பாடல் #411: இரண்டாம் தந்திரம் – 10. திதி (காத்தல்)
புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.
விளக்கம்:
உயிரின் உடலில் புகுந்து நிலையாய் நின்ற இறைவன் அவ்வுயிரின் அருள் அறிவு என்னும் வெளிச்சமாகவும் அறியாமை என்னும் இருளாகவும் அவ்வுயிருக்கு கிடைக்கும் புகழ்ச்சியாகவும் இகழ்ச்சியாகவும் அவ்வுயிரின் உடலாகவும் உயிராகவும் ஒன்றி அவ்வுயிரின் அறிவாகவும் நிரந்தரமாக கலந்து அவை வாழும் காலம் வரை அருளுகின்றான்.