திருமூலர் – வரலாறு

Thirumoolar 3

திருக்கயிலாயத்தில் திருமூலருடைய பெயர் சுத்த சதாசிவர். சுந்தர நாதர் என்ற பெயரும் இவருக்கு உள்ளது. திருமால் பிரம்மா இந்திரன் முதலிய தேவர்களுக்கு நெறி அருளும் அசையா சக்தியாக இருக்கும் இறைவனையே குருவாகப் பெற்றவர் இவர். இறைவனின் திருவருளால் அவரின் திருவடியில் இருந்த எட்டு யோகிகளுள் ஒருவராக இருந்தார். அவர்களது பெயர்கள் 1. சனகர் 2. சனந்தனர் 3. சனாதனர் 4. சனற்குமாரர் 5. சிவயோக மாமுனிவர் 6. பதஞ்சலி 7. வியாக்கிரமர் 8. திருமூலர் (பாடல் #67 இல் காண்க). இவர் அட்டமா சித்திகளை கைவரப் பெற்றவர் ஆவார். இவருக்கு 7 சீடர்கள் உள்ளார்கள். அவர்களது பெயர்கள் 1. மாலாங்கன் 2. இந்திரன் 3. சோமன் 4. பிரமன் 5. உருத்திரன் 6. காலாங்கி நாதன் 7. கஞ்ச மலையன் (பாடல் #69 இல் காண்க). எண்ணில் அடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் உடலுடன் இறைவனின் திருவடிக்குக் கீழே இரவு பகல் இல்லாத இடத்தில் (சூட்சும வெளி) அமர்ந்திருக்கிறார் (பாடல் #80 இல் காண்க). தம்முடைய அமிழ்தப் பாலால் 9 கோடி யுகங்கள் இறைவனுக்கு அர்ச்சனை செய்திருக்கிறார் (பாடல் #82 இல் காண்க). 70 கோடி 100 ஆயிரம் ஆகமங்கள் மொத்தம் உள்ளது (பாடல் #60 இல் காண்க). இந்த ஆகமங்களை 9 பகுதியாக பிரித்து இறைவன் இவருக்கு உபதேசித்தார் (பாடல் #62, #63 இல் காண்க). அப்போது இறைவனின் திருநடனத்தை கண்டு அந்த பேரின்பத்திலேயே 1 கோடி யுகங்கள் திளைத்திருந்தார் (பாடல் 74 இல் காண்க).

திருமூலர் தாம் 1 கோடி யுகங்கள் பேரின்பத்தில் எப்படி இருந்தேன் என்று பின்வருமாறு விளக்குகின்றார். இறைவனின் திருவடிகளை தொழுத போது இறைவனின் மீது காட்டிய பக்தியினால் இறைவனே தன்னோடு இருந்ததினால் 1 கோடி ஆண்டுகள் தன்னால் பேரின்பத்தில் இருக்க முடிந்தது என்று கூறுகின்றார் (பாடல் #75 இல் காண்க). 1 கோடி ஆண்டுகள் பேரின்பத்தில் இருந்த பின் இறைவனே திருமூலரை எழுப்பி நீ பெற்ற ஆகமங்களை உலகில் உள்ளோர் உய்வவதற்காக எடுத்துச் சொல் என்று உணர்த்தினார் (பாடல் #76 இல் காண்க). இதனை தமிழில் எடுத்துச் சொல் என்று கட்டளையிட்டார் (பாடல் #81 இல் காண்க). 1. இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகவும் 2. யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும் (பாடல் #85 இல் காண்க) 3. இந்த உலகம் உய்வதற்காக இறைவன் உலகத்தில் வைத்திருக்கும் ரூபங்களை பார்க்க எண்ணம் கொண்டும் 4. அகத்தியரை காணவுமே இந்த உலகத்திற்கு திருமூலர் வந்தார். இறைவன் இருக்கும் இடத்திற்கும் இந்த உலகத்திற்கும் நடுவில் சூட்சும வழி ஒன்று இருக்கிறது அதன் வழியாக இந்த உலகத்திற்குள் தனது உடலுடன் வந்தேன் என்று திருமூலர் சொல்கிறார் (பாடல் #83 இல் காண்க).

திருமூலர் பசுபதிநாத் திருக்கேதாரம் கங்கைக் கரை வழியாக தென்னாட்டில் இருக்கும் காளஹஸ்த்திக்கு வந்தார். அங்கிருந்து திருவாலங்காடு பின்பு காஞ்சிபுரம் ஏகாம்பர நாதரை தரிசித்து விட்டு அங்கிருந்த முனிவர்களோடு கலந்துரையாடினார். அங்கிருந்து திருவதிகை வந்து அங்கிருக்கும் இறைவனை தரிசனம் செய்கிறார். அங்கிருந்து திருப்புலியூரில் இறைவனின் ஆனந்த நடன தரிசனத்தை கண்டு சில நாட்கள் அங்கேயே தங்குகிறார். அங்கிருந்து காவிரி நதிக்கரைக்கு வந்தார். அங்கிருந்து திருவாவடுதுறை வந்து இறைவனை வணங்கி சிறிது நாட்கள் தங்குகிறார். பின்பு அகத்தியரை பார்க்க வேண்டும் என்று அகத்தியர் இருக்குமிடம் நோக்கி கிளம்புகிறார்.

திருமூலர் பொன்னி நதிக்கரை வழியாக சென்று கொண்டிருக்கும் போது ஆடு மற்றும் பசுக்களின் கதறல் சத்தம் கேட்கிறது. சத்தம் வந்த திசை நோக்கி சென்றார். மூலன் என்ற பெயர் கொண்ட இடையன் அப்போது தான் தனது வினை முடிந்த காரணத்தினால் இறந்து கிடக்கிறான். அவனது உடலை காண்கிறார். அவனது உடலை சுற்றி வருத்தத்துடன் நிற்கும் பசுக்களையும் ஆடுகளையும் காண்டார். பசுக்களும் ஆடுகளும் கண்ணீர் விட்டபடி அந்த உடலைச் சுற்றி சுற்றி வந்து அவனை நக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இடையன் எழுந்தால் தான் பசுக்கள் ஆடுகளின் வருத்தம் போகும் என்று எண்ணிய அவர் அதன் வருத்தத்தை போக்கும் வகையில் அட்டமா சித்தியில் ஒன்றான கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி தன் உடலை ஓர் இடத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து விட்டு மூலனின் உடலில் சென்றார். பசுக்கள் ஆனந்தமடைவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த சுத்த சதாசிவர் திருமூலர் என்னும் பெயரைப் பெற்று பசுக்களையும் ஆடுகளையும் மேய்த்து விட்டு மாலை ஆனதும் பசுக்கள் இருக்கும் ஊரான சாத்தனூருக்கு அனைத்து ஆடுகளையும் பசுக்களையும் அழைத்து செல்கிறார்.

திருமூலர் சாத்தனூர் வந்ததும் பசுக்களும் ஆடுகளும் தங்களது இல்லத்திற்கு தானாகவே சென்று சேர்ந்து விடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார். பசுக்களும் ஆடுகளும் ஊருக்குள் வந்து விட்டது இன்னும் தனது கணவர் வீட்டிற்கு வரவில்லையே என்று தன் கணவரைத் வெளியே வந்து தேடுகிறார். தன்னுடைய கணவர் வெளியிலேயே நின்று பசுக்கள் ஆடுகள் செல்வதை பார்த்துக் கொண்டே இருக்கிறார். இதனைக் கண்ட மூலனின் மனைவி வீட்டிற்குள் வாருங்கள் என்று திருமூலரின் கையை பிடித்து அழைக்க முயற்சித்தாள். அப்போது திருமூலர் நான் உனது கணவன் இல்லை. உனது கணவன் உடலில் இருக்கும் சிவயோகி நான். உனக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றார். திருமூலரின் வார்த்தைகளை கேட்ட மனைவி அவரது வார்த்தைக்கு கட்டப்பட்டார் போல் தனியாக தனது வீட்டிற்குள் வந்தாள். திருமூலர் அந்த ஊரில் இருக்கும் ஒரு மடத்தில் தங்கி விட்டார். மூலனின் மனைவிக்கு இரவு முழுவதும் தூங்காமல் வருந்தத்துடன் அழுதுகொண்டு இருந்தாள். காலை விடிந்ததும் ஊரில் உள்ள அந்தணர்களிடம் செய்தியை சொல்லி தன் கணவனை வீட்டிற்கு வரச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டாள். சாத்தனூர் இறைவனை அறிந்த அந்தணர்கள் அதிகமாக வாழும் ஊராக இருந்தது. அந்தணர்கள் பலர் ஒன்று சேர்ந்து மூலன் இருப்பிடத்திற்கு வந்து மூலனை வீட்டிற்கு ஏன் செல்ல மறுக்கிறாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் மூலன் இல்லை. மூலன் நேற்றே இறந்து விட்டான். அவனது உடலில் இருக்கும் சித்தயோகி நான். கூடு விட்டு கூடு பாய்ந்து இந்த உடலில் இருக்கிறேன். வருத்தத்துடன் இருந்த பசுக்கள் ஆடுகளுக்காக இந்த மூலனின் உடலுக்குள் வந்தேன். விரைவில் இந்த உடலையும் விட்டு எனது உடலுக்குள் சென்று விடுவேன் என்றார். இதனை அந்த ஊர் அந்தணர்கள் நம்ப மறுத்தார்கள். தன் சொல்லை மெய்ப்பிக்கிறேன் என்று கூறி அருகாமையில் பார்த்தார். அங்கு இறந்த ஒரு ஆடு இருந்தது. உடனே இந்த உடலை விட்டு ஆட்டின் உடலுக்கு சென்ற திருமூலர் மீண்டும் மூலனின் உடலுக்கு வந்தார். இதனைக் கண்ட அந்தணர்கள் வந்திருப்பவர் மூலன் இல்லை சித்த யோகி என்பதை உணர்ந்து மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி விட்டார்கள். பின்பு வந்திருப்பவர் சித்த யோகி என்பதை அறிந்து கொண்ட அந்தணர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டு தங்களின் சந்தேகங்களை நிவர்ந்தி செய்து கொண்டார்கள்.

திருமூலர் சாத்தனூரில் இருந்து கிளம்பி மீண்டும் பொன்னி நதிக்கரைக்கு வந்து தன் உடல் மறைத்து வைத்த இடத்திற்கு வந்து பார்த்தார். அங்கு தன் உடலைக் காணவில்லை. தன் உடலைத் தேடிய திருமூலர் தன் உடல் கிடைக்காததால் தன்னுடைய ஞான திருஷ்டியில் என்ன நடந்தது என்று பார்க்கிறார். இந்த உடலிலேயே இருந்து வேதங்களையும் ஆகமங்களையும் தமிழில் தொகுத்து அளிப்பதற்காக இறைவன் தன்னுடைய உடலை மறைத்து வைத்திருக்கிறார் என்று உணர்ந்து இறைவனின் எண்ணத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார்.

திருமூலர் இறைவனின் திருவடியில் தன் எண்ணத்தை வைத்து அங்கிருந்து கிளம்பி செருக்கை அழிக்கும் திருவாவடுதுறை இறைவன் இருக்கும் இடத்திற்கு வருகிறார். கோவிலில் இருக்கும் பரந்து விரிந்த படர் அரசு மரத்தின் கீழே இறைவனின் நாமத்தை ஓதிக்கொண்டே தியானத்தில் அமர்ந்தார் (பாடல் #79 இல் காண்க). வருடத்திற்கு ஒரு முறை விழித்து தான் தியானத்தில் உணர்ந்ததை பாடலாக எழுதினார். இப்பாடலுக்கு மந்திர மாலை என பெயரும் கொடுத்தார் (பாடல் #86 இல் காண்க). இது போல 3000 வருடங்கள் தியானம் இருந்து வருடத்திற்கு ஒரு பாடல் வீதம் 3000 பாடல்களை எழுதினார். இறைவனைப் பற்றியும் இறைவன் அருள் புரியும் விதத்தையும் உலகம் செயல்படும் விதத்தையும் இந்த உலகத்தில் உயிர்கள் இருக்கும் பிறவியை அறுத்து இறைவனிடம் எப்படி சேரலாம் என்பது பற்றியும் நான்கு வேதங்களில் உள்ளவற்றையும் தியானத்தில் உணர்ந்து அதனை தமிழில் பாடல்களாக எழுதினார். பல சூட்சுமமான செய்திகளை மறைமுகமாக தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் பல பாடல்களில் அருளியிருக்கிறார். இப்பாடல்களை மாலையாக கோர்த்து இறைவனுக்கு மாலையாக திருமூலர் சாற்றினார். இதற்கான குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு தாம் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சிதம்பரம் வந்தடைந்து தன் குருவான இறைவனுடன் கலந்து விட்டார்.

திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு. 5000). திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது 3000 வருடங்கள். அதன் பிறகு தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி. 637 முதல் 653) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான திருஞானசம்பந்தர் உதித்தார். அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில் திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம் இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றது என்ன என்று பாருங்கள் என்று கூறி மண்ணைத் தோண்டச் செய்தார். அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார். அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அருளிச் செய்தார். அவருக்கு பின்பு வந்த சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். அவருக்குப்பின் வந்த சேக்கிழார் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை முப்பத்து ஒன்றாவதாகச் சேர்த்து திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும் திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் திருமூலரின் வரலாற்றை அருளியிருக்கிறார். சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி ஒன்றாகத் தொகுத்த போது திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்.

திருமூலர் எழுதிய திருமந்திர மாலை பாடல்களை உலகத்தவர்களால் முதலில் தமிழ் மூவாயிரம் என்ற பெயரிலேயே அழைத்தார்கள். பிற்காலத்தில் வந்த சான்றோர்கள் திருமந்திரத்தில் நிரம்பியிருந்த மந்திரங்களும் தந்திரங்களும் மனித சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால் அதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்று மாற்றி வைத்தார்கள். திருமூலர் பரம்பொருளாகிய இறைவனைப் போற்றிப் பாடியருளிய திருமந்திரத்தில் பாயிரம் தலைப்பு தவிர்த்து ஒன்பது தந்திரங்கள் அமைந்துள்ளது. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர் பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர்கள் என்பது திருமூலரின் திருவாக்கு.

சர்வ மங்கள குருதேவா
சிவப்ப்ரியா மகாதேவா
ஞானரூபா அருள் தேவா
சத்குருவே நமோநமக

திருமூலர் திருவடிகளே சரணம்

14 thoughts on “திருமூலர் – வரலாறு

 1. சி.பார்வதி Reply

  நன்றி ஐயா. சைவ நெறி தலைத்தோங்கட்டும்

 2. M.viswanathan Reply

  திருமூலர் பற்றிய தகவல்கள் மிகவும் ஆழமான உண்மை நன்பரே நன்றி.

 3. BABITHA SUKUMAR Reply

  இதுவரை எமக்கு தெரியாத கருத்துக்களை தெறிந்துகொண்டேன். இது அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பொக்கிஷம்… நன்றி

 4. ரமேஷ் கணபதி Reply

  மிக அருமையான பதிவு நிகழ்காலத்தில் உள்ள இளைய சமுதாயத்தினரை இவை அனைத்தும் சென்றடையவேண்டும் சிவாய நமக

 5. ஜி.ராஜா Reply

  திருமூலர் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தியானத்தில் இருந்து கண் விழித்து பாடல் எழுதும் நாள் என்ன என்பதை அறிய வேண்டும்…9943661819 ராஜா. பரமத்திவேலூர்
  எங்கள் ஊரில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவக்கோலத்தில் அமர்ந்து இருக்கும் திருமூலர் ஆலயம் அமைந்துள்ளது

  • Saravanan Thirumoolar Post authorReply

   இந்த வலைதளத்தில் திருமூலர் தலைப்பில் உள்ள வரலாற்று வீடியோவை பார்த்தால் தங்களின் கேள்விக்கு பதில் கிடைக்கும். தங்கள் ஊரில் உள்ள திருமூலர் கோவிலைப் பற்றி குகுளில் தேடிப் பார்த்து தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி

   https://www.kvnthirumoolar.com/topics/thirumoolar/thirumoolar-history/

 6. PARTHASARATHI Reply

  கீழடிதமிழ் எழுத்துக்களே கிருக்கல்வடிவில் தான் கிடைக்கிறது திருமூலர் கிமு5000ல் இன்றைய தமிழில் எழுதினார் சம்மந்தர் கண்டெடுத்தார் என்பது ஏற்புடையதா?

  • Saravanan Thirumoolar Post authorReply

   திருமூலர் இன்றைய தமிழில் எழுதவில்லை. 51 எழுத்தக்கள் கொண்ட ஆதிகால தமிழ் எழுத்துக்களில் எழுதினார். இந்த 51 எழுத்துக்களை தெரிந்து கொள்ள பாடல் 1300 பார்க்கவும். திருஞானசம்மந்தர் கண்டேடுத்தது உண்மையே ஏற்புடையதே மேலும் தெரிந்து கொள்ள இந்த வலைதளத்தில் உள்ள திருமூலர் வரலாறு வீடியோவை பார்க்கவும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.