22-3-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
வானம் போல் தியானம் செய் என்று கூறுகின்றனர் அதன் பொருள் என்ன?
பொதுவாக மானிடன் வழிபடும் போது வானத்தை நோக்கி கை கூப்புகின்றான். இதற்குக் காரணம் என்ன என அறிதல் வேண்டும். மற்ற மதத்தோர் வானகத் தந்தை என்றும் அழைக்கின்றனர். இறைவன் வானத்திலிருந்து இறங்கி வருகின்றவனா என்றெல்லாம் குழப்பம் காண்பது நியாயமே. இதற்கு யோக நெறியில் விளக்கம் கண்டால் எளிதாகப் புரியும் என்று கூறுகின்றோம். மனித உடல் எனக் கண்டு கொண்டால் வானமானது சகஸ்ரரத்தின் மேலாகும். எப்பொழுது மனிதனின் எண்ணங்கள் அச்சகஸ்ரர நிலையை எட்டுகின்றதோ அன்று அவன் இறைவனை அடைந்தான் எனக் கூற இயலும். இத்தகைய நிலையில் வானத்தில் இறைவன் இருக்கின்றான் என்றும் அவ்வானத்தை நோக்கி மக்கள் வழிபடுகின்றனர் என்றும் எடுத்துரைத்தோம். இதற்கு மற்றொரு காரணம் உண்டாம் ஆதி காலங்களில் வெளிச்சம் தரும் சூரியனே தெய்வம் என்று மக்கள் எண்ணிட மேல் நோக்கியே வணங்கினர். இச்சம்பிரதாயமானது இக்காலத்தில் தொடங்கியது என்றும் கூறுகின்றோமே. இன்று யாம் இதை மட்டும் கூறுவோம். இருப்பினும்ம் இங்கு கூடியுள்ளோர் இதற்கு மேலான விளக்கங்களை சிந்தித்தல் வேண்டும் என்றென ஆர்வமாக இருக்கின்றோம்.