோடு மூச்சுக்காற்றை கலக்கவிட்டு அதை மீண்டும் கீழிறக்கி உள் நாக்கின் மேலே மூடியுள்ள துளையைக் குத்தி அதில் அமிர்தத்தை சுரக்க வைத்து அந்த அமிர்தத்தைப் பருகி தனது நடு நாடியாகிய சுழுமுனையிலேயே மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்க முடிந்த யோகியர்கள் இனி எப்போதும் இறந்து பிறவாத நிலையை அடைவார்கள்.

கருத்து: அகயோகம் ஆனந்தயோகம் செய்த யோகியர்களுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை.

பாடல் #710

பாடல் #710: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே.

விளக்கம்:

குளிர்ச்சியான சந்திரனின் குணம் கொண்ட இடகலை மற்றும் வெப்பமான சூரியனின் குணம் கொண்ட பிங்கலை ஆகிய நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றுகளை சுழுமுனை நாடிவழியே ஒன்றாகச் சேர்த்து மேலெழுப்பிச் சென்று சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் ஒன்றாகக் கலக்கும் படி செய்யும் அகயோகத்தை செய்த யோகியர்களே வானத்தில் வீற்றிருக்கும் பழம்பெரும் தேவர்களாகிறார்கள். இந்த அகயோகத்தை உண்மையாக கடைபிடித்து இருக்கும் சித்தர்களுக்கு அதையும் தாண்டிய ஆனந்த யோகத்தில் தன்னை அடையும் வழியைக் காட்டி அங்கே அவர்களுடன் கலந்து இறைவனும் நிற்கின்றான்.

கருத்து: சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை மேலே சேர்க்கும் அகயோகத்தை செய்த யோகிகள் தேவர்களாகிறார்கள். அதையும் தாண்டி துவாதசாந்த வெளியில் இருக்கும் இறைவனோடு இணைகின்ற ஆனந்த யோகத்தை செய்த யோகிகள் இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.

பாடல் #709

பாடல் #709: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தமீ தானந்த யோகமே.

விளக்கம்:

யோகத்தின் மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பி மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களிலும் வீற்றிருக்கும் மூர்த்திகளோடும் கலந்து சென்று அதற்கு மேலே இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் சதாசிவமூர்த்தியோடு இணைந்து அமிர்தமாகி தலை உச்சியிலிருந்து நான்கு அங்குலத்திற்குக் கீழே இருக்கும் உள் நாக்கில் பரஒளியாகிய அசையும் சக்தியுடன் கலந்து அதன்பிறகு தலை உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குலத்திற்கு மேலே இருக்கும் துவாதசாந்த வெளியில் இருக்கும் பரநாதமாகிய அசையா சக்தியோடு இரண்டறக் கலந்து இருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகமாகும்.

கருத்து: குண்டலினி சக்தியை ஏழு சக்கரங்களுக்கும் ஏற்றிச் சென்று எட்டாவது நிலையில் அமிர்தமாகி ஒன்பதாவது நிலையில் இறைவனோடு கலந்து இருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகமாகும்.

பாடல் #708

பாடல் #708: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே.

விளக்கம்:

மூலாதாரத்தில் வீற்றிருந்து வேதங்களை ஓதிக்கொண்டே இருக்கின்ற பிரம்மனும் சுவாதிட்டானத்தில் வீற்றிருக்கின்ற திருமாலும் மணிப்பூரகத்தில் வீற்றிருக்கின்ற உருத்திரனும் அநாகதத்தில் வீற்றிருக்கின்ற மகேஸ்வரனும் விசுத்தியில் வீற்றிருக்கின்ற சதாசிவனும் ஆக்ஞையில் வீற்றிருக்கின்ற ஒளியும் சகஸ்ரரத்தில் வீற்றிருக்கின்ற ஒலியும் அதைத்தாண்டி உள் நாக்கிற்கு மேலே அமிர்தம் கொட்டுகின்ற இடத்தில் வீற்றிருக்கும் பரஒளியும் தலை உச்சியிலிருந்து 12 அங்குலம் உயரத்தில் உள்ள துவாதசாந்த வெளியில் வீற்றிருக்கும் பரஒலியும் ஆகிய இந்த ஒன்பதுவிதமான சக்திகளும் அசையா சக்தி (பரன்-சிவம்) அசையும் சக்தி (பரை-சக்தி) என்று இரண்டாக விளங்கும் பராபரையின் திருவடிகளே ஆகும்.

கருத்து: உயிர்களின் உடலின் ஆறு ஆதாரச் சக்கரங்களில் சக்திமயமாகவும் ஏழாவது சக்கரத்தில் ஒளிமயமாகவும் எட்டாவதாக அமிர்தம் பொழிகின்ற இடத்தில் பரஒளியாகவும், ஒன்பதாவதாக தலையைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் பரஒலியாகவும் இருக்கின்ற மூர்த்திகள் அனைவரும் பராபரை எனும் ஆதிமூலசக்தியின் திருவடிவங்களே ஆகும்.

பாடல் #707

பாடல் #707: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருக்கின்ற நகரறி வாரே.

விளக்கம்:

இறைவனைக் காண வேண்டுமென்று ஓயாமல் அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் கடல்கள் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும் தனது பாதங்கள் வலிக்கும் வரை நடந்து தேடினாலும் ஒரு பயனும் இருக்காது. பார்க்கும் அனைத்தையும் இறைவனாக பார்த்து அந்த இறைவன் மீது உண்மையான அன்பை செலுத்துபவர்கள் சித்திகளை அடைந்து தமது உள்ளமாகிய திருக்கோயிலேயே இறைவன் வீற்றிருக்கின்றான் என்பதை அறிந்து கொள்வர்கள்.

கருத்து: இறைவனை வெளியில் எங்கு தேடினாலும் காண முடியாது. உண்மையான அன்பால் தேடினால் கண்டு கொள்ளலாம்.