பாடல் #575

பாடல் #575: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

புறப்பட்டுப் புக்குத் திரியும் வாயுவை
நெறிப்படவே உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

விளக்கம்:

வெளியில் சுற்றித் திரியும் பிராணவாயுவை பிராணாயாம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) உள்ளே இழுத்து வைத்திருந்தால் அந்தக் காற்று உள்ளே சுத்தமாகி விடும். உடலுறுப்புக்கள் சிவப்பாகி முடிகள் கருப்பாகி அழகாக விளங்குவதோடு மட்டுமின்றி முறைப்படி பிராணாயாமத்தைச் செய்பவரின் உள்ளத்திலிருக்கும் கயிறு போல் முறுக்கிய சடையணிந்த சிவபெருமான் வெளியே செல்லாமல் இருப்பான்.

பாடல் #576

பாடல் #576: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிறில்கோல அஞ்செழுத் தாமே.

விளக்கம்:

முறைப்படி பிராணாயாமம் செய்பவர்களின் ஆரம்பகாலத்தில் உடலை இடமாகக் கொண்டிருக்கும் இடகலை பிங்கலை (பாடல் #567 இல் உள்ளபடி) ஆகிய பிராண சக்திகள் பன்னிரண்டு அங்குல அளவிற்கு உள்ளுக்குள் வந்தும் வெளியே சென்றும் இருக்கும். பிற்காலத்தில் அந்த சக்திகள் இரண்டும் தொண்டைக்குழியிலிருந்து தலை உச்சிவரை இருக்கின்ற நான்கு அங்குல அளவிற்குச் செல்லாமல் கழுத்துக்குக் கீழே எட்டு அங்குல அளவிற்கு மட்டுமே சென்றுகொண்டு இருக்கும். தொண்டைக்குழியிலிருந்து தலை உச்சிவரை உள்ள இடத்துக்குச் செல்லாமல் இருக்கும் மூச்சுக்காற்றை அந்த இடத்திற்கும் செல்லுமாறு மொத்தம் பன்னிரண்டு அங்குல அளவிற்கும் பிராணாயாமம் செய்பவர்கள் பஞ்சாக்கர மந்திரத்தின் (நமசிவாய) வடிவாக மாறுவார்கள்.

பாடல் #577

பாடல் #577: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்

பன்னிரண் டானைக்குப் பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே.

விளக்கம்:

நமது உடலின் மூக்குத்துவாரத்திலிருந்து அடிவயிறு வரை பன்னிரண்டு அங்குல அளவிற்குச் சென்று வரும் மூச்சுக்காற்று உள்ளே வருவதும் வெளியே செல்லுவதுமாகிய இரண்டு செயல்களை மட்டுமே செய்து வருகின்றது. இச்செயல்களை ஆன்மா அறியவில்லை. மூக்கிலிருந்து வயிற்றை நோக்கிக் கீழ்ச் செல்லும் மூச்சுக்காற்றை மூக்கிலிருந்து தலை உச்சி நோக்கி மேலே செல்ல பிராணாயாமத்தின் மூலம் முயற்சித்தால் நமது உடலுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை.

This image has an empty alt attribute; its file name is om-namah-shivaya-puja-room-lord-mahadev-shiva-shakti-Ea20b209395422468d137f86a1f393bf0-1.jpg

பாடல் #558

பாடல் #558: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திகத் தின்மிகத்
தங்க இருப்பவர் தலைவனு மாமே.

விளக்கம்:

பத்மாசனம் முதல் பல ஆசனங்கள் உள்ளன. அவற்றுள் எட்டு ஆசனங்கள் முக்கியமானவை ஆகும். அந்த எட்டில் முதலானது சுவத்திகாசனம் ஆகும் (இதை சுகாசனம் என்றும் கூறுவர்). இதைத் தவறாமல் தினம் செய்து உணர்ந்து இருப்பவர் எட்டு ஆசனங்களின் தலைவராவார்.

பாடல் #559

பாடல் #559: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.

விளக்கம்:

ஒரு பக்க காலை எடுத்து மறு பக்க காலின் மேல் அணைத்து வைத்து அது போலவே இன்னொரு பக்க காலையும் செய்து அமர்ந்து அழகாக கைகள் இரண்டையும் மேல் நோக்கி மலர்த்தி இரு தொடைகளின் மேல் வைத்து அமர்ந்திருப்பதே உலகம் புகழும் பத்மாசனம் ஆகும்.

பாடலில் உள்ளவாறு பத்மாசனம் செய்யும் முறை:

  1. முதுகை நேராக வைத்துத் தரையில் இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
  2. இடது காலை மடக்கி இடது பாதத்தை வலது தொடையின் மேல் வைக்கவும்.
  3. வலது காலை மடக்கி வலது பாதத்தை இடது தொடையின் மேல் வைக்கவும்.
  4. இரண்டு கைகளையும் நேராக நீட்டி இரண்டு கால்களின் மடங்கிய முட்டியின் மேல் வைக்கவும்.
  5. உள்ளங்கைகள் இரண்டையும் மேல் நோக்கித் திருப்பி ஆட்காட்டி விரலை மடக்கி கட்டை விரலால் பிடித்துக்கொள்ளவும்.

பாடல் #560

பாடல் #560: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்
தரிய முழந்தாளில் கைகளை நீட்டி
உருகி யிடுமுடற் செவ்வே யிருத்திப்
பரிசு பெற்றிடில் பத்திரா சனமே.

விளக்கம்:

குற்றமில்லாத வலது காலை மேலே தெரியும்படி வைத்து அருமையான கால் முட்டிகளில் இரண்டு கைகளையும் நீட்டி வைத்து தளர்ந்து இருக்கும் உடம்பை நேராக்கி நிமிர்ந்து அமர்ந்து அதனால் ஏற்படும் பயன்களைப் பெறுவதே பத்திராசனம் ஆகும்.

பத்திராசனம் செய்யும் முறை:

முதலில் கால்களை நீட்டி அமரவும். பின்னர் முடிந்தளவு கால்களை அகட்டி கைகளை முன் பக்கம் ஊன்றி அப்படியே குதிகால்களில் அமர்ந்து கால் விரல்களை உயர்த்திக் கொள்ளவும்.

பத்திராசனத்தின் பயன்கள்:

மனதை ஒருமுகப்படுவதற்கு இந்த ஆசனம் உதவும். தியானம் பழக ஏற்ற ஆசனம் இது.

பாடல் #561

பாடல் #561: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனமுங் கொள்ளலு மாமே.

விளக்கம்:

பத்மாசனத்தில் உள்ளது போல் பாதங்கள் இரண்டையும் தொடையின் மேல் மாற்றி வைத்து கைகள் இரண்டையும் அத்தொடைகளின் இடைவெளியில் நுழைத்துத் தரையில் ஊன்றி முக்கிக் கொண்டு உடம்பின் பாரத்தைக் கைகளில் தாங்கி உடலைத் தூக்கி நிறுத்தி அசையாமல் இருப்பதே குக்குட ஆசனம் செய்யும் முறை ஆகும்.

குக்குட ஆசனத்தின் பலன்கள்:

தியானம் மற்றும் யோக வழிகளில் செல்பவர்களுக்கு ஏற்படும் செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்து வயிற்றில் ஏற்படும் சூட்டையும் தணிக்க குக்குட ஆசனம் உதவும்.

பாடல் #562

பாடல் #562: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

விளக்கம்:

பாத நுனிகள் தரையில் அழுந்தும்படி வைத்து முழந்தாளிட்டு காலின் மேல் அமர்ந்து கைகளை பின்புறமாக பாதங்களில் படும்படி நீட்டி வைத்து ஆதரவாக இருக்க வாயை ஆவெனப் பிளந்து கொண்டு அழகாக கண்களை வேறெங்கும் சுழற்றாமல் மூக்கின் நுனியை நோக்கி பார்த்துக் கொண்டு இருப்பது புகழ் பெற்ற சிங்காசனம் என்று கூறப்படும்.

சிங்காசனம் ஆசனத்தின் பயன்கள்:

நன்கு பசியெடுக்கும். முகதாடை நாக்கு தொண்டையை ஒட்டிய நாக்கின் தொடக்கப்பகுதி ஆகியவற்றிற்கு நன்கு பயிற்சி கிடைக்கிறது. கண்களுக்கு நல்ல கூர்மையான நோக்கும் சக்தி கிடைக்கிறது. காது, மூக்கு தொண்டைக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. வயிற்றில் ஜீரண சுரப்பிகள் வேலை செய்யும். நாக்கை வெளியில் இழுப்பதால் தொண்டை மூக்கில் சுத்த ரத்தம் பாயும். உணவு நன்கு ஜீரணமாகும். நாக்கை வெளியில் நீட்டுவதால் நரம்புகள் இழுக்கப்பட்டு தாடைகள் இறுக்கம் குறைந்து பலப்படுகின்றன. விக்கல் வியாதி தடுக்கப்படுகிறது. சிங்காசனத்தை தொடர்ந்து செய்து பழகிய பின் முழங்கால் தொடை சதைபிடிப்பு நீங்கி பலமுள்ளதாக ஆகின்றன. தன்னுள் சிங்கத்தின் பலம் வருவது போல பாவனை செய்தால் எல்லா அங்கங்களும் வலிமை பெற்றுவிடும். இவ்வாறு தியானம் செய்தால் மன உறுதி கிடைக்கும். சக்தி பெருகும்.

பாடல் #563

பாடல் #563: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.

விளக்கம்:

  1. பத்திரம் (பத்திராசனம்) 2. கோமுகம் (கோமுகாசனம்) 3. பங்கயம் (பத்மாசனம்) 4. கேசரி (சிங்காசனம்) 5. சொத்திரம் (குக்குட ஆசனம்) 6. வீரம் (வீராசனம்) 7. சுகாதனம் ஆகிய ஏழு ஆசனங்களோடு மிகவும் சிறப்பான சுவத்திகாசனம் சேர்த்து எட்டு ஆசனங்கள் இறைவனை அடைய உதவும் அட்டங்க யோகத்திற்கு முக்கியமானவை ஆகும். மற்ற ஆசனங்கள் எட்டும் சேர்ந்து பதினாறு அவற்றோடு நூற்றிப் பத்தும் சேர்ந்து மொத்தம் 126 ஆசனங்கள் உள்ளது.

பாடல் #555

பாடல் #555: மூன்றாம் தந்திரம் – 3. நியமம்

ஆதியை வேதத்தின் அகப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதியை உணர்ந்து நியமத்த னாமே.

விளக்கம்:

ஆதியாய் முதற் பொருளானவனை, வேதத்தின் பொருளாக உள்ளவனை, அக்கினி சொரூபமானவனை, அக்கினியின் வெப்பமானவனை, திருமேனியில் சரிபாதியாக பராசத்தியோடு இருக்கும் இறைவனை உணர்ந்து சத்தியத்தை கடைபிடிப்பவனே நியமத்தைக் கடைபிடிப்பவன் ஆவான்.