திருமூலர் – வரலாறு

Thirumoolar 3

திருக்கயிலாயத்தில் திருமூலருடைய பெயர் சுத்த சதாசிவர். சுந்தர நாதர் என்ற பெயரும் இவருக்கு உள்ளது. திருமால் பிரம்மா இந்திரன் முதலிய தேவர்களுக்கு நெறி அருளும் அசையா சக்தியாக இருக்கும் இறைவனையே குருவாகப் பெற்றவர் இவர். இறைவனின் திருவருளால் அவரின் திருவடியில் இருந்த எட்டு யோகிகளுள் ஒருவராக இருந்தார். அவர்களது பெயர்கள் 1. சனகர் 2. சனந்தனர் 3. சனாதனர் 4. சனற்குமாரர் 5. சிவயோக மாமுனிவர் 6. பதஞ்சலி 7. வியாக்கிரமர் 8. திருமூலர் (பாடல் #67 இல் காண்க). இவர் அட்டமா சித்திகளை கைவரப் பெற்றவர் ஆவார். இவருக்கு 7 சீடர்கள் உள்ளார்கள். அவர்களது பெயர்கள் 1. மாலாங்கன் 2. இந்திரன் 3. சோமன் 4. பிரமன் 5. உருத்திரன் 6. காலாங்கி நாதன் 7. கஞ்ச மலையன் (பாடல் #69 இல் காண்க). எண்ணில் அடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் உடலுடன் இறைவனின் திருவடிக்குக் கீழே இரவு பகல் இல்லாத இடத்தில் (சூட்சும வெளி) அமர்ந்திருக்கிறார் (பாடல் #80 இல் காண்க). தம்முடைய அமிழ்தப் பாலால் 9 கோடி யுகங்கள் இறைவனுக்கு அர்ச்சனை செய்திருக்கிறார் (பாடல் #82 இல் காண்க). 70 கோடி 100 ஆயிரம் ஆகமங்கள் மொத்தம் உள்ளது (பாடல் #60 இல் காண்க). இந்த ஆகமங்களை 9 பகுதியாக பிரித்து இறைவன் இவருக்கு உபதேசித்தார் (பாடல் #62, #63 இல் காண்க). அப்போது இறைவனின் திருநடனத்தை கண்டு அந்த பேரின்பத்திலேயே 1 கோடி யுகங்கள் திளைத்திருந்தார் (பாடல் 74 இல் காண்க).

திருமூலர் தாம் 1 கோடி யுகங்கள் பேரின்பத்தில் எப்படி இருந்தேன் என்று பின்வருமாறு விளக்குகின்றார். இறைவனின் திருவடிகளை தொழுத போது இறைவனின் மீது காட்டிய பக்தியினால் இறைவனே தன்னோடு இருந்ததினால் 1 கோடி ஆண்டுகள் தன்னால் பேரின்பத்தில் இருக்க முடிந்தது என்று கூறுகின்றார் (பாடல் #75 இல் காண்க). 1 கோடி ஆண்டுகள் பேரின்பத்தில் இருந்த பின் இறைவனே திருமூலரை எழுப்பி நீ பெற்ற ஆகமங்களை உலகில் உள்ளோர் உய்வவதற்காக எடுத்துச் சொல் என்று உணர்த்தினார் (பாடல் #76 இல் காண்க). இதனை தமிழில் எடுத்துச் சொல் என்று கட்டளையிட்டார் (பாடல் #81 இல் காண்க). 1. இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகவும் 2. யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும் (பாடல் #85 இல் காண்க) 3. இந்த உலகம் உய்வதற்காக இறைவன் உலகத்தில் வைத்திருக்கும் ரூபங்களை பார்க்க எண்ணம் கொண்டும் 4. அகத்தியரை காணவுமே இந்த உலகத்திற்கு திருமூலர் வந்தார். இறைவன் இருக்கும் இடத்திற்கும் இந்த உலகத்திற்கும் நடுவில் சூட்சும வழி ஒன்று இருக்கிறது அதன் வழியாக இந்த உலகத்திற்குள் தனது உடலுடன் வந்தேன் என்று திருமூலர் சொல்கிறார் (பாடல் #83 இல் காண்க).

திருமூலர் பசுபதிநாத் திருக்கேதாரம் கங்கைக் கரை வழியாக தென்னாட்டில் இருக்கும் காளஹஸ்த்திக்கு வந்தார். அங்கிருந்து திருவாலங்காடு பின்பு காஞ்சிபுரம் ஏகாம்பர நாதரை தரிசித்து விட்டு அங்கிருந்த முனிவர்களோடு கலந்துரையாடினார். அங்கிருந்து திருவதிகை வந்து அங்கிருக்கும் இறைவனை தரிசனம் செய்கிறார். அங்கிருந்து திருப்புலியூரில் இறைவனின் ஆனந்த நடன தரிசனத்தை கண்டு சில நாட்கள் அங்கேயே தங்குகிறார். அங்கிருந்து காவிரி நதிக்கரைக்கு வந்தார். அங்கிருந்து திருவாவடுதுறை வந்து இறைவனை வணங்கி சிறிது நாட்கள் தங்குகிறார். பின்பு அகத்தியரை பார்க்க வேண்டும் என்று அகத்தியர் இருக்குமிடம் நோக்கி கிளம்புகிறார்.

திருமூலர் பொன்னி நதிக்கரை வழியாக சென்று கொண்டிருக்கும் போது ஆடு மற்றும் பசுக்களின் கதறல் சத்தம் கேட்கிறது. சத்தம் வந்த திசை நோக்கி சென்றார். மூலன் என்ற பெயர் கொண்ட இடையன் அப்போது தான் தனது வினை முடிந்த காரணத்தினால் இறந்து கிடக்கிறான். அவனது உடலை காண்கிறார். அவனது உடலை சுற்றி வருத்தத்துடன் நிற்கும் பசுக்களையும் ஆடுகளையும் காண்டார். பசுக்களும் ஆடுகளும் கண்ணீர் விட்டபடி அந்த உடலைச் சுற்றி சுற்றி வந்து அவனை நக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இடையன் எழுந்தால் தான் பசுக்கள் ஆடுகளின் வருத்தம் போகும் என்று எண்ணிய அவர் அதன் வருத்தத்தை போக்கும் வகையில் அட்டமா சித்தியில் ஒன்றான கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி தன் உடலை ஓர் இடத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து விட்டு மூலனின் உடலில் சென்றார். பசுக்கள் ஆனந்தமடைவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த சுத்த சதாசிவர் திருமூலர் என்னும் பெயரைப் பெற்று பசுக்களையும் ஆடுகளையும் மேய்த்து விட்டு மாலை ஆனதும் பசுக்கள் இருக்கும் ஊரான சாத்தனூருக்கு அனைத்து ஆடுகளையும் பசுக்களையும் அழைத்து செல்கிறார்.

திருமூலர் சாத்தனூர் வந்ததும் பசுக்களும் ஆடுகளும் தங்களது இல்லத்திற்கு தானாகவே சென்று சேர்ந்து விடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார். பசுக்களும் ஆடுகளும் ஊருக்குள் வந்து விட்டது இன்னும் தனது கணவர் வீட்டிற்கு வரவில்லையே என்று தன் கணவரைத் வெளியே வந்து தேடுகிறார். தன்னுடைய கணவர் வெளியிலேயே நின்று பசுக்கள் ஆடுகள் செல்வதை பார்த்துக் கொண்டே இருக்கிறார். இதனைக் கண்ட மூலனின் மனைவி வீட்டிற்குள் வாருங்கள் என்று திருமூலரின் கையை பிடித்து அழைக்க முயற்சித்தாள். அப்போது திருமூலர் நான் உனது கணவன் இல்லை. உனது கணவன் உடலில் இருக்கும் சிவயோகி நான். உனக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றார். திருமூலரின் வார்த்தைகளை கேட்ட மனைவி அவரது வார்த்தைக்கு கட்டப்பட்டார் போல் தனியாக தனது வீட்டிற்குள் வந்தாள். திருமூலர் அந்த ஊரில் இருக்கும் ஒரு மடத்தில் தங்கி விட்டார். மூலனின் மனைவிக்கு இரவு முழுவதும் தூங்காமல் வருந்தத்துடன் அழுதுகொண்டு இருந்தாள். காலை விடிந்ததும் ஊரில் உள்ள அந்தணர்களிடம் செய்தியை சொல்லி தன் கணவனை வீட்டிற்கு வரச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டாள். சாத்தனூர் இறைவனை அறிந்த அந்தணர்கள் அதிகமாக வாழும் ஊராக இருந்தது. அந்தணர்கள் பலர் ஒன்று சேர்ந்து மூலன் இருப்பிடத்திற்கு வந்து மூலனை வீட்டிற்கு ஏன் செல்ல மறுக்கிறாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் மூலன் இல்லை. மூலன் நேற்றே இறந்து விட்டான். அவனது உடலில் இருக்கும் சித்தயோகி நான். கூடு விட்டு கூடு பாய்ந்து இந்த உடலில் இருக்கிறேன். வருத்தத்துடன் இருந்த பசுக்கள் ஆடுகளுக்காக இந்த மூலனின் உடலுக்குள் வந்தேன். விரைவில் இந்த உடலையும் விட்டு எனது உடலுக்குள் சென்று விடுவேன் என்றார். இதனை அந்த ஊர் அந்தணர்கள் நம்ப மறுத்தார்கள். தன் சொல்லை மெய்ப்பிக்கிறேன் என்று கூறி அருகாமையில் பார்த்தார். அங்கு இறந்த ஒரு ஆடு இருந்தது. உடனே இந்த உடலை விட்டு ஆட்டின் உடலுக்கு சென்ற திருமூலர் மீண்டும் மூலனின் உடலுக்கு வந்தார். இதனைக் கண்ட அந்தணர்கள் வந்திருப்பவர் மூலன் இல்லை சித்த யோகி என்பதை உணர்ந்து மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி விட்டார்கள். பின்பு வந்திருப்பவர் சித்த யோகி என்பதை அறிந்து கொண்ட அந்தணர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டு தங்களின் சந்தேகங்களை நிவர்ந்தி செய்து கொண்டார்கள்.

திருமூலர் சாத்தனூரில் இருந்து கிளம்பி மீண்டும் பொன்னி நதிக்கரைக்கு வந்து தன் உடல் மறைத்து வைத்த இடத்திற்கு வந்து பார்த்தார். அங்கு தன் உடலைக் காணவில்லை. தன் உடலைத் தேடிய திருமூலர் தன் உடல் கிடைக்காததால் தன்னுடைய ஞான திருஷ்டியில் என்ன நடந்தது என்று பார்க்கிறார். இந்த உடலிலேயே இருந்து வேதங்களையும் ஆகமங்களையும் தமிழில் தொகுத்து அளிப்பதற்காக இறைவன் தன்னுடைய உடலை மறைத்து வைத்திருக்கிறார் என்று உணர்ந்து இறைவனின் எண்ணத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார்.

திருமூலர் இறைவனின் திருவடியில் தன் எண்ணத்தை வைத்து அங்கிருந்து கிளம்பி செருக்கை அழிக்கும் திருவாவடுதுறை இறைவன் இருக்கும் இடத்திற்கு வருகிறார். கோவிலில் இருக்கும் பரந்து விரிந்த படர் அரசு மரத்தின் கீழே இறைவனின் நாமத்தை ஓதிக்கொண்டே தியானத்தில் அமர்ந்தார் (பாடல் #79 இல் காண்க). வருடத்திற்கு ஒரு முறை விழித்து தான் தியானத்தில் உணர்ந்ததை பாடலாக எழுதினார். இப்பாடலுக்கு மந்திர மாலை என பெயரும் கொடுத்தார் (பாடல் #86 இல் காண்க). இது போல 3000 வருடங்கள் தியானம் இருந்து வருடத்திற்கு ஒரு பாடல் வீதம் 3000 பாடல்களை எழுதினார். இறைவனைப் பற்றியும் இறைவன் அருள் புரியும் விதத்தையும் உலகம் செயல்படும் விதத்தையும் இந்த உலகத்தில் உயிர்கள் இருக்கும் பிறவியை அறுத்து இறைவனிடம் எப்படி சேரலாம் என்பது பற்றியும் நான்கு வேதங்களில் உள்ளவற்றையும் தியானத்தில் உணர்ந்து அதனை தமிழில் பாடல்களாக எழுதினார். பல சூட்சுமமான செய்திகளை மறைமுகமாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் பல பாடல்களில் அருளியிருக்கிறார். இப்பாடல்களை மாலையாக கோர்த்து இறைவனுக்கு மாலையாக திருமூலர் சாற்றினார். இதற்கான குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு தாம் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சிதம்பரம் வந்தடைந்து தன் குருவான இறைவனுடன் கலந்து விட்டார்.

திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு. 5000). திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது 3000 வருடங்கள். அதன் பிறகு தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி. 637 முதல் 653) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான திருஞானசம்பந்தர் உதித்தார். அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில் திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம் இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றது என்ன என்று பாருங்கள் என்று கூறி மண்ணைத் தோண்டச் செய்தார். அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார். அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அருளிச் செய்தார். அவருக்கு பின்பு வந்த சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். அவருக்குப்பின் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை முப்பத்து ஒன்றாவதாகச் சேர்த்து திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும் திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி ஒன்றாகத் தொகுத்த போது திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

திருமூலர் எழுதிய திருமந்திர மாலை பாடல்களை உலகத்தவர்களால் முதலில் தமிழ் மூவாயிரம் என்ற பெயரிலேயே அழைத்தார்கள். பிற்காலத்தில் வந்த சான்றோர்கள் திருமந்திரத்தில் நிரம்பியிருந்த மந்திரங்களும் தந்திரங்களும் மனித சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால் அதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்று மாற்றி வைத்தார்கள். திருமூலர் பரம்பொருளாகிய இறைவனைப் போற்றிப் பாடியருளிய திருமந்திரத்தில் பாயிரம் தலைப்பு தவிர்த்து ஒன்பது தந்திரங்கள் அமைந்துள்ளது. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர்கள் என்பது திருமூலரின் திருவாக்கு.

சர்வ மங்கள குருதேவா
சிவப்ப்ரியா மகாதேவா
ஞானரூபா அருள் தேவா
சத்குருவே நமோநமக

திருமூலர் திருவடிகளே சரணம்

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #7

12-9-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எவ்வழியில் ஆண்டவனை அடைய முயற்சித்தல் வேண்டும்? யோக நிலையா, பக்தி நிலையா, இல்லையேல் ஞான நிலையா என்பதே கேள்விகள் ஆகின்றது.

எவர் எவர்க்கு எம் மார்க்கம் எளிதாக தோன்றுகிறதோ அதனை ஏற்றுக் கொள்ளலாம். பொதுவாக, ஓர் கட்டிடம் என்றால் அதற்கு இரண்டு அல்லது மூன்று வழிகள் காணக்கூடும். எவ்வழியில் செல்கின்ற போதிலும் உள்ளே செல்ல முடியும். இருப்பினும், நமக்கு எளிதாக, தொல்லை தராத வழியை நாடிப் பயன் படுத்துவதே நல்ல முறையாகின்றது. அனைவருக்கும் யோக நிலைகள் நலம் தருவதாகக் காணாது. ஏனெனில், உடல்கூறு மனநிலை என்பதெல்லாம் தடையாகக் காணலாம்.

பக்தி மார்க்கத்தில், மந்திரங்கள் ஜெபித்து எளிதாக சிலரால் இறைவனை அடைய இயலுகின்றது. இவ்விதமே, இசையும் ஓர் பக்தியின் வழியாகவே யாம் காண்கின்றோம். இறைவனை நன்று துதித்துப் பாடினால் அவன் வராது இருக்க மாட்டான், என்பதே எமது கருத்தாகின்றது. இக்கலியுக தன்மையில், பெரும் யோகங்கள், யோக பயிற்சிகள், தவநிலைகள், என்பதெல்லாம் எளிதில் கடை பிடிக்க இயலாது என்கின்றதால், இக்காலத்திற்கு எளியவழி பக்தி மார்க்கமும், நாம கீர்த்தனமும் என்பதேயாகும் என்று இங்கு எடுத்துரைக்கின்றோம். இருப்பினும், திடமும் நம்பிக்கையும் உயர்ந்திருந்தால், யோக நிலையை கை கொள்வதில் தவறாகாது. எளிதான முறையைச் செப்பிவிட்டோம். இவைகளில் தேர்ச்சி செய்வீர்களாக.

ஞானமார்க்கம் என செப்பிக்கொண்டால், பல குழப்பங்கள் நேரிடல் காணக்கூடும். ஏனெனில், பலர் பலவிதத்தில் உபதேசிப்பர். எது சரி, எது தவறு, என்பதனை தேடிக் கண்டு பயன் அடைவதற்குமுன் இஜ் ஜென்மமும் மூடிவிடும் என்பதே நிலை. இந்நிலையில், யோகம் இல்லையேல் பக்தி மார்க்கங்களில் செல்வதே நலம்தரும் என்றும் செப்பினோமே.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #6

15-8-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஒரே சமயத்தில் ஒரு ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்தல் வேண்டும், இல்லையேல் சாதனை புரிதல் வேண்டும் என்பது விதியா? விதியாயிருந்தால் இது ஏன்?

இது ஓர் சிறப்பான வினாவாகிறது. உடல், சூட்சுமம், ஸ்தூலம் பின்பு ஆன்மா என பிரித்துப் பார்த்தால் எளிதாகும். ஸ்தூல உடலுக்கு நாம் உணவு அளிக்கின்றோம், குறிப்பிட்ட காலங்களில் அமர்ந்து உண்ணுகின்றோம், உண்ணும் காலம் நெருங்க வயிற்றினில் பசிக்கின்றது, உண்டபின் பசி மறைகின்றது. இதற்கு காரணம் நாட, அச்சமயத்தில் உடலுக்கு உணவு வேண்டும் என பழக்கம் ஏற்படுகின்றது. இவ்விதமே, ஒரே சமயத்தில் ஓர் ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்திட, சூட்சும உடலுக்கும் ஆன்மாவிற்கும் உணவு அளிப்பது போல் ஆகின்றது. இவ்விதமே பழகிட, குறித்த காலங்களில் அமர்ந்தே ஆகுதல் வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் என்பது மட்டும் அல்லாது, பழகிட்ட ஸ்தலத்தில் அமர்ந்திட்ட போதே மனம் ஒரு நிலைப்பாடு காணும். சதா தியானம், ஜபம் செய்கின்றவர்க்கு இது அவசியமில்லை. அவ்விதம் தியானம் செய்கின்றவர் குறைவே. இது கலியுகத் தன்மை, பொதுவாக ஆன்மீக முன்னேற்றம் நாடுவோர் ஒரு ஸ்தலம் தேர்ந்து எடுத்து, குறித்த சமயங்களில் தியானம் கூட நன்மைகள் ஏற்படும் என அறிவுரை அளித்தோம்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் # 5

19-7-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பெற்றவர்கள் செய்திடும் குற்றங்களுக்குப் பின்பு அவர்கள் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது உண்மையான நிலையா என ஒருவர் வினாவக் கண்டோம்.

இதற்கு யாம் எளிதாக விடை அளித்திட இயலும். இக்காலத்தில், பெற்றவன் ஒருவன் கள்வனாக மாறி களவு செய்ததற்காக மகனை தண்டிக்க இயலாது, இவ்விதமே கர்ம நிலையும், அவரவர் கர்மங்கள் அவரவர் அனுபவித்துக் கழித்தல் வேண்டும் என்பதே விதி. இருப்பினும், கூட்டுக் குடும்பங்கள் என்கின்ற நிலையில் சில பிரச்சினைகள் உருவாகின்றது. உதாரணமாக, பெற்றவர்கள் நோயுற்றவர்கள் எனக் கண்டு கொண்டால், இதன் விளைவாக மக்களும் சிறிது பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் என்னவென்றால் பந்தமே என்றும் இங்கு எடுத்துரைப்போமே. தனியாக அவதிப்படுவதில்லை, ஆனால் பந்தம் கொள்ள, பாசம் கொள்ள, சிறு வேதனைகள் உருவாகின்றது. இதுவும் தன்னுடைய கர்மங்கள் தீர்த்திடவே, இத்தகைய பெற்றோரின் குடும்பத்தில் வந்து பிறக்கின்றான் என்பதே விதியாகின்றது. இதேபோல, நல்ல பெற்றோர்கள் தீய புத்திரனை பெற்று அவதிப்படுகின்றனர், இதுவும் அதே காரணமாம். பெற்றவர்களின் கர்மங்களை தீர்க்க, அத்தகைய மகன் அக்குடும்பத்தில் பிறக்கின்றான். இருப்பினும், பெற்றவர்களின் தீய கர்மத்தால் புத்திரர்கள் பிற்காலத்தில் அவதிப்படுவார்கள் என கூறுவது தவறாகும். அவரவர் கர்மங்கள் அவரவர் தீர்த்தல் வேண்டும் என்றும் விளக்கிட்டோமே.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் # 4

22-6-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இந்து மதத் தெய்வங்களுக்கு மட்டும் ஏன் எட்டு கரங்கள், பத்து கரங்கள்? அக் கரங்களில் ஆயுதம் எதற்கு? என்ற வினா பொதுவாக கேட்கின்றோம்.

சிந்தித்தால் இதற்கு விடை எளிதாக கிட்டும் என்றும் இங்கு விளக்கிடுவோம். எட்டு திக்குகளும் காக்க வல்லவர்களாக இருப்பதால் எட்டு கரங்கள் அவர்களை சுற்றி இருக்கின்றன என்றும், ஒவ்வொரு கரங்களிலும் ஓர் ஆயுதம் காப்பை (பாதுகாப்பு) குறிக்கின்றது என்றும் இங்கு செப்பிட்டோமே. மற்ற இரண்டு கரங்கள் இருந்தால், அது நன்றாகப் பார்த்தால், மேலும் கீழும் இருக்கும். அது காக்க வல்லதாம் என்றும் இங்கு எடுத்துரைப்போமே. அது பொதுவாக அபயம் என்றும், கொடுத்தல், வாங்கல் என்றும் செப்புவார்கள், உண்மையான நிலை மேலும் கீழும் காக்குதல் என்பதேயாகும்.

இரண்டாவது கேள்வி முக்கியத்துவம் காணும் ஒரு கேள்வியானது, பெரும் அளவில் பெரிதான விநாயகர், சிறு எலி மேல் ஏன் அமர்ந்து கொள்கின்றார் என்பதேயாகின்றது.

இதற்கு விடை ஒன்று, அகங்காரம்தனை சிறிதாக்கி அதற்கு மேல் அமர்ந்து நாமும் அதேபோல் செய்தல் வேண்டும் என முதல் தெய்வம் சுட்டிக் காட்டுகின்றார், ஆதியில் இதை செய்தால் ஒழிய ஞானத்தில் முன்னேற்றம் காணாது என எடுத்துரைக்கின்றார். இரண்டாவது, யோக நெறியில் சிந்திக்க, அஷ்டமா சித்திகள் கை கொண்டால், பெரிய உருவமும் சிறு உருவத்தின் மேல் லேசாக அமர இயலும் என்றும், ஓங்காரம், அதாவது பிராணமும் ஓங்காரமும் இணைந்து உள் அடக்க எதையும் சாதிக்க இயலும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். இதனை அனைவரும் நன்கு சிந்தித்து மேலும் இரண்டு விளக்கங்கள் கண்டு பிடிப்பீர்களாக.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #3

25-5-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இக்காலம் வரை ஜபம், தியானம், நற்பணிகள், திருப்பணிகள், அனைத்தும் செய்தும் யாம் இருக்கும் இடத்தில் இருக்கின்றோம் என்று சிலர் எண்ணுகின்றனர், இவர்களுக்கு யாம் ஒன்று செப்புவோம்.

அன்பர்களே, யாமும் நீங்களும் ஓர் பாதையில் செல்கின்றோம், சிறிது முன் யாமும் பின்பு நீங்களும் என்பதே வித்தியாசம் என்றும் செப்பிட்டோமே. இறை பாதை நாடுவோர்கள் அனைவருக்கும் நல்முக்தி உண்டு என்றும் செப்பிட்டோமே. எப்பொழுது என்பதுதான் விதி, உதாரணமாக, பயிரிட்டு செடி வளர அதனை இழுப்பதால் மேலும் வளர்வதில்லை, அழிந்து போகும், இதை மனதில் நிறுத்தி காலங்கள் இதற்கு ஒதுக்கிட்டு தியான முறைகள், கர்ம யோக முறைகள் என்பதெல்லாம் செய்து வர அனைத்தும் கைகூடும் என்றும் செப்பிட்டோமே.

அவசரம் ஆன்மீகத்திற்கு ஆகாத ஓர் அவஸ்தை என்றும் இங்கு உங்களுக்கு எடுத்துரைத்தோம். ரோமாபுரி ஓர் நாளில் கட்டவில்லை என்று முன் செப்பியுள்ளோம், ஓர் கட்டிடத்திற்கு இந்நிலை என்றால் ஆன்மாவின் வளர்ச்சி, ஆன்மாவை முழுமையாக இறைவனிடம் சேர்க்க, எத்தனை காலங்கள், ஜன்மங்கள் எடுத்தல் வேண்டும் என்று சிந்தித்தால் போதும். நல் கர்மாக்கள் பலனால் இன்று நீங்கள் அனைவரும் இறை பாதையை நோக்கி அதில் ஏறி நடந்து கொண்டு இருக்கின்றீர்கள், இதுவே ஒரு பெரிய சாதனையாகும் என்று எடுத்துரைத்தோமே.

அச்சப்படுவதற்கோ, வேதனைப்படுவதற்கோ இங்கு எந்நிலையும் இல்லை. ரோகங்களும் கர்ம நிலைகள் மாறிட முழுமையாக நீங்கும் என்று எடுத்துரைத்தோமே. சிறு வேதனைகள் உண்டாகுதல் வேண்டும் என்கின்ற விதி உண்டு. அவ்விதம் இல்லையேல், கர்ம கழிப்புகள் இல்லை என்பதையும் உணர்தல் வேண்டும். ஏனெனில், உடலால் செய்த கர்ம வினைகள் உடலால் அநுபவித்து தீர்த்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு. இதுவே நடைபெறுகின்றது. இருப்பினும், அனைத்தும் எம்பிரான் திருவடியில் சமர்ப்பித்து செயல்பட முடிவு நன்மையே என்று செப்புகின்றோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #2

கேள்வி: நல்ல காரியங்கள் துவங்கும் போது சுபமுகூர்த்தங்களில் துவங்க வேண்டுமா?

பொதுவாக சுபகாரியங்கள் சுபநேரங்களில் நடத்துவது வழக்கமாகி விட்டது. இதனைப் பின் தொடர்வது தவறாகாது. அக்காலங்களில் பொதுவாக குளிகனின் காலங்களில் (குளிகன் சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம்) சுபகாரியங்கள் தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும் இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. நாகனின் (இராகு) காலங்களில் தீயகாரியங்களும் சுபமற்ற காரியங்களும் செய்து கொண்டு இருந்தனர். இக்காலத்தில் அது மாறி நற்காலங்களுக்கு என சில முகூர்த்தங்களும் தீயவைகளுக்கு என சிலதும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எவ்விதம் இருந்த போதிலும் உறுதியாக தம் கர்மங்களை தொடர்ந்து ஓயாது செய்து கொண்டிருப்பவனுக்கு அனைத்தும் நலம் தரும் காலமாகும். இவர்களுக்கு எப்பொழுதும் நல்ல காலமே. ஏனெனில் அவர்கள் உழைப்பினை தெய்வமாகக் கண்டு கொண்டனர். ஓர் சுபகாரியம் நடத்தும் முன் சுபமுகூர்த்தமோ சுபகாலமோ முக்கியத்துவம் காண்பதில்லை. செய்கின்றவரின் மன நிலையைப் பார்த்தல் வேண்டும். எக்காரியத்திற்கு சுபகாரியம் நடைபெறுகிறது. அது சுயநலம் உள்ள காரியங்களா பொதுநலம் உள்ள காரியங்களா என்கின்ற மன நிலையைப் பார்த்துக் கொண்டால் அனைத்தும் நலமே. இருப்பினும் சம்பிரதாயம் என்கின்ற ஒன்றுக்குக் கட்டுப்பட்டு சுபகாரியங்கள் சுபமுகூர்த்தங்களில் செய்வது தவறாகாது.

சுபமுகூர்த்தங்களில் செய்யும் காரியங்கள் எப்பொழுதும் நலம் தருமா?

அவ்விதம் இருக்க வேண்டும் என்பதில்லை. இங்கு முன் கூறியபடி செல்பவனின் மன நிலையே முக்கியத்துவம் காண்கின்றது. நல்ல எண்ணங்களுடன் செய்த அனைத்தும் நல்ல முடிவுகளைத் தரும் என்பது இறைவன் வகுத்த நீதியாகும். இவ்விதம் இருக்க சுபகாரியங்களுக்குச் சமயங்களில் முகூர்த்தம் பார்த்தல் வேண்டும் என்பது தவறாகும். சம்பிரதாயம் என்பன ஒட்டி நல்காரியங்கள் நல்காலங்களில் செய்வது நன்று என்பதை மட்டும் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் உழைப்பை நாடுகின்றவனுக்கு இத்தகைய நேரங்கள் இல்லை. இறைவனை நம்புகிறவனுக்கு எக்காலமும் நலம் தரும் காலமாகும்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #2

28-4-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பலருக்கு இக்காலத்தில் ஓர் பெரும் குழப்பம் உள்ளது. இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்கின்ற போது ஆலயத்திற்கு ஏன் செல்லுதல் வேண்டும்? அகம் தனிலோ, எங்குமிருந்தோ, அவனை வணங்க இயலுமே என்பது தான் அது. இதற்கு யாம் இங்கு விளக்கம் அளிக்க சித்தம் கண்டோம்.

முறையாக ஆலயம் அமைக்கக் கண்டால் அது ஆகம, வாஸ்து சாஸ்திரங்கள் தொட்டே அமைக்கப்படுகிறது. இதன் விளைவால் பல வடிவ கோபுரங்களைக் காண்கின்றோம். முக்கியமாக, அனைத்தும் ஓர் முக்கோண வடிவில் காண்பது சகஜமாகின்றது. ஆங்கிலமதில் இதை இக்காலத்தில் ஒரு பெரிய விஞ்ஞானமாக மாற்றிக்கொண்டனர். பிரமிட் என இக்காலத்தில் அழைக்கப்படுவதும் அதன் குணாதிசயங்களும் இக்காலத்தில் பலர் செப்புகின்றனர், எழுதுகின்றனர். இருப்பினும், இது அக்காலம் தொட்டே நமது பரதமதில் உண்டு என்றும் இங்கு எடுத்துரைக்கத் தக்கதாம்.

ஆலயங்களில் சென்று வழிபட வேண்டாம் என எண்ணுகின்றவர்க்கு ஒன்று இங்கு நினைவூட்டுகின்றோம். அக்கால சம்பிரதாயங்களில், காலையில் எழுந்தபின், குளித்தபின், ஆலயத்திற்க்குச் சென்ற பின்பே மற்ற வேலைகள் தொடரும் என்பது ஒரு சகஜ வழி ஆனது. இதற்குக் காரணம் உண்டு. இத்தகைய வாஸ்து சாஸ்திரமதில் கட்டப்பட்ட ஆலயங்களில் சிறிது நேரம் சென்று அமர்ந்து விட்டாலே போதும், அங்கு அத்தகைய முக்கோண வடிவங்களிலிருந்தும், ஸ்தாபித்த சக்கரங்களில் இருந்தும் புறப்படும் மின் கதிர்கள் உடலிலுள்ள தீயவையை நீக்கிவிடுகின்றது. இதனால், ஆரோக்கியம் பல மடங்காக உயர்கின்றது என்றும் இங்கு எடுத்துரைக்கத் தக்கதாம். பிரதானமாக ஒவ்வொரு கிராமங்களிலும் ஓர் பழைய ஆலயம் காணக் கூடும்.

இக்காலத்தில் நவீன வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வடிவம் அமைத்த ஆலயங்களை விட, புரதான, பழைமை வாய்ந்த வடிவமே மனிதனுக்கு நலம் தருகின்றது என்பதே எமது கருத்தாகின்றது. ஏனெனில், ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு அமைப்பும், பொதுவாக மனித நலம் நோக்கியே அமைக்கப் பட்டுள்ளது என்று எடுத்துரைப்போமே. இதனால், நாஸ்திகன் என்று கண்டு கொண்டாலும், ஆலயங்களில் வெளிப் பிரகாரமதில் சிறிது நேரம் அமர்ந்து வந்தாலே நற்பயன்கள் கிட்டக்கூடும் என்றும் எடுத்துரைத்தோமே.

குருநாதர் கருத்துக்கள் #1

9-4-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஒருவன் பிறக்கும் முன்னதாகவே பிறவி எப்படி என்பதும் ஜாதி, குலம் எப்படி என்பதும் மரண நேரம் எப்போது என்பதும் நிர்ணயம் ஆகக் கண்டால் அகால மரணம் என்பதும் நிர்ணயிக்கப்பட்டதா?

மனிதன் பிறக்கும் முன்னதாக செய்து பாக்கியுள்ள கர்ம நிலையே இப்பிறப்பு ஜன்ம ஜாதகம் ஆகும். சென்ற பிறப்பு கர்ம பாக்கிகள் தீர்க்கும் நிலையில் மரண நிலை குறிக்கப்படுகிறது. ஆனால் அதே நிலையில் மனிதன் இருப்பதில்லை. இந்த ஜன்மத்திலும் கர்மங்கள் சேர்த்துக் கொள்வதும் கழித்துக் கொள்வதும் ஆக இருக்கும் பொழுது சமயங்களில் நல்காலங்களில் பொதுவாக நல்காலங்கள் செல்லும் நிலையில் அகால மரணம் அதாவது முன்னதாகவே மரணம் கொண்டுள்ளதை காண்கின்றோம். இக்கால கர்ம வினைகள் கணக்கிட இயலும் என்றால் அந்த மரணமும் நிர்ணயம் செய்திட இயலும்.

இதன் பொருள் என்னவென்றால் அதிகமான ஆண்டுகள் கடினங்கள் காண வேண்டும் என்ற நிலை இருந்த போதும் நல்கர்மாக்கள் அதாவது நல்வினைகள் செய்து கொண்டு இருக்க ஆயுள் நல்ல நிலையில் கடினமின்றி செல்லக்கூடும் என்பதே ஆகும். இதன் வழியாக மறு ஜன்மம் ஒன்று இருந்தால் அப்பிறவியின் பிறக்கும் கால ஜாதகம் ஆனது சிறப்பாகவே அமையக்கூடும்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #1

1-4-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆதித்தனின் சூடும் வெகுவாகக் கூடும் காலத்தில், நன்றென வியர்வை சிந்தும் காலமாக இருக்கும். இவ்விதம் வியர்க்கும் காலத்தில், ஜில்லென்று காற்று வேண்டும் என ஆர்வம் மனதில் தோன்றுகிறது. இத்தகைய ஆர்வம் இறைவனைக் காணவேண்டும் என்கின்ற எண்ணத்திலும் உயர, தானாக இறைவன் முன் வந்து நிற்பான் என்பது எமது கருத்தாகின்றது.

யாம் ஏதேனும் சுகத்தை எந்த அளவிற்கு விரும்புகின்றோமோ அந்த அளவிற்கு இறை நாட்டம் இருந்தால், இறைவன் வராது இருக்க இயலாது என்பது எமது கருத்தாம். சிவநாமம் எங்கும் பரவ வேண்டும் என்கின்ற கருத்து எமக்கு என்றும் உண்டு. இதற்குத் திருமந்திரம் ஒரு கருவியாக நிலைத்தால் ஆனந்தமே, இதை மக்கள் பின்பற்றி வந்தால் பேரானந்தமே, இதுவே எமது கருத்தாகும்.

“ஒன்று செய், அதை நன்று செய்” என்று சொன்னாற் போல், நமது எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி இறைவனைக் காணுதல் வேண்டும் என்ற எண்ணத்தைப் பெருக்குவீர்களாக. தானாக கோடைக் காலங்களில் தாகத்தை தீர்த்திட நீர் தேடுவது போல இறைவனை நாட, அவன் உங்கள் முன் காட்சி அளிப்பதோடு மட்டுமின்றி முழுமையாக அருள்புரிவான்.