பாடல் #1514: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)
இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புணர்ந் தாளே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இருடடறை மூலை யிருநத குமரி
குருடடுக கிழவனைக கூடல குறிததுக
குருடடினை நீககிக குணமபல காடடி
மருடடி யவனை மணமபுணரந தாளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இருட்டு அறை மூலை இருந்த குமரி
குருட்டு கிழவனை கூடல் குறித்து
குருட்டினை நீங்கி குணம் பல காட்டி
மருட்டி அவனை மணம் புணர்ந்தாளே.
பதப்பொருள்:
இருட்டு (இருளில் இருக்கின்ற / மாயை எனும் இருளில் இருக்கின்ற) அறை (அறைக்குள் / உடம்பிற்குள்) மூலை (ஒரு மூலையில் / மூலாதாரத்தில்) இருந்த (வீற்றிருக்கின்ற) குமரி (ஒரு இளம் கன்னியானவள் / அருள் சக்தியானவள்)
குருட்டு (கண் தெரியாத குருடனாகிய / மாயை மறைத்து இருப்பதால் உண்மை தெரியாமல் இருக்கின்ற) கிழவனை (கிழவனோடு / பல பிறவி எடுத்த ஆன்மாவோடு) கூடல் (ஒன்றாக சேருவது) குறித்து (எனும் குறிக்கோளுடன் / எனும் அருள் கருணையுடன்)
குருட்டினை (அவனது குருட்டை / அந்த ஆன்மாவின் மாயையை) நீங்கி (நீக்கி) குணம் (நல்ல அழகுகளை / நன்மையான உண்மைகளை) பல (பல விதங்களில்) காட்டி (காண்பித்து / உணர வைத்து)
மருட்டி (அவளுடைய அழகில் மயங்க வைத்து / பேரின்பத்தில் ஆன்மாவை மயங்க வைத்து) அவனை (அந்த கிழவனோடு / பல பிறவி எடுத்த ஆன்மாவோடு) மணம் (திருமணம் புரிந்து / கலந்து நின்று) புணர்ந்தாளே (எப்போதும் அவனோடு சேர்ந்தே இருந்தாளே / எப்போதும் ஆன்மாவோடு சேர்ந்தே இருந்தாளே).
உவமை விளக்கம்:
இருளில் இருக்கின்ற அறைக்குள் ஒரு மூலையில் வீற்றிருக்கின்ற ஒரு இளம் கன்னியானவள் கண் தெரியாத குருடனாகிய கிழவனோடு ஒன்றாக சேருவது எனும் குறிக்கோளுடன் அவனது குருட்டை நீக்கி நல்ல அழகுகளை பல விதங்களில் காண்பித்து அவளுடைய அழகில் மயங்க வைத்து அந்த கிழவனோடு திருமணம் புரிந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருந்தாளே.
கருத்து விளக்கம்:
மாயை எனும் இருளில் இருக்கின்ற உடம்பிற்குள் மூலாதாரத்தில் வீற்றிருக்கின்ற அருள் சக்தியானவள் மாயை மறைத்து இருப்பதால் உண்மை தெரியாமல் இருக்கின்ற பல பிறவி எடுத்த ஆன்மாவோடு ஒன்றாக சேருவது எனும் அருள் கருணையுடன் அந்த ஆன்மாவின் மாயையை நீக்கி நன்மையான உண்மைகளை பல விதங்களில் உணர வைத்து பேரின்பத்தில் ஆன்மாவை மயங்க வைத்து பல பிறவி எடுத்த ஆன்மாவோடு கலந்து நின்று எப்போதும் ஆன்மாவோடு சேர்ந்தே இருந்தாளே.