பாடல் #1646: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)
தமிழ்மண் டலமைந்துந் தவ்விய ஞான
முழவது போல வுலகர் திரிவ
ரவிழு மனமு மெமாதி யறிவுந்
தமிழ்மண் டலமைந்துந் தத்துவ மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தமிழமண டலமைநதுந தவவிய ஞான
முழவது பொல வுலகர திரிவ
ரவிழு மனமு மெமாதி யறிவுந
தமிழமண டலமைநதுந தததுவ மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தமிழ் மண்டலம் ஐந்தும் தவ்விய ஞானம்
உழவு அது போல உலகர் திரிவர்
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே.
பதப்பொருள்:
தமிழ் (ஆதி மொழியாகிய தமிழிலிருந்து உருவாகி இருக்கின்ற அனைத்து விதமான மொழிகளின் மூலமும்) மண்டலம் (உலகத்தில்) ஐந்தும் (ஐந்து விதமான பூதங்களால் ஆகிய அனைத்து பொருள்களின் மூலமும்) தவ்விய (அறிந்து கொள்ள வேண்டிய) ஞானம் (ஞானத்தை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று)
உழவு (நிலத்தை உழுது பண்படுத்தி பயிர்) அது (வளர்ப்பது) போல (போலவே) உலகர் (உலகத்தில் உள்ளவர்கள்) திரிவர் (அலைந்து திரிந்து முயற்சி செய்கிறார்கள்)
அவிழும் (ஆனால் உலகத்தில் உள்ள ஆசைகளும் பற்றுக்களும் வேண்டாம் என்று அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற) மனமும் (மனமானது) எம் (எமது) ஆதி (ஆதி முதல்வனாகிய இறைவனின்) அறிவும் (அறிவு வடிவத்தை பெற்று அவனது திருவருளால்)
தமிழ் (ஆதி மொழியாகிய தமிழிலிருந்து உருவாகி இருக்கின்ற அனைத்து விதமான மொழிகளின் மூலமும்) மண்டலம் (உலகத்தில்) ஐந்தும் (ஐந்து விதமான பூதங்களால் ஆகிய அனைத்து பொருள்களின் மூலமும்) தத்துவம் (அறியக் கூடிய அனைத்து விதமான ஞானத்தையும்) ஆமே (ஒருவருக்கு கொடுத்து விடும்).
விளக்கம்:
ஆதி மொழியாகிய தமிழிலிருந்து உருவாகி இருக்கின்ற அனைத்து விதமான மொழிகளின் மூலமும் உலகத்தில் ஐந்து விதமான பூதங்களால் ஆகிய அனைத்து பொருள்களின் மூலமும் அறிந்து கொள்ள வேண்டிய ஞானத்தை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நிலத்தை உழுது பண்படுத்தி பயிர் வளர்ப்பது போலவே உலகத்தில் உள்ளவர்கள் அலைந்து திரிந்து முயற்சி செய்கிறார்கள். ஆனால் உலகத்தில் உள்ள ஆசைகளும் பற்றுக்களும் வேண்டாம் என்று அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற மனமானது எமது ஆதி முதல்வனாகிய இறைவனின் அறிவு வடிவத்தை பெற்று அவனது திருவருளால் அனைத்து மொழிகளினாலும் உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களினாலும் அறியக் கூடிய அனைத்து விதமான ஞானத்தையும் ஒருவருக்கு கொடுத்து விடும்.
கருத்து:
அனைத்தையும் கற்றுத் தெரிந்து கொண்டாலும் அடைய முடியாத பேரறிவாகிய உண்மை ஞானத்தை ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டு விலகி இருக்கின்ற மனதினால் அவனது திருவருளைப் பெறுவதின் மூலம் பெற்று விடலாம்.