பாடல் #1708: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)
மேதாதி யாலே விடாதோமெனத் தூண்டி
யாதார சோதனை யத்துவ சோதனை
தாதார மாகவே தானெழச் சாதித்தா
லாதாரஞ் செய்ப்போக மாவது காயமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மெதாதி யாலெ விடாதொமெனத தூணடி
யாதார சொதனை யததுவ சொதனை
தாதார மாகவெ தானெழச சாதிததா
லாதாரஞ செயபபொக மாவது காயமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மேத ஆதியாலே விடாது ஓம் என தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாது ஆரம் ஆகவே தான் எழ சாதித்தால்
ஆதாரம் செய் போகம் ஆவது காயமே.
பதப்பொருள்:
மேத (உடலுக்குள் இருக்கின்ற மூலாக்கினி வேள்வியை) ஆதியாலே (ஆதியாக இருக்கின்ற இறைவனை) விடாது (இடைவிடாது எண்ணிக் கொண்டு) ஓம் (ஓங்கார) என (மந்திரத்தின் மூலம்) தூண்டி (தூண்டி எழுப்பி)
ஆதார (உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும்) சோதனை (தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும்) அத்துவ (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும்) சோதனை (தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும்)
தாது (உடலுக்குள் இருக்கின்ற சுக்கிலத்தை) ஆரம் (மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளம் வரை ஏற்றி இறக்கி மாலை) ஆகவே (போலவே) தான் (தானாகவே) எழ (எழுச்சி பெறும் படி) சாதித்தால் (சாதகம் செய்து சாதித்தால்)
ஆதாரம் (அதுவே இறைவனை அடைவதற்கு ஆதாரமாக) செய் (செயல்பட்டு) போகம் (இறைவனது பேரின்பத்தை அனுபவிக்க வைக்கும்) ஆவது (அழியாத பாத்திரமாக) காயமே (தமது உடலை மாற்றி விடும்).
விளக்கம்:
உடலுக்குள் இருக்கின்ற மூலாக்கினி வேள்வியை ஆதியாக இருக்கின்ற இறைவனை இடைவிடாது எண்ணிக் கொண்டு ஓங்கார மந்திரத்தின் மூலம் தூண்டி எழுப்பி, உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும், இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும், உடலுக்குள் இருக்கின்ற சுக்கிலத்தை மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளம் வரை ஏற்றி இறக்கி மாலை போலவே தானாகவே எழுச்சி பெறும் படி சாதகம் செய்து சாதித்தால், அதுவே இறைவனை அடைவதற்கு ஆதாரமாக செயல்பட்டு இறைவனது பேரின்பத்தை அனுபவிக்க வைக்கும் அழியாத பாத்திரமாக தமது உடலை மாற்றி விடும்.
இறைவனை அடைவதற்கான ஆறு வழிகள் (அத்துவாக்கள்):
- மந்திரம் = மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் இறைவனை அடைவது.
- பதம் = இறைவனது திருவடிகளை முழுவதுமாக சரணடைவதன் மூலம் இறைவனை அடைவது.
- வர்ணம் = தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை தர்மப் படி செய்து அதன் மூலமே இறைவனை அடைவது.
- புவனம் = உலகத்தில் இருக்கின்ற ஆலயங்கள், தீர்த்தங்கள் போன்றவற்றை யாத்திரை செய்வதன் மூலம் இறைவனை அடைவது.
- தத்துவம் = இறை தத்துவங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு ஞானத்தினால் இறைவனை அடைவது.
- கலை = பாடல் #713 இல் உள்ளபடி பதினாறு கலைகளில் மேன்மை பெற்று அவற்றின் மூலமே இறைவனை அடைவது.